Published : 08 Apr 2019 08:48 AM
Last Updated : 08 Apr 2019 08:48 AM
ஜெயலலிதா இல்லாத அதிமுகவில், கூட்டணியிலும் நட்சத்திரப் பேச்சாளர்கள் இல்லாத சூழலில் மற்ற தலைவர்களுக்குச் சவால்விடும் அளவுக்குச் சூறாவளிப் பிரச்சாரம் செய்கிறார் முதல்வர் கே.பழனிசாமி. எப்படியிருக்கிறது அவரது பிரச்சாரப் பயணம்?
முழுக்க வேன் பிரச்சாரம்
முதல் விஷயம் ஜெயலலிதாபோல் இன்றி, முழுக்க முழுக்க சாலைப் பயணம் மட்டுமே மேற்கொள்கிறார் பழனிசாமி. பாரிவேந்தரைப் போல அவரது பிரச்சார வேனில் நிழற்குடை கிடையாது. ஸ்டாலினைப் போல பொதுக்கூட்டத்தோடு பிரச்சாரத்தை நிறுத்திக்கொள்வதும் இல்லை. நல்ல வெயிலில், திறந்த வேனில் நின்றபடி பிரச்சாரம் செய்கிறார். சாதாரண வேட்பாளர்களுக்கு இணையாகக் கொளுத்தும் வெயிலிலும் ஓட்டு கேட்கிறார். காலை 8.30 மணிக்குத் தொடங்கும் பிரச்சாரம், மதியம் 1.30 மணி வரையிலும் நடைபெறுகிறது. எந்த மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கிறாரோ, அந்த மாவட்டத்திலேயே நல்ல விடுதியாகப் பார்த்துத் தங்குகிறார்.
மாலை 5 மணிக்கு மீண்டும் பிரச்சாரப் பயணம் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு மேல் பொதுக்கூட்டம். 9.40 மணிக்குள் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, பக்கத்திலேயே நல்ல விடுதியில் தங்குகிறார். இரவில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிவிட்டுத் தூங்குவதற்கு 11 மணிக்கு மேலாகிவிடுகிறது. பயணத் திட்டத்தில் இல்லை என்றாலும், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் யாராவது சமீபத்தில் இறந்திருந்தால் வீட்டிற்கே போய் அவர்களது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார் முதல்வர்.
கடந்த 4 நாட்களாக மதுரை மண்டலத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார் பழனிசாமி. எப்படி எம்ஜிஆர் உடல் நலமின்றி இருந்தபோது, ஜெயலலிதா தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பிரச்சாரம் செய்தாரோ, அதைப் போல ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் குறைந்தது ஓரிடத்திலாவது பேசிவிடுகிறார் இவர். இடைத்தேர்தல் நடைபெறுகிற மானாமதுரை போன்ற சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று இடங்களில் வாக்கு கேட்டார்.
வேன் நிற்கிற ஒவ்வொரு இடத்திலும் 15 நிமிடங்கள் பேசுகிறார். ‘மீண்டும் மோடி பிரதராக வேண்டும், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் பிரதமர் யார் என்பதில் குழப்பம் இருக்கிறது, திமுகவின் தேர்தல் அறிக்கையை நம்பாதீர்கள், எங்களது சாதனைகள் இவை, திமுகவினர் ஆட்சியில் இல்லாமலேயே அராஜகம் செய்கிறார்கள், கோடநாடு விஷயத்தில் ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்கிறார்’ என்பதைச் சுற்றியே அவரது பேச்சு இருக்கிறது. கூடவே, அந்தந்த ஊருக்கு ஏற்ப அவ்வப்போது தோன்றுகிற விஷயங்களையும் கோத்துப் பேசுகிறார் பழனிசாமி. வேட்பாளரின் பெயர், சின்னத்தை மட்டும் பார்த்துப் பேசுகிறார். அவரது பேச்சின் இறுதிப் பகுதி ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லுவதற்காக ஒதுக்கப்படுகிறது. அப்போதெல்லாம் கடும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். எதிர்க்கட்சித் தலைவரை ஒருமையில் திட்டும் இடத்துக்கு பழனிசாமி செல்லும்போது கூட்டம் முகம்சுளிக்கிறது. ஸ்டாலினும் இப்போது அதையே செய்கிறார். இருவரும் இனியேனும் நாகரிகமாகப் பேசுவது அவர்கள் வகிக்கும் பொறுப்பின் பெருமையைக் காக்கும் என்ற குரல் காதில் கேட்கிறது.
பிரச்சார பாணி
காதோடு நவீன மைக் பொருத்தப்பட்டிருப்பதால், இரண்டு கைகளையும் ஆட்டி சரளமாக பழனிசாமியால் பேச முடிகிறது. உடல்மொழியில் கூடுதல் பலனுக்கு இது உதவுகிறது. ஆனால், தொண்டையில் அவருக்கு ஏதோ பிரச்சினை இருப்பது தெரியவருகிறது. குரல் வெளிப்பாட்டில் அது பிரதிபலிக்கிறது. ஜெயலலிதா பிரச்சாரத்தில், வேட்பாளர் தனி வாகனத்தில் கும்பிட்டபடி நிற்பார். ஆனால், இவரோ வேனில் தன் அருகிலேயே உள்ளூர் அமைச்சர், வேட்பாளரை நிற்கவைத்துக்கொள்கிறார். அலங்காநல்லூரில் முதல்வரோடு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம் என்று நான்கு பேரும் நெருக்கிக்கொண்டு நின்றனர்.
உள்ளூர்ப் பிரச்சினைகளைத் தொட்டுப் பேசுவது நன்றாக எடுபடுகிறது. சிவகாசியில் பட்டாசுப் பிரச்சினை, விருதுநகரில் குடிநீர்ப் பிரச்சினை, மதுரையில் முல்லைப் பெரியாறு பிரச்சினைகளைத் தொட்டுப் பேசினார் பழனிசாமி. ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில், புதிது புதிதாக அறிவிப்புகளை அவர் வெளியிட்டதையும் பார்க்க முடிந்தது. தேர்தல் நடத்தை விதிகளை இப்படி முதல்வரே மீறுதல் சரிதானா என்ற உள்ளூர் எதிர்க்கட்சியினரின் குரலையும் கேட்க முடிந்தது.
ஜெயலலிதா, எம்ஜிஆரைப் பற்றிக்கூட அதிகம் பேசாமல், தொடர்ந்து மோடி புகழை பழனிசாமி பாடுவதை அதிமுக தொண்டர்களே ரசிக்கவில்லை. மதுரை கீழவாசலில், “அம்மா பற்றி பேசுங்க!” என்று தொண்டர் ஒருவர் உரக்கக் கத்தியேவிட்டார். உள்ளூர்க்காரர்கள் ஓட்டு கேட்கச் செல்கையில் தொடக்க நாட்களில் எடுத்துக்கொண்டு சென்றதுபோல மோடி படத்தை எடுத்துச் செல்வதை சமீப நாட்களாக தவிர்க்கின்றனர் என்பது இதோடு பொருத்திப் பார்க்க வேண்டியது.
பேச்சின் நிறைவில், நான்கு திசையிலும் சுழன்று மக்களைப் பார்த்து இரட்டை விரலைக் காட்டுகிறார் பழனிசாமி. இன்னொரு முக்கியமான விஷயம், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மட்டுமே தினகரனை விமர்சித்தார். அது தனது சொந்தக்காசில் வைத்துக்கொள்ளும் சூனியம் என்று உளவுத் துறை சுட்டிக்காட்டியதாகச் சொல்லப்படுகிறது. விளைவாக, இப்போது அதையும் தவிர்க்கத் தொடங்கிவிட்டார்; அதேபோல ராகுலையும் அவர் விமர்சிப்பதில்லை.
அபூர்வமாக, சில இடங்களில் ஒன்றிரண்டு பேருடன் கை குலுக்குகிறார். பொன்னாடை போர்த்துவது, பூச்சொரிவது போன்றவை நேரத்தை வீணாக்கும் என்று அறிவுறுத்தப்பட்டிருப்பதால், அதைத் தவிர்க்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள். ஆனாலும், பேக்கிங் டீம் ஒன்று, அவரது பூங்கொத்துக்களையும் பொன்னாடைகளையும் அள்ளிக்கொண்டு தனி வேனில் பின்தொடர்கிறது.
காவல் துறை கெடுபிடி
ஏற்கெனவே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றுவந்துவிட்ட பழனிசாமி, இந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்தி 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வலம்வரும் இலக்கோடு சென்றுவருகிறார். மக்கள் இன்னும் அவரை ஒரு கவர்ச்சி மிக்க ஆளுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பது களத்தில் தெரிகிறது. ஆனாலும், சமூக வலைத்தளங்களில் கேலிசெய்யும் அளவுக்கெல்லாம் அவருக்குக் கூட்டம் இல்லாமலும் இல்லை. கூட்டத்தில் மட்டும் பேசாமல், போகிற வழியிலும் திறந்த வேனில் நின்றபடி, சாலையில் போகிற வருகிற ஒற்றை மனிதருக்கும் வணக்கம் வைக்கிறார் முதல்வர்.
வாகன அணிவகுப்பை முற்றிலுமாகத் தவிர்க்கிறார் என்று சொல்ல முடியாது. குறிப்பிட்ட எண்ணிக்கை வாகனங்கள் மட்டுமே தன்னைப் பின்தொடர வேண்டும். மற்றவை ஒரு நிமிட இடைவெளிவிட்டுத் தொடரலாம் என்று சொல்லியிருக்கிறார்போலும். ஆனால், காவல் துறையின் அளவுகடந்த பாதுகாப்பு மக்களிடமிருந்து வெகுவாக அவரை அந்நியப்படுத்திவிடுகிறது. அவர் பிரச்சாரம் செய்கிற சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு முன்பே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படுகிறது. உச்சி வெயிலில் வாகன ஓட்டிகள் நடுவழியில் நிறுத்தப்படுகிறார்கள். பொதுக்கூட்டத்திலும் தேவைக்கு அதிகமாகவே போலீஸார் குவிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, அவர் தங்கியிருக்கும் விடுதியைச் சுற்றி அமலாக்கப்படும் கூடுதலான பாதுகாப்பு நடவடிக்கைகளும் உள்ளூர் மக்களிடம் எரிச்சலை உண்டாக்குவதைப் பார்க்க முடிந்தது.
வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு, தமிழகத்தை நன்கு அறிந்துகொள்ளவும், மக்கள் மனதில் தன் முகத்தைப் பதியவைப்பதற்கும் இந்தப் பிரச்சாரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார் பழனிசாமி. அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுவருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT