Published : 11 Apr 2019 09:32 AM
Last Updated : 11 Apr 2019 09:32 AM
பகுஜன் சமாஜ் கட்சியை 14.4.1984-ல் தொடங்கினார் கான்சிராம் . இதன் இப்போதைய தலைவர் மாயாவதி. இக்கட்சியின் தேர்தல் சின்னம் யானை. நாட்டின் மக்கள்தொகையில் 85% பேர் ‘பகுஜன்கள்’. பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மதச் சிறுபான்மையோர் என்று அனைவரையும் உள்ளடக்கி பகுஜன்கள் என்று அழைத்தார் கான்சிராம். இவர்கள் அனைவரும் சமூக, பொருளாதாரரீதியாக அழுத்தப்பட்டு துயரப்படுவதால் அவர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைப்பதற்காக இக்கட்சியைத் தொடங்குவதாக அறிவித்தார். கவுதம புத்தர், அம்பேத்கர், ஜோதிபாய் புலே, நாராயண குரு, பெரியார், ஷாஹுஜி மகராஜ் ஆகியோரை இக்கட்சி தனது முன்னோடிகளாகக் கருதுகிறது.
சமூக மாற்றமும் பொருளாதார விடுதலையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முக்கியக் குறிக்கோள்கள். நலிந்தோருக்கு முக்கியத்துவம் தந்து கைதூக்கிவிடும் செயல்பாடு, மனித உரிமைகளுக்கு மதிப்பளித்துச் செயல்படுதல், சமூக சமத்துவம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சுயமரியாதை ஆகியவை இக்கட்சியின் சித்தாந்தங்களாகும். அரசியல் சித்தாந்தப்படி இக்கட்சி இடதுசாரி சார்புள்ள மையவாதக் கட்சியாகும்.
உத்தர பிரதேசத்தில் நான்கு தடவை முதல்வராகப் பதவிவகித்திருக்கிறார் மாயாவதி. 2007-ல் பகுஜன் சமாஜ் கட்சிக்குத் தனிப் பெரும்பான்மை கிடைத்தபோது
அவர் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவிவகித்தார். அவருடைய ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது. மேல் சாதியினருக்கும் பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட வாய்ப்பளித்து கட்சியைப் பலப்படுத்தினார் மாயாவதி. இப்போதும் அந்த உத்தி தொடர்கிறது. கடந்த 2014 மக்களவைப் பொதுத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில்கூட வெற்றிபெறாவிட்டாலும் அதிக வாக்குகளைப் பெற்ற தேசியக் கட்சி வரிசையில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது. நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலை உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதியுடன் கூட்டணி அமைத்து சந்திக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT