Published : 24 Apr 2019 08:56 AM
Last Updated : 24 Apr 2019 08:56 AM

கோல்ஃப் வெறும் விளையாட்டல்ல; வாழ்க்கை!

நான் மட்டுமல்ல, என்னைப் போன்ற லட்சக்கணக்கானோருக்கு சமீபத்தில் மிகவும் வியப்பும் மகிழ்ச்சியும் அளித்த விஷயம் எதுவென்றால், டைகர் உட்ஸ் தனது 43-வது வயதில் - நீண்ட இடைவெளிக்குப் பிறகு - கோல்ஃப் விளையாட்டின் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றதுதான். இதிலிருந்து என்ன கற்றுக்கொள்ள முடியும்?

நீங்கள் கேட்கலாம்; ‘கோல்ஃப்’ விளையாட்டு குறித்து தெரியாதவர்களுக்கும், அதில் ஆர்வம் இல்லாதவர்களுக்கும் இதில் சிலாகிக்க என்ன இருக்கிறது?’ ஐயா, இருக்கிறது. டைகர் உட்ஸ் நான்கு முறை முதுகில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர், மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு பெண்ணுடன் உறவுகொண்டிருந்ததைப் பத்திரிகையொன்றில் விரிவாக எழுதியதை அடுத்து சமூகத்தில் மிகவும் அவமானப்பட்டவர். எனவே, அவருடைய சாதனை சாதாரணமானதல்ல. இதை ஒரு செய்தியாளரின் செய்தி பாணியில் கூறுவதென்றால், பில் கிளிண்டன் மீண்டும் தீவிர அரசியலுக்கு வந்து 2020 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பைத் தோற்கடிப்பதற்குச் சமம்.

வெற்றி - தோல்வியை எப்படி எதிர்கொள்கிறோம்?

நாம் கோல்ஃப் விளையாட்டை எதனுடனாவது ஒப்பிட வேண்டுமென்றால், அதற்கு சரியான ஒப்பீடு வாழ்க்கைதான்; சமமில்லாத தளத்தில், எல்லாமே உங்களுக்கு பாதகமான சூழலில், உங்களுடைய பந்துகளை, ஆங்காங்கே பொருத்திவைத்துள்ள துளைகளுக்கு அருகில் லாவகமாகக் கொண்டுசென்று நளினமாகச் செலுத்த வேண்டும். கோல்ஃப் மட்டையால் பந்தை அடிக்கும்போது அது அழகாகவும் தரையில் மோதிக் கிளம்பும், ஆக்ரோஷமாகவும் எகிறி எதிர்பாராத திசையில் விழும். ஆட்டத்தின் விதிகள், முறைகள் போக, நாமாகவே செய்யும் தவறுகளும் ஆட்டத்தின் போக்கை வெகுவாக பாதிக்கும். எனவே, கோல்ஃப் விளையாட்டும் வாழ்க்கைக்குச் சமம்தான்.

அது மட்டுமல்ல, பந்து நல்ல விதமாக எழும்போது அதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள், எதிர்பாராத விதத்தில் எகிறும்போது எப்படி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறீர்கள் என்பதும் முக்கியம். ‘நினைத்தபடி போகவில்லை, சனியன் போதும் இந்த விளையாட்டு’ என்று உடனே விலகத் தோன்றுவதும் உண்டு; சிலர் பந்தை விரட்டும் மட்டையைத் தூக்கி எறிவதும் உண்டு; அல்லது தில்லுமுல்லுகள் செய்வதும் உண்டு; உரத்துக் கத்துவதோ அழுவதோகூட உண்டு; குச்சியைத் தூக்கிவரும் உதவியாளரைத் திட்டுவதும் உண்டு.

ஆனால், மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் பொறுமையை இழக்க மாட்டார்கள்; ‘இப்போது பார்’ என்று தனது உதவியாளரிடம் கூறிவிட்டு, பந்தை வெகு லாவகமாக அங்கிருந்து கிளப்புவார்கள். அது அப்படியே மரங்களுக்கிடையே பறந்து, சிறு குன்றுக்கும் மேல் ஏறி, மணல் பரப்பிலும் அருகிலுள்ள நீர்நிலையிலும் விழாமல் தவிர்த்து, அடுத்த குழிக்கு அருகில் உள்ள பச்சைத் தரையில் போய் இறங்கும். கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அகுஸ்டா நேஷனல் கோல்ஃப் போட்டியின் 11-வது துளையில் இந்த வகையில்தான் டைகர் தனது பந்தைச் செலுத்தினார்.

மிகுந்த நெருக்கடிகளுக்கு இடையில் இதை அவர் சாதித்தது வியப்பை ஏற்படுத்தியது. இது வெறும் அதிர்ஷ்டத்தாலோ, உடல் தகுதியாலோ மட்டும் சாதிக்கப்படுவது அல்ல. இதற்குக் காரணம் இடைவிடாத பயிற்சி; மணிக்கணக்காக அன்றாடம் மேற்கொள்ளும் பயிற்சி மட்டுமே. கேரி பிளேயர் என்ற கோல்ஃப் நிபுணர் கூறுவார், ‘எவ்வளவுக்கெவ்வளவு நான் பயிற்சி மேற்கொள்கிறேனோ அவ்வளவுக்கவ்வளவு நான் அதிர்ஷ்டக்காரனாகிறேன்’ என்று. டைகர் உட்ஸ் மீண்டும் சாம்பியன் ஆனதற்குக் காரணமே இதுதான்.

உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காயப் பட்டிருந்தாலும் மீண்டும் விளையாட வேண்டும் என்ற எண்ணமும், அதற்காக அன்றாடம் மேற்கொண்ட மணிக்கணக்கான பயிற்சியுமே இந்த வெற்றிக்குக் காரணம். நம்மில் எத்தனை பேரிடம் இத்தகைய மன உறுதி இருக்கிறது?

நான்கு இயல்களின் சேர்க்கை

கோல்ஃப் விளையாடுவதற்குக் கடினமானது; விளையாடி வெற்றிபெற்றால் அளவில்லாத மகிழ்ச்சி ஏற்படுவதற்குக் காரணம், கோல்ஃப் ஆட்டம் நான்கு இயல்களின் சேர்க்கை. இயற்பியல், வரைகணிதவியல், புவியியல், உளவியல் ஆகியவையே அந்த நான்கு. அந்த நான்கிலும் திறமை அதிகம் என்பதால் டைகர் உட்ஸ் மற்றவர்களைவிட எளிதில் வெற்றிபெறுகிறார்.

இது எப்படி? கோல்ஃப் ஆட்டத்தில் குச்சியை வளைத்து பந்தை அடிக்கும்போதே, ‘இலக்கு எவ்வளவு தூரம், நிலப்பரப்பு எப்படிப்பட்டது, மேட்டுப்பாங்கான நிலமா, ஏதாவது பாறை விளிம்பில் ஒட்டி நிற்கிறதா’ என்றெல்லாம் பார்ப்பது புவியியலோடு பிணைந்தது. பந்தை எந்தக் கோணத்தில், எந்த வேகத்தில் அடிக்க வேண்டும், காற்று அடிக்கும் திசை, வேகம், தட்பவெப்ப நிலை ஆகியவற்றைக் கணிப்பது வரைகணிதவியலோடு பிணைந்தது. இரு முழங்கைகளையும் கால்களையும் எப்படி நகர்த்த வேண்டும், பந்தை அடிக்கும்போது உடல் எடையை எந்தக் காலில் தாங்க வேண்டும், உடலை எப்படித் திருப்ப வேண்டும் என்பன இயற்பியலோடு பிணைந்தது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும், உளவியல்ரீதியாக எந்தச் சலனத்துக்கும் ஆட்படாமலிருப்பதும் அவசியம். உடலையும் கைகளையும் ஒத்திசைவாக இயக்குவதிலும் வெற்றி இருக்கிறது.

2009-ல் டைகர் உட்ஸ் வாழ்க்கையில் ஏற்பட்ட சில சம்பவங்கள் உலகம் முழுவதும் செய்தி ஊடகங்களால் பரப்பப்பட்டன. அவருக்கு முதுகில் அதன் பிறகே பிரச்சினைகள் ஏற்பட்டன. அப்போது ஒரு ஆட்டத்துக்குப் பிறகு பார்வையாளர்கள் மாடத்துக்குத் திரும்பிய டைகர் உட், தனது ரசிகர்களின் முகங்களை நேருக்கு நேர் பார்ப்பதைக்கூடத் தவிர்த்தார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு அவரால் எந்தப் போட்டியிலும் பெரிதாக வெற்றிபெற முடியவில்லை. இன்று அவர் மீண்டிருக்கிறார். எல்லோரையும் நேருக்கு நேர் பார்க்கிறார்.

இந்த வெற்றி கொண்டாடப்பட வேண்டியது

நாம் யார், நம்முடைய வாழ்க்கைக் கூட்டாளிகள் யார் என்பதை வாழ்க்கையில் தெரிந்துகொள்வதுண்டு. கோல்ஃப் விளையாட ஆரம்பித்து உங்களுக்குப் பிடித்துவிட்டதென்றால் அதில் நீங்கள் தேடுவது பந்தையல்ல, உங்களை, உங்களுடைய சுயத்தை. ஒவ்வொரு சுற்று முடிவிலும் உங்களை நீங்களே முன்னேற்றிக்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்குகிறீர்கள். புவியியல், இயற்பியல், வரைகணிதவியல், உளவியல் அனைத்திலும் உங்களுடைய ஞானத்தை வளர்த்துக்கொள்வதுடன் ஒருங்கிணைக்கிறீர்கள்.

மிகவும் சவாலான ஒரு களத்தில், வெவ்வேறுபட்ட பின்னணி உள்ள களத்தில், ஒருகாலத்தில் வென்றவர் – பிறகு அதில் தோற்று, மீண்டும் வெற்றிபெறுவதைப் பார்க்க நேர்வது எப்படிப்பட்ட கொடுப்பினை. 43 வயதில் டைகர் உட்ஸ் பெற்ற வெற்றி எவ்வளவு அழகானது, எவ்வளவு மகத்தானது! அது நம்மையும் தொற்றிக்கொள்கிறது!

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x