Published : 06 Apr 2019 07:53 AM
Last Updated : 06 Apr 2019 07:53 AM
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராஜாஜி, தங்கதூரி பிரகாசம் பந்துலு, மினு மசானி, பேராசிரியர் என்.ஜி. ரங்கா, கே.எம்.முன்ஷி ஆகியோர் ஜூன் 4, 1959 அன்று தொடங்கிய கட்சி, சுதந்திரா. ஆவடி, நாகபுரி மாநாடுகளில் காங்கிரஸ் கட்சியின் தீர்மானங்கள் இடதுசாரிக் கொள்கையின் அடிப்படையில் இருந்ததால் ‘சந்தையை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கையே தேவை’ என்ற நோக்கில் சுதந்திரா தொடங்கப்பட்டது. எதற்கெடுத்தாலும் அரசிடம் ‘லைசென்ஸ், பெர்மிட், கோட்டா’ வாங்க வேண்டும் என்ற நடைமுறையை இக்கட்சி கடுமையாகச் சாடியது.
திட்டங்களுக்காக மக்களின் நிலங்களைக் கையகப்படுத்தினால் தகுந்த நஷ்டஈடு தர வேண்டும், தங்களுடைய குழந்தைகளுக்கு விரும்பும் கல்வியை மக்கள் அளிக்க அரசு தடையாக இருக்கக் கூடாது, விவசாயத்தை வலுப்படுத்த விவசாயிகளுக்கு முழு நில உரிமை அளிக்க வேண்டும், உற்பத்தியை அதிகரிக்க ஊக்குவிப்புகள் தர வேண்டும், தொழில் மற்றும் வர்த்தகம் மீது அரசின் அனாவசியக் கட்டுப்பாடுகள் கூடாது, தனிநபர் முதலீடும் சேமிப்பும் பெருக அரசு உதவ வேண்டும். அரசுத் துறை நிறுவனங்களுக்கு இணையாகத் தனியார்த் துறையிலும் தொழில்நிறுவனங்கள் அதிகரிக்க வேண்டும். இப்படி, பொருளாதாரம் சார்ந்து ஏகப்பட்ட திட்டங்களை சுதந்திரா கட்சி முன்மொழிந்தது.
அணிசாரா கொள்கையும் சோவியத் யூனியன் ஆதரவுக் கொள்கையும் நல்லதல்ல. அமெரிக்காவுடனும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் இந்தியா நெருங்கிய உறவுகொள்ள வேண்டும். எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுடைய அமைப்புக்குள் தொண்டர்கள் தலைமையைக் கேள்வி கேட்கவும் எல்லாவற்றையும் விவாதிக்கவும் உரிமைகள் தரப்பட வேண்டும் என்பதும் சுதந்திரா கட்சியின் கொள்கைகள்.
1962 தேர்தலில் போட்டியிட்ட சுதந்திரா கட்சி 6.8% வாக்குகளைப் பெற்று 18 மக்களவைத் தொகுதிகளில் வென்றது. பிஹார், ராஜஸ்தான், குஜராத், ஒடிசா சட்டமன்றங்களில் முக்கிய எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. 1967 தேர்தலில் 8.7% வாக்குகளும் 44 தொகுதிகளும் பெற்று நாடாளுமன்றத்தில் முக்கிய எதிர்க்கட்சியானது. 1971-ல் எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணியில் சேர்ந்த சுதந்திரா, 3% வாக்குகளையும் 8 தொகுதிகளையும் மட்டுமே பெற்றது.
சுதந்திரா கட்சியின் பல கொள்கைகளை காங்கிரஸும் கடைப்பிடித்ததால் அக்கட்சி வளரவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் ஏழைகளும் அக்கட்சியை ஆதரிக்கவில்லை. 1969-ல் காங்கிரஸ் பிளவுபட்ட பிறகு ஸ்தாபன காங்கிரஸ் கட்சி, சுதந்திராவின் இடத்தை நிரப்பியது. 1972-ல் கட்சியின் நிறுவனர் ராஜாஜியின் மறைவு சுதந்திரா கட்சி அரசியல் வானிலிருந்து விடைபெற வழிவகுத்தது. 1974-ல் இக்கட்சி சரண்சிங் தலைமையிலான பாரதிய லோக் தளத்தில் இணைந்துவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT