Published : 08 Apr 2019 08:42 AM
Last Updated : 08 Apr 2019 08:42 AM
தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, நீலகிரி, சிவகங்கை, காஞ்சிபுரம் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளில் வன உரிமைச் சட்டத்தின் மூலமாகப் பயன்பெறும் பயனாளிகளின் வாக்கு, வெற்றி தோல்வியை முடிவுசெய்வதாக இருக்கும் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு. கடந்த 2014 மக்களவைத் தேர்தலை அடிப்படையாக வைத்து டாட்டா சமூக அறிவியல் நிறுவனத்துடன் சமூக வன உரிமைகள்-கல்வி மற்றும் ஆலோசனைக் குழு சேர்ந்து மேற்கொண்ட ஆய்வு அது.
கிருஷ்ணகிரி தொகுதியில் கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 2,06,591. இத்தொகுதி 192 வன கிராம சபைகளை உள்ளடக்கியது. இந்தக் கிராம சபை வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 2,78,530. மொத்த வாக்காளர்களில் சுமார் 20%.
தர்மபுரியில் வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 77,146. இத்தொகுதியிலுள்ள 178 கிராம சபைகளில் 3,79,150 வாக்காளர்கள் உள்ளனர். மொத்த வாக்காளர்களில் இது 28%.
நீலகிரியில் வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 1,04,940. இந்தத் தொகுதியில் 63 வன கிராம சபைகள் உள்ளன. கிராம சபை வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டுமே 2,10,131. மொத்த வாக்காளர்களில் சுமார் 17%.
சிவகங்கையில் வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 2,29,385. இது 153 வன கிராம சபைகளை உள்ளடக்கிய தொகுதி. கிராம சபை வாக்காளர் எண்ணிக்கை மட்டும் 2,36,575. மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 17%.
காஞ்சிபுரத்தில் வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 1,46,866. இது 249 வன கிராம சபைகளைக் கொண்ட தொகுதி. வனங்களில் வாழும் வாக்காளர்கள் எண்ணிக்கை 1,87,335. இது வாக்காளர் எண்ணிக்கையில் சுமார் 13%.
ஐந்து தொகுதிகளின் வெற்றியை வனங்களில் வசிப்பவர்களே தமிழ்நாட்டில் தீர்மானிக்கிறார்கள். ஆனாலும், அவர்களுக்கான பிரதிநிதித்துவம், உரிய முக்கியத்துவம் தமிழக அரசியலில் இல்லை.
வனவாசிகளைப் புறக்கணிக்கும் தமிழகம்
நாடு முழுதும் இதுபோல 133 தொகுதிகள் இனம்காணப்பட்டுள்ளன. சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது வன உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வனங்களில் வாழும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியோடு களம் கண்டது காங்கிரஸ். தேர்தலில் வெற்றியையும் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டது. வட மாநிலத் தேர்தல்களில் பழங்குடி மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்பது முக்கியத் தேர்தல் வாக்குறுதியாக இருக்கிறது. ஆனால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நகர்ப்புறம் சார்ந்த மக்களின் வாக்குகள் மீது வைக்கப்படும் கவனம், வனம் சார்ந்த மக்கள் மீது இல்லை.
வன உரிமைச் சட்டம்
வனப் பகுதியும் வனப் பகுதியைச் சார்ந்த பிற பகுதிளும், வன உரிமைச் சட்டம் 2006 நடைமுறைப்படுத்த வேண்டிய பகுதிகளாகும். பழங்குடி மக்கள் அல்லது பழங்குடி அல்லாத பிற மக்கள் மூன்று தலைமுறைகளாக இப்பகுதியில் வசித்து விவசாயம் செய்துவரும் நிலையில் அவர்களின் நில உரிமையை அங்கீகரித்து நிலம் வழங்க அரசு வழிவகை காண வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் கீழ், வனங்களில் வாழும் சமூகத்துக்கென உள்ள உரிமைகள் மற்றும் தனிநபர் சார்ந்த உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
வனத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வனத்தை மக்கள் சமூகத்தின், கிராம சபையின் அதிகாரத்தின் கீழ் செயல்பட அனுமதிப்பது இச்சட்டத்தின் முக்கியக் குறிக்கோளாகும். இதனால், தங்களின் அதிகாரம் மட்டுப்படுத்தப்படுவதாகக் கருதிய வனத் துறை உயர் நீதிமன்றத்தில் இச்சட்டத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்ப்பட்ட ஒரு வழக்கில், வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்குவதற்கு முன் நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும் என்று உத்தரவிட்டது. அந்த உத்தரவை ‘தடை உத்தரவு’ என்பதாகக் காட்டி இச்சட்டத்தைக் கிடப்பில் போட்டது தமிழக அரசு.
உச்ச நீதிமன்றத் தலையீட்டால் கடந்த ஆண்டுதான் தமிழகத்தில் நடைமுறைக்கு வந்துள்ளது இந்தச் சட்டம். நாடு முழுவதும் 13 ஆண்டுகளுக்கு முன்பே இச்சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது.
கோரிக்கைகள் என்னென்ன?
தமிழகத்தில் வன உரிமைச் சட்டம் தாமதமாகவே நடைமுறைக்கு வந்தது.இன்னமும் முழுதாகப் பயன் கிடைக்கவில்லை. எனவே, தமிழக வனங்களில் வசிப்போரும் வடமாநிலங்களைப் போலவே ஒன்று திரண்டு தமிழக அரசியல் கட்சிகளிடம் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திவருகிறார்கள். வன உரிமைச் சட்டத்தைத் தகுதியுடைய எல்லா மக்களுக்கும் சென்றடையும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். வன உரிமைச் சட்டத்தின் கீழ், சமூகக் குழு உரிமைகளும், தனிநபர் உரிமைகளும் அரசால் அங்கீகரிக்கப்பட வேண்டும். குறிப்பாக, இப்பகுதியில் விவசாயம் செய்துவரும் மக்களின் நில உரிமை, கால்நடை மேய்க்கும் உரிமை மற்றும் வன மகசூல்களைப் பெறும் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். வனப்பகுதி கிராமங்கள் மற்றும் வனமாக நில அளவை செய்யப்படாத பகுதிகளை மக்கள் பயன்படுத்துவதற்குத் தோதாக வருவாய் கிராமங்களாக மாற்ற வேண்டும்.
வனத் துறையின் ஆதிக்கம் குறைக்கப்பட்டு, வனக் குழுக்கள் வனத்தைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் அனுமதிக்க வேண்டும். வனப் பகுதியைத் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும். எந்தத் திட்டத்துக்கும் கிராம சபையின் அனுமதி அவசியம் பெற வேண்டும். வனப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட வேண்டும். ஒருவேளை, வனப்பகுதியிலிருந்து மக்களை வெளியேற்றும் தவிர்க்க முடியாத சூழலில் வெளியேறும் மக்களின் வன உரிமை அங்கீகரிக்கப்பட்டு மாற்று வாழ்வாதாரம் வழங்க வேண்டும்.
இந்தக் கோரிக்கைகளைத்தான் அரசியல் கட்சிகளிடம் தேர்தல் வாக்குறுதியாகவும் எதிர்பார்க் கிறார்கள். இந்தக் கோரிக்கைகளைத்தான் வன உரிமைச் சட்டத்தின் கீழ் பயன்பெறத் தகுதி படைத்த மக்கள் நாடு முழுதும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். வனவாசிகளின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் கட்சிகள் செவிசாய்க்குமா?
- ச.பாலமுருகன், எழுத்தாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT