Last Updated : 06 Apr, 2019 07:58 AM

 

Published : 06 Apr 2019 07:58 AM
Last Updated : 06 Apr 2019 07:58 AM

இதுதான் இந்தத் தொகுதி: சேலம்

சங்க காலத்தில் அதியமானின் ஆட்சிப் பகுதியாக இருந்த சேலம் பின்னர் சேரர்கள், நாயக்கர்கள், ஹைதர் அலி ஆகியோரின் கட்டுப்பாட்டில் அடுத்தடுத்து வந்தது. 1799-ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் முக்கிய நிர்வாகப் பகுதியாக மாறியது. ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு, ஆங்கிலேயர்களால் கோடை வாழிடமாக அடையாளப்படுத்தப்பட்டது. சேலம் மக்களவைத் தொகுதியில் சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, வீரபாண்டி, எடப்பாடி, ஓமலூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.

பொருளாதாரத்தின் திசை: தமிழகத்தின் மிகப் பெரிய நீர்த்தேக்கமான மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் உள்ளது. ஆனால், அணை மிகத் தாழ்வான பகுதியில் உள்ளதால், அணை நீரில் 10% கூட, சேலம் மாவட்டத்துக்குப் பயன்படுவதில்லை. எனினும், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக மேட்டூர் காவிரி நீர் கிடைத்துவருகிறது. ஏரிப் பாசனத்தை நம்பியிருந்தாலும் மாவட்டத்தில் நெல், கரும்பு, வாழை, மஞ்சள், சிறு தானியங்கள் உள்ளிட்டவை பரவலாகப் பயிரிடப்படுகிறது. மரவள்ளிப் கிழங்கும் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. வேளாண்மைக்கு அடுத்தபடியாக, ஜவுளி உற்பத்தி, வெண்பட்டு வேட்டி உற்பத்தி, வெள்ளிக் கொலுசு உற்பத்தி, மரவள்ளிக் கிழங்கிலிருந்து சேகோ உற்பத்தி ஆகியவை பிரதானத் தொழிலாக இருக்கின்றன.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: பாசன நீர்ப் பற்றாக்குறை நீண்ட காலப் பிரச்சினை. பசுமைவழிச் சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்படுவது, சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்தப்படுவது, விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைப்பது ஆகியவை தேர்தலின் முக்கியப் பிரச்சினையாக எதிரொலிக்கும். சேலம் மாநகரில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதாளச் சாக்கடைப் பணிகள் இன்னமும் முடிவடையாதது, ரயில்வே மேம்பாலப் பணிகள் பல ஆண்டுகளாக நீடிப்பது ஆகியவை பிரச்சினைகளாக இருக்கின்றன.

நீண்ட காலக் கோரிக்கைகள்: தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில்தான் ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உற்பத்தி அதிகம். ஆனால், இத்தொழில் நவீனத் தொழில்நுட்பத்துக்கு மாறாமல் பழமையான பாரம்பரிய முறைகளிலேயே இயங்கிவருகிறது. மத்திய, மாநில அரசுகள் இத்தொழிலை நவீனமயப்படுத்த வேண்டும்; மேட்டூர் உபரி நீரை சரபங்கா மற்றும் வசிஷ்ட நதியுடன் இணைத்து, வறட்சியைப் போக்க வேண்டும்; சேலம் ரயில்வே கோட்டத்தின் தலைமை அலுவலகம் சேலத்தில் இருந்தும்கூட, சேலத்திலிருந்து சென்னைக்குப் பகல் நேரத்தில் விரைவு ரயில் இயக்கப்படவில்லை என்பதும், சேலம் - சென்னை எழும்பூர் விரைவு ரயிலைத் தவிர, வேறு எந்த ரயிலும் சேலத்தில் இயக்கப்படாதது, தொகுதி மக்களிடம் அதிருப்தியாக உள்ளது.

ஒரு சுவாரஸ்யம்: 1952-ம் ஆண்டு தேர்தலில் தொடங்கி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வரை காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே அதிகமுறை சேலத்தில் வெற்றிபெற்றுள்ளனர். கொங்கு வேளாளர், வன்னியர், உடையார் என வெவ்வேறு சமூகத்தினரும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: வன்னியர் சமுதாயத்தினர் வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகத்தினராக உள்ளனர். இவர்களுடன் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூகத்தினர், முதலியார் சமுதாயத்தினர்,  பட்டியலினச் சமூகத்தினரும் கணிசமான அளவில் உள்ளனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: சேலம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 6 முறை, தமிழ் மாநில காங்கிரஸ், திவாரி காங்கிரஸ்  என காங்கிரஸ் சார்ந்த கட்சி வேட்பாளர்கள் 8 முறை வெற்றிபெற்றுள்ளனர். அதிமுக 4 முறை, திமுக 3 முறை வெற்றி பெற்றுள்ளது. வேட்பாளர்களில் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.வி.ராமசாமி, ரங்கராஜன் குமாரமங்கலம் ஆகியோர் தொடர்ச்சியாக 3 முறை வெற்றிபெற்றவர்கள். இந்த முறை சேலம் மக்களவைத் தொகுதி, அதிமுகவும், திமுகவும் நேரடியாக மோதும் களமாக உள்ளது. முதல்வர் பழனிசாமியின் எடப்பாடி தொகுதியும் அவரது சொந்த மாவட்டமாகவும் இருப்பதால் சேலம் முக்கியத் தொகுதியாகக் கவனிக்கப்படுகிறது.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 15,92,487

ஆண்கள் 8,00,320

பெண்கள் 7,92,090

மூன்றாம் பாலினத்தவர்கள் 77

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 73.86%

ஆண்கள் 80.24%

பெண்கள் 65.15%

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x