Last Updated : 02 Apr, 2019 10:20 AM

 

Published : 02 Apr 2019 10:20 AM
Last Updated : 02 Apr 2019 10:20 AM

மோகன் குமாரமங்கலம்: லண்டனில் பிறந்த தமிழகத் தலைவர்

முற்போக்குச் சிந்தனையாளர்; அரசியல் பாரம்பரியம் மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்; தமிழ்நாட்டின் அரசுத் தலைமை வழக்கறிஞராக இருந்தவர்; இந்திரா காந்தி அமைச்சரவையில் உருக்கு, சுரங்கத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர் என பல சிறப்புகளைக் கொண்டவர் - மோகன் குமாரமங்கலம். சேலம் மாவட்டம் குமாரமங்கலத்தின் ஜமீன்தாரும் அன்றைய சென்னை மாகாண முதல்வருமான ப.சுப்பராயன் - ராதாபாய் இணையரின் மகனாக லண்டனில் பிறந்தவர் மோகன் குமாரமங்கலம். முழுப் பெயர் சுரேந்திர மோகன் குமாரமங்கலம்.

தரைப் படைத் தலைமை தளபதியாகப் பணியாற்றிய பி.பி. குமாரமங்கலம், கோபால் குமாரமங்கலம் ஆகியோர் இவரது அண்ணன்கள். பார்வதி கிருஷ்ணன் தங்கை. மோகன் குமாரமங்கலம், லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். சட்ட வல்லுநர். கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்ட அவர், 1939-ல் இந்தியா திரும்பியதும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். 1941-ல் தேச விரோத துண்டறிக்கைகளை விநியோகித்ததாக பி. ராமமூர்த்தி, சி.எஸ். சுப்ரமணியம், ஆர். உமாநாத் ஆகியோருடன் ‘மதறாஸ் சதி’ வழக்கில் கைது செய்யப்பட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு விவசாயிகள் கிளர்ச்சி, சென்னை மாகாணத்தில் தீவிரம் அடைந்தது. பிற கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் மோகனும் கைதானார்.

பிறகு காங்கிரஸில் சேர்ந்தார். காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்திக்கு ஆதரவாகச் செயல்பட்டார். 1971 மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கனிம வளங்களை அரசுடமையாக்குவதில் முக்கியப் பங்காற்றியது, உருக்குத் தொழில் வளர்ச்சிக்கு உதவியது என அவரது சாதனைப் பட்டியல் நீளமானது. 1973 மே 30-ல் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். இவரது மகன் ரங்கராஜன் குமாரமங்கலம் பின்னாளில் நரசிம்மராவ், வாஜ்பாய் அரசுகளில் அமைச்சராகப் பதவி வகித்தவர். மகள் லலிதா குமாரமங்கலம் பாஜக-வில் இருக்கிறார். தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் அவர். ரங்கராஜன் குமாரமங்கலத்தின் மகனுக்கும் ‘மோகன் குமாரமங்கலம்’ என்றே பெயர். அவர் இப்போது காங்கிரஸில் இருக்கிறார்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x