Published : 02 Apr 2019 10:14 AM
Last Updated : 02 Apr 2019 10:14 AM
வாக்குச்சீட்டு காலத்தில் சின்னத்தைப் பார்த்து முத்திரை இட்டு, அதைச் சரியாக மடித்து, ஓட்டுப் பெட்டிக்குள் போடுவதற்குள் சிலருக்குப் போதும் போதும் என்றாகிவிடும். வாக்குச் சீட்டுக்கே இந்த நிலை என்றால், வாக்குச்சீட்டு புத்தக வடிவில் இருந்தால், வாக்காளர்கள் நிலை எப்படி இருக்கும்? இப்படியான ஒரு விநோதத் தேர்தலை 1996-ல் ஆந்திரத்தின் நளகொண்டா (தற்போது தெலங்கானாவில் இருக்கிறது) தொகுதி வாக்களார்கள் எதிர்கொண்டார்கள்.
அந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் நளகொண்டா தொகுதியில் 480 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். அந்தக் காலகட்டத்தில்
கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவியதால் பொதுமக்களும் விவசாயிகளும் பாதிப்புக்கு உள்ளாயினர். பாதிப்பை அரசுகளுக்கு உணர்த்தும் வகையில், ‘ஜல சாதனா சமிதி’ என்ற அமைப்பின் வழிகாட்டுதலின்படி, நூற்றுக்கணக்கானவர்கள் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
66 பெண்கள் உட்பட 537 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். 35 பேருடைய வேட்பு மனு தள்ளுபடிசெய்யப்பட்டது. 22 பேர் வேட்பு மனுவைத் திரும்பப் பெற்றுக்கொண்டார்கள். இறுதியில் 480 பேர் களத்தில் நின்றார்கள். இத்தனைப் பேர் போட்டியிட்டதால் வாக்குச்சீட்டுக்குப் பதிலாக வாக்குப்புத்தகத்தையே தயாரிக்க வேண்டியிருந்தது. ஒரு ஆளே அமர்ந்துகொள்ளும் அளவுக்கு வாக்குப் பெட்டிகள் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டன. நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றிலேயே அதிக அளவில் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதி என்ற பெயர் நளகொண்டாவுக்கு உண்டு. இதேபோல அதே ஆண்டில் கர்நாடக மாநிலம் பெல்காம் தொகுதியிலும் 456 பேர் போட்டியிட்டு தேர்தல் ஆணையத்துக்குப் பீதியை உண்டாக்கினார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT