Published : 14 Apr 2019 09:30 AM
Last Updated : 14 Apr 2019 09:30 AM

இதுதான் இந்த தொகுதி: தருமபுரி

சங்க காலத்தில் ‘தகடூர்’ என்ற பெயரில் அழைக்கப்பட்ட தருமபுரியை அதியமான் ஆண்டுள்ளார். பின்னர், சேரர், நுளம்பர், சோழர், ஹொய்சாளர், விஜயநகர மன்னர்கள் அடுத்தடுத்து ஆண்டுள்ளனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரி நிர்வகிக்கப்பட்டது. 1965-ம் ஆண்டுதான் சேலத்திலிருந்து தனி மாவட்டமாக தருமபுரி பிரிந்தது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு, பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி) ஆகிய சட்டமன்றத் தொகுதிகளும், சேலம் மாவட்ட சட்டமன்றத் தொகுதியான மேட்டூரும் உள்ளடங்கியது தருமபுரி மக்களவைத் தொகுதி.

பொருளாதாரத்தின் திசை: பிரதான தொழில் விவசாயம். நெல், கரும்பு, வாழை, மா, நிலக்கடலை, மரவள்ளி, சிறுதானியங்கள், பயறு வகைகள் என பலவிதமான பயிர்கள் சாகுபடியாகின்றன. மலர்ச் சாகுபடி, பட்டுக் கூடு வளர்ப்பும் முக்கியமான தொழில்கள்.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: தண்ணீர்ப் பற்றாக்குறையே  தருமபுரி தொகுதி விவசாயிகள் முன்னால் நிற்கும் மிகப் பெரிய சவால். ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தின் மூலம் குறிப்பிட்ட சதவீத மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இந்தச் சுற்றுலாத் தலத்தை மேலும் மேம்படுத்தி பொருளாதார மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

நீண்ட காலக் கோரிக்கைகள்: தர்மபுரி மாவட்டத்தில் சிறியதும், பெரியதுமாக 8 அணைக்கட்டுகள் உள்ளன. ஆனாலும், கோடைக்கு முன்பாகவே பெரும்பகுதி வறண்டுவிடுகின்றன.  நீர்ப்பாசனத் திட்டங்களை உருவாக்கி, காவிரி உபரிநீரை நீர்நிலைகளுக்கு நிரப்பித் தர வேண்டும். உள்ளூரில் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் சிப்காட் அமைக்க வேண்டும்.

ஒரு சுவாரஸ்யம்: வெளியூர் வேட்பாளர்கள் வெற்றிபெறும் தொகுதியாக உள்ளது தர்மபுரி. காங்கிரஸ் சார்பில் 1977-ல் வெற்றிபெற்ற வாழப்பாடி ராமமூர்த்தி, 1991-ல் வெற்றிபெற்ற கே.வி.தங்கபாலு, திமுக சார்பில் 1980-ல் வெற்றிபெற்ற அர்ஜுனன், பாமக சார்பில் 1999-ல் வெற்றிபெற்ற பு.தா.இளங்கோவன் மற்றும் 2014-ல் வெற்றிபெற்ற அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வெளியூர் வேட்பாளர்கள்.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: சுமார் 6 லட்சம் வன்னியர்களும், 2.50 லட்சம் பட்டியல் இனத்தவரும், 1.75 லட்சம் கொங்கு வேளாளர்களும் வாக்காளர்களாக உள்ளனர். வன்னியர் சமூக வாக்காளர்கள் அதிக அளவில் இருந்தபோதும், பட்டியல் இனத்தவர்கள், கொங்குவேளாளர், முதலியார், செட்டியார், ரெட்டியார், நாயுடு உள்ளிட்ட இதர சமூக வாக்காளர்களைக் கவரும் வேட்பாளரே வெற்றிபெற முடியும் என்ற நிலை உள்ளது.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்:  1977-க்கு முன்பு வரை மேட்டூர் மக்களவை தொகுதியில் தருமபுரி மாவட்ட சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. 1977-ல் தருமபுரி மக்களவைத் தொகுதியில் வாழப்பாடி ராமமூர்த்தி வெற்றிபெற்றார். அதைத் தொடர்ந்து காங்கிரஸ் 2 முறையும், திமுக 2 முறையும், அதிமுக 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன. தமிழ் மாநில காங்கிரஸ் 1 முறை வெற்றி பெற்றது. இதுதவிர, பாமக 4 முறை வெற்றிபெற்றுள்ளது.

களம் காணும் வேட்பாளர்கள்:

செந்தில்குமார் – திமுக

அன்புமணி – பாமக

ராஜசேகர் – மக்கள் நீதி மய்யம்

பழனியப்பன் – அமமுக

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 14,67,904

ஆண்கள் 7,47,625

பெண்கள் 7,20,159

மூன்றாம் பாலினத்தவர்கள் 120

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 73 %

ஆண்கள் 81 %

பெண்கள் 69 %

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x