Published : 22 Apr 2019 11:44 AM
Last Updated : 22 Apr 2019 11:44 AM

மெட்ராஸ் கதைசொல்லி முத்தையா

நாம் வாழும் இடத்தின் வரலாற்றைப் பற்றி வாசிப்பதும் அறிந்துகொள்வதும் அவசியம் என்று அந்த ஆங்கிலேயர் வலியுறுத்தியது அந்த எட்டு வயதுச் சிறுவனுக்கு விதையாகப் பதிந்திருக்க வேண்டும். வரலாறும் அதன் நினைவுச் சின்னங்களான பாரம்பரியக் கட்டிடங்களும் பேணப்பட்டுப் பெருமளவு பாதுகாக்கப்படாத மெட்ராஸின் வரலாறை அரை நூற்றாண்டு காலம் தேடித் தொகுத்தளித்த எஸ்.முத்தையா அதை நினைவுகூர்ந்தும் இருக்கிறார்.

தனது எழுத்துகளில் தாக்கம் ஏற்படுத்தியதென்று கெப்லே எழுதியிருக்கும் ‘சிலோன், பீட்டன் ட்ராக்’ நூலையே குறிப்பிடுகிறார். கொழும்புவில் பள்ளிப் படிப்பைப் படித்த அந்தச் சிறுவனுக்கு, இலங்கையின் வரலாறைக் கதை வடிவில் சொன்ன அந்த ஆசிரியர்தான் கெப்லே.

கொழும்புவில் ‘டைம்ஸ் ஆப் சிலோன்’ நாளேட்டின் ஞாயிறு பதிப்புக்குப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய 38 வயது முத்தையா, சீக்கிரத்திலேயே அந்த நாளிதழின் ஆசிரியராக உயரவிருந்தார். ஒரு நாளிதழுக்கு முழுப் பொறுப்பேற்பவர் அந்நாட்டின் குடிமகனாக இருக்க வேண்டும் என்பது இலங்கையின் சட்டம். இதற்காக அவரது விண்ணப்பத்தை அயலகச் செயலர் புறக்கணித்த நிலையில்தான் மெட்ராஸின் கதையை எழுதுவதற்கென்று நமக்கு ஒரு முத்தையா கிடைத்தார்.

89 வயதான நிலையில் மறைந்த அவர் சென்னையோடு கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு காலத்தை நேசமிக்க தாம்பத்யத்தைப் போல உயிருக்கு உயிராக அனுபவித்து வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார். மாதமிருமுறை இதழான ‘மெட்ராஸ் ம்யூசிங்ஸ்’ஸுக்காக சமீப காலம் வரை தினசரி எட்டு மணி நேரத்தைத் தனது பழைய தட்டச்சு இயந்திரத்தின் முன் செலவழித்திருக்கிறார்.

முத்தையாவைக் கண்டுகொண்ட மெட்ராஸ்

1971-லிருந்து மெட்ராஸ் நகரத்தின் கதைகளைத் தேடிக் கண்டடைந்து தொகுத்து எழுதிய முத்தையாவுக்கு, டி.டி.கே நிறுவனம் புதிதாகத் தொடங்கிய டி.டி.மேப்ஸில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. டி.டி.மேப்ஸின் முதல் தயாரிப்பான மெட்ராஸ் வரைபடத்துக்கு அவர் தகவல்களைத் திரட்ட வேண்டியிருந்தது. வரைபடத்தோடு சேர்ந்து மெட்ராஸ் நகரம் குறித்த தகவல்களையும் கொடுக்க வேண்டியிருந்தது.

அதற்காக இறங்கி ஆராய்ந்தபோதுதான் மெட்ராஸ் கிழக்கிந்தியக் கம்பெனியில் பணியாற்றிய பல்வேறு நபர்களின் பெயர்கள் அந்தத் தகவல்களுக்குப் பின்னணியில் இருப்பதைப் பார்த்தார். வாரன் ஹேஸ்டிங்க்ஸ், ராபர்ட் க்ளைவ், வெல்லஸ்லி பிரபு என்று பாடநூல்களில் படித்து மறந்த மனிதர்கள் அனைவரும் மெட்ராஸில் தங்கள் உத்தியோக வாழ்க்கையைத் தொடங்கியவர்கள் என்ற செய்தி அவருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அவர்களைப் பற்றி அவர் சேர்த்த தகவல்கள் வீட்டில் மலையளவு குவிந்துபோனது. அதை உருப்படியாகத் தொகுக்காவிட்டால் அந்தக் காகிதங்களையெல்லாம் தூக்கி எறிந்துவிடுவேன் என்று அவர் மனைவி மிரட்டிய நிலையில், முத்தையா எழுதிய சிறுநூல்தான் ‘மெட்ராஸ் டிஸ்கவர்டு’. அந்தப் புத்தகத்தின் மூலம் மெட்ராஸ், முத்தையாவைக் கண்டுகொண்டதோடு பற்றியும் கொண்டதென்றே சொல்லலாம். எதை வாசிக்கும்போதும் அவற்றிலெல்லாம் சென்னையைப் பின்தொடர ஆரம்பித்தார் முத்தையா.

சென்னையைப் பற்றி அவருக்கு முன் ‘இந்தியன் எக்ஸ்பிர’ஸில் எழுதிவந்த என்.எஸ்.ராமஸ்வாமி மற்றும் ஹாரி மில்லரின் எழுத்துகளும் அவருக்கு ஊக்கத்தையும் தரவுகளையும் அளித்தன. ஒருகட்டத்தில், நவீன இந்தியாவின் வரலாற்றில் மெட்ராஸ் என்ற நகரம் வகிக்கும் முக்கியத்துவத்தை அவர் அறிந்துகொண்டார்.

நவீன இந்தியா என்பது முத்தையாவைப் பொருத்தவரை 1498-க்குப் பிறகு. பிரிட்டிஷ் இந்திய வரலாறு 1600-ல் தொடங்குகிறது. அவர்களுக்கு முன்னரே வந்த போர்ச்சுகீசியர்களும், டச்சுக்காரர்களும் தங்கள் அடித்தளத்தைச் சரியாக நிறுவ முடியாமல் தோற்ற நிலையில், ஆங்கிலேயர்கள் இந்தியா முழுவதும் 17, 18-ம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்த நிறுவனங்கள் அனைத்தின் துவக்கமும் மெட்ராஸில்தான் நிகழ்ந்திருக்கிறது.

 இந்தியாவின் முதல் பொறியியல் கல்லூரி, முதல் பொது மருத்துவமனை, முதல் மாநகராட்சி மன்றம், முதல் மேற்கத்தியப் பள்ளி, இந்திய ராணுவத்தின் முதல் படைப் பிரிவு, முதல் திரிகோண நில அளவை அனைத்தும் தொடங்கப்பட்ட இடம் மெட்ராஸ்தான் என்பதையெல்லாம் மீண்டும் சமகாலச் சமூகத்தின் நினைவுக்குக் கொண்டுவந்த முத்தையா ‘நவீன இந்தியாவின் முதல் நகரம் சென்னை’ என்பதை நிறுவினார்.

பெருமிதம் கொள் நீ சென்னைவாசி

நவீன இந்தியாவின் உருவாக்கத்துக்குப் பெரும் பங்களித்திருக்கும் மெட்ராஸ் குறித்து நமக்குப் பெருமிதம் இருக்க வேண்டுமென்று நியாயமாகக் கருதியவர் முத்தையா. மெட்ராஸின் வரலாறு குறித்து பள்ளிப் பருவத்திலிருந்தே குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுத்தால்தான் இந்த நகரம் நாம் பெருமிதம் கொள்வதற்கான எவ்வளவு பெரிய வரலாற்று சாட்சியம் என்பது விளங்கும் என்று அவர் ‘ஃப்ரன்ட்லைன்’ இதழுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருப்பார்.

முத்தையா தனது புத்தகங்கள் வழியாகவும், ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் வாரம்தோறும் எழுதிவந்த புகழ்பெற்ற பத்தியான ‘மெட்ராஸ் மிஸ்ஸலனி’ வழியாகவும் மெட்ராஸின் பாரம்பரியக் கட்டிடங்கள், கல்வெட்டுகள், கோயில் சுவரோவியங்கள் தொடர்பான நுண்ணுணர்வையும் அவை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும் தொடர்ந்து எழுதி விழிப்புணர்வு ஏற்படுத்தியபடி இருந்தார்.

ரிப்பன் பில்டிங், விக்டோரியா பப்ளிக் ஹால் போன்றவை மறுசீரமைக்கப்பட அவருடைய எழுத்துகளும் உத்வேகம் தந்தன. தொன்மை வாய்ந்த தனியார்க் கட்டிடங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் மறுசீரமைப்புக்குள்ளான கட்டிடங்கள் பொது உபயோகத்துக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், அப்படி உபயோகிக்கப்படாவிட்டால் மீண்டும் சிதையத் தொடங்கிவிடும் என்றும் வலியுறுத்தினார்.

நகரத்தை நேசியுங்கள்

தன்னை வரலாற்றாசிரியன் என்று அடையாளம் சொல்ல விரும்பாத முத்தையா, தகவல்களை வரிசைப்படுத்தித் தருபவர் (chronicler) என்றே அடையாளம் காணப்பட விரும்பினார். மெட்ராஸ் குறித்த பூர்விக ஆவணங்களைப் பார்க்க வாய்ப்பு கிடைத்த எழுத்தாளர்கள் எழுதிய எண்ணற்ற புத்தகங்களிலிருந்து தகவல்களைத் தொகுப்பதே தனது பணி என்றும் கூறியுள்ளார்.

 “இளம் வயதிலேயே உங்கள் பாரம்பரியத்தை மதித்துக் காப்பதற்கும், நீங்கள் வாழும் இடத்தைப் பற்றியும் உங்களுக்குக் கற்பிக்கப்பட்டுவிட்டால் அவற்றை நேசித்துப் பேணுவீர்கள். நீங்கள் படிக்கும் கல்வி அதைக் கற்றுத்தராமல் வெறுமனே அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் வர்த்தகத்தையும் கற்றுக்கொடுத்தால், உங்கள் சொந்த ஊரின் பாரம்பரியம், உங்கள் மாநிலம், உங்கள் நாட்டின் பாரம்பரியமெல்லாம் உங்களைப் பொறுத்தவரை அர்த்தமற்றவையாக இருக்கும். அதனுடன் உங்களுக்கு எந்தத் தொடர்பும் இருக்காது” என்றார் முத்தையா.

சென்னை மாநகருக்கான ரத்தமும் சதையுமான பிரமாண்ட ஆவணத் தொகுப்பாகவும் கையேடாகவும் வாழ்ந்த அவர் இந்த நகரத்தை நேசியுங்கள் என்பதையே தன் வாழ்க்கையின் வழி சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்.

- கட்டுரையாளர் தொடர்புக்கு: sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x