Published : 09 Apr 2019 09:04 AM
Last Updated : 09 Apr 2019 09:04 AM
நான்கு முறை மக்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் மத்திய திட்டக் குழு துணைத்தலைவராகவும் பதவி வகித்தவர் அசோக் மேத்தா (1911-1984). குஜராத்தி எழுத்தாளர் ரஞ்சித்ராம் மேத்தாவின் மகன். இந்திய விடுதலைப் போராட்டத்திலும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகித்தவர். பம்பாய் பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே சுதேசி இயக்கத்தில் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டதற்காக 1932-லும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றதற்காக 1942-லும் கைதுசெய்யப்பட்டு சிறைத்தண்டனையை அனுபவித்தவர். 1946-47-ல் பம்பாய் மேயராகப் பதவி வகித்தார். பம்பாயில் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தை நிறுவியவர்களில் அவரும் ஒருவர்.
சோஷலிஸ்ட் கட்சி 1952-ல், கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியுடன் இணைந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியானது. ராம் மனோகர் லோகியாவும் அசோக் மேத்தாவும் இதில் முக்கியப் பங்கு வகித்தனர். புதிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆனார் மேத்தா. 1959 முதல் 1963 வரையில் அக்கட்சியின் தலைவராகத் திகழ்ந்தார். ‘பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வுக்கான தேசிய பேரவை’ (என்சிஏஇஆர்) என்ற உயர் ஆய்வு மையத்தை டெல்லியில் நிறுவினார். பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதற்காக இந்தியாவில் உருவான முதல் சுதந்திர அமைப்பு அது.
1954-57, 1957-1962, 1967-1971 ஆகிய ஆண்டுகளில் மக்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார் அசோக் மேத்தா. 1963-ல் மத்திய திட்டக் குழுவின் துணைத் தலைவராகவும் 1964-ல் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்டபோது ஸ்தாபன காங்கிரஸில் தங்கிவிட்டார். நெருக்கடி நிலையின்போது 1975 ஜூன் 26-ல் கைது செய்யப்பட்டு ஹரியாணாவின் ரோடக் சிறையில் அடைக்கப்பட்டார்.
பஞ்சாயத்து ராஜ் குறித்து ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைக்க 1977-ல் ஜனதா அரசு, அசோக் மேத்தா தலைமையில் கமிட்டி அமைத்தது. உள்ளாட்சி மன்றங்களுக்கு அதிக அதிகாரமும் பொறுப்பும் அளிக்க வேண்டும் என்ற அவருடைய பரிந்துரைகள் பஞ்சாயத்து ராஜ் அமைப்புக்கு வலுசேர்ப்பவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT