Last Updated : 03 Apr, 2019 02:20 PM

 

Published : 03 Apr 2019 02:20 PM
Last Updated : 03 Apr 2019 02:20 PM

உணர்வுகள்தான் பிரம்மாண்டமானவை!- இயக்குநர் மகேந்திரன் பேட்டி

ஓராண்டுக்கு முன் ‘இந்து தமிழ்’ நாளிதழுக்காக நீண்ட பேட்டி அளித்தார் இயக்குநர் மகேந்திரன். அதில் வெளியாகாத பகுதியிலிருந்து...

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான திருப்புமுனைகளில் ஒருவராக நீங்கள் கருதப்படுகிறீர்கள். இருந்தும் திரைப்படங்களில் நீங்கள் தொடர்ச்சியாகச் செயல்படவில்லையே?

தமிழ் சினிமா மீது ஈடுபாடே இல்லாமல் இருந்தவன் நான். அதிலும் சிறு வயதிலிருந்தே தமிழ் சினிமா மீது கடுமையான விமர்சனங்களைக் கொண்டிருந்தவன். காலம்தான் என்னை இங்கு கொண்டுவந்து தள்ளியது. ஒரு படம் வெளியானதும் அது ஓடுகிறதா, இல்லையா; அதற்கு எப்படி விமர்சனங்கள் வருகின்றன என்று எதையும் பற்றிக் கவலைப்பட்டதில்லை. என் படங்களைப் பத்திரிகைகளில் பாராட்டி எழுதியிருக்கிறார்கள் என்றுகூட சொல்வார்கள். அவற்றையும் பெரும்பாலும் படிப்பதில்லை. ஒரு ஹோட் டலைத் தொடங்கி அதற்குப் பிறகு அதற்குப் பல கிளைகளைத் திறக்கும் வணிக சாம்ராஜ்யத்தைப் போல திரைப்படத் துறையை மாற்றிக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.

ரஜினியுடன் பணியாற்றியிருக்கிறீர்கள், கமலுடன் ஏன் பணியாற்றவில்லை?

என் முதல் படத்தில் நடித்த ரஜினி எனக்கு நல்ல நண்பர்தான். நான் நினைத்திருந்தால் எனது இரண்டாவது படத்திலும் அவரையே போட்டு தொடர்ச்சியாக ஹிட் கொடுக்க என்னால் முடிந்திருக்கும். கமலோடும் எனக்கு நல்ல நட்பிருந்தது. அவர் எனக்கு உதவியிருந்தார். ஏராளமான தயாரிப்பாளர்கள் வந்தார்கள். அவர்கள் யாருக்கும் நான் சம்மதம் தெரிவிக்கவில்லை. புதியவர்களை வைத்துத்தான் ‘உதிரிப்பூக்கள்’ படம் எடுத்தேன். அப்படி எடுக்கும்போதுகூட அது ஓடுமா, ஓடாதா, மக்கள் ஏற்றுக்கொள்வார்களா மாட்டார் களா என்பதைப் பற்றியெல்லாம் நான் கவலைப்படவில்லை. எத்தனையோ தயாரிப்பாளர்களை நான் நிராகரித்துவிட, ஒரு தயாரிப்பாளர் உதவி கேட்டு வந்தார். சரி, அவருக்கு உதவி செய்யலாமே என்று ஆரம்பித்ததுதான் ‘உதிரிப்பூக்கள்’.

 உங்களை அதிகம் கவர்ந்த படம் எது?

நான் அடிக்கடி பார்க்கும் படம் ‘தி வே ஹோம்’ என்கிற கொரிய மொழிப் படம். எவ்வளவோ உலகத் திரைப்படங்களை நான் பார்த்திருந்தாலும் அதுபோன்ற ஒரு படத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. வாய் பேச முடியாத ஒரு கிராமத்துப் பாட்டிக்கும், நகரத்தில் பிறந்த அவளது பேரனுக்குமான உறவைப் பற்றிய படம் அது. படம் முழுவதும் பெரும்பாலும் அமைதியாகத்தான் நகரும். ஆகவே, வசனங்கள் மிகவும் குறைவாகத்தான் இருக்கும். காட்சிகள் மூலமாகத்தான் படம் நகரும். ஆழ்மன உணர்வுகள், காட்சிமொழியின் ஆழம், உணர்வுகள், மனித வாழ்க்கையின் யதார்த்தம் போன்றவற்றை அதில் காட்டியதுபோல் வேறு எந்தப் படத்திலும் நான் பார்த்ததில்லை.

உங்களுடைய படங்களில் ‘எ ஃபிலிம் பை மகேந்திரன்’ என்று போடுவதில்லை. அதற்கு ஏதும் காரணம் உண்டா?

ஒரு படம் நன்றாகப் போகவில்லை என்றால் தப்பான தயாரிப்பாளரை, தப்பான கலைஞர்களை, தப்பான கதையை நான் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று அர்த்தம். ஆக, எல்லாமே என் தவறுகள். ஆனால், ஒரு படம் நன்றாகப் போனால் அதற்குக் காரணம் அந்தப் படத்தில் பங்குபெற்ற எல்லோரும்தான். அதனால்தான் என் படங்களில் ‘எ ஃபில்ம் பை மகேந்திரன்’ என்று நான் போடுவதில்லை.

ஒரு இயக்குநருக்கு எது முக்கியமான கல்வி என்று சொல்வீர்கள்?

நம்மைச் சுற்றி நிகழ்வதையெல்லாம் நாம் உள்வாங்கிக்கொண்டே இருக்க வேண்டும். இதெல்லாம் ஏதோ சினிமாவுக்கு வந்த பிறகு நான் உள்வாங்க ஆரம்பித்ததில்லை. சிறுவயதிலிருந்தே உள்வாங்கிய விஷயங்கள்! தி.ஜானகிராமன், லா.ச.ரா கதைகளையெல்லாம் படித்தபோது, தங்களைச் சுற்றியுள்ள மனிதர்களை அவர்கள் உள்வாங்கியிருக்கும் விதத்தைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கும். அடடா, அவர் எழுதியிருக்கும் பாத்திரம் போன்றே பக்கத்துத் தெருவிலும் ஒருத்தர் இருக்கிறாரே, நம் வீட்டு எதிரேயும் ஒருத்தர் இருக்கிறாரே என்றெல்லாம் தோன்றும். இதெல்லாம் நமக்குள் ஊறிப்போய் எல்லாவற்றையும் உற்றுநோக்கும் ஒரு சுபாவம் நமக்கும் வந்துவிடும்.

அன்பையும் உணர்வுகளையும் பிரம்மாண்டமாக எடுங்கள் என்று சொன்னீர்களல்லவா?

என்னைப் பொறுத்தவரை உணர்வுகள்தான் பிரம்மாண்ட மானவை. அதற்கு முன்பு பட்ஜெட் பிரம்மாண்டம் ஒன்றும் செய்ய முடியாது. பட்ஜெட்டில் நீங்கள் பிரம்மாண்டமாகப் படம் எடுத்தாலும் அங்கேயும் சென்டிமெண்ட் இருந்தால்தான் அது ஓடும்.

உங்கள் படங்களில் பெரும்பாலும் ஒருசில நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களே திரும்பத் திரும்ப இடம் பெற்றதற்கு என்ன காரணம்?

சொன்னால் ஆச்சரியப்பட்டுப்போவீர்கள். எனக்கு அதிகப்பேரை அப்போது தெரியாது. நான் படம் எடுத்துக்கொண்டி ருந்தபோது வந்த படங்களில் ஒன்றிரண்டைத்தான் பார்த்திருப் பேன். எவ்வளவோ பெரிய கலைஞர்கள், நகைச்சுவை நடிகர்களெல்லாம் அப்போது வந்திருக்கிறார்கள் என்பது இப்போதுதான் தெரிகிறது.

வன்முறையை இன்றைய திரைப்படங்கள் அதிக அளவில் சித்தரிக்கின்றனவா?

வன்முறையைப் பெரிய வீரதீரச் செயலாக நினைக்கிறார்கள். அதைக் கொண்டாடவும் செய்கிறார்கள். இதைப் பற்றிக் கேட்டால் ‘நம் ஊர் எல்லை சாமிகளும் அரிவாள், ஆயுதங்கள் வைத்திருக்கிறார்கள். நாங்கள் வீரத்துக்குப் பேர்போன பரம்பரை. சாமிகள் எல்லோரும் ஆயுதங்கள் வைத்திருக்கும்போது நாங்கள் வன்முறையைப் படம் எடுத்தால் என்ன தப்பு’ என்றெல்லாமும் சொல்வார்கள். பாடல்களுக்கும் இப்படித்தான். ‘உலகத்திலேயே மிகவும் கொடுமையான விஷயம் ஒவ்வொருத்தரும் தங்கள் செயலுக்கு ஒரு நியாயம் கற்பிப்பதுதான்’ என்று ஒரு அறிஞர் சொன்னதுதான் இங்கே எனக்கு நினைவுக்கு வருகிறது. வன்முறை, பாடல்கள் போன்றவற்றிலிருந்து தமிழ் சினிமா விடுபட வேண்டும்.

நீங்கள், இளையராஜா, அசோக்குமார் எல்லாம் சேர்ந்து எங்களுக்கு நிறைய கவிதைகளைக் கொடுத்திருக்கிறீர்கள்…

அதனால்தான் நான் சொல்வேன். திரைப்படம் என்பது கூட்டு முயற்சி. சில நேரங்களில் நமக்கு அமையும் சேர்க்கை காரணமாகப் பிரமாதமாக அமைந்துவிடும். இன்னொரு பக்கம் ஈகோ வந்து பிரிந்தால் அவ்வளவுதான் முடிந்துவிடும். ஆனால் நான், ராஜா, அசோக்குமார் எல்லாம் ஈகோ இல்லாமல் ஒன்றாகப் பணிபுரிந்தவர்கள். அதனால்தான், அசோக்குமாரின் மறைவு என்னை மிகவும் துயரத்துக்குள்ளாக்கியது. இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது சில சமயங்களில் ‘வாழ்க்கையின் அர்த்தமே என்ன?’ என்று கேள்வி எழுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x