Published : 18 Apr 2019 11:26 AM
Last Updated : 18 Apr 2019 11:26 AM

இதுதான் இந்த தொகுதி: ஸ்ரீபெரும்புதூர்

சர்வதேச அளவிலான வர்த்தக நிறுவனங்களான நிசான், ஹூண்டாய், ராயல் என்ஃபீல்டு, செயின்ட் கோபெயின் உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்களைக் கொண்ட தொகுதி இது. தமிழகம் மட்டுமல்ல, வெளிமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானார் இங்கு பணியாற்றுகிறார்கள்.

ராஜீவ் காந்தி நினைவிடம், பல்லவர்கள் ஆண்ட பல்லாவரம் எனப் பல சிறப்பம்சங்களை உள்ளடக்கியது இந்தத் தொகுதி. ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், மதுரவாயல், அம்பத்தூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இதில் உள்ளன. பெரிய புராணம் எழுதிய சேக்கிழார் பிறந்தது இந்தத் தொகுதிக்குட்பட்ட குன்றத்தூரில்தான் என்பது இன்னொரு தனிச் சிறப்பு.

பொருளாதாரத்தின் திசை: தொழில் துறையின் தலைநகரமாக விளங்கும் ஸ்ரீபெரும்புதூர், தமிழகத்தில் அதிக அளவில் பன்னாட்டுத் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள தொகுதியாகும். சென்னை புறநகரில் அதிகம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிப்பதும் இந்தத் தொகுதிதான்.

ஸ்ரீபெரும்புதூர் பொருளாதார மண்டலம், அம்பத்தூர் தொழிற்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், ‘மெப்ஸ்’ ஏற்றுமதி வளாகம் என பல முக்கியமான தொழில் பகுதிகள் இடம்பெற்றுள்ளன. விவசாயம், ஆட்டோ மொபைல் தொழில்கள் இங்கு பிரதானம். உதிரி பாகங்கள் தயாரிக்கும் சிறு குறு நிறுவனங்களும் அதிகளவில் இருக்கின்றன.

sriperumbudur-verticaljpg

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: செங்கல்பட்டு - பெருங்களத்தூர், கோயம்பேடு - ஸ்ரீபெரும்புதூர் சாலைகள் போக்குவரத்து நெரிசலால் தினமும் திக்குமுக்காடுகின்றன.  பண்டிகை நாட்களில் பல கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும்.

இங்குள்ள தொழில் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் வாகனங்கள், பொருட்களைத் துறைமுகத்துக்குக் கொண்டு செல்ல வசதியாக சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலைத் திட்டத்தை விரைவுப்படுத்த வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிவருகிறார்கள்.

நீண்ட காலக் கோரிக்கைகள்: சென்னை புறநகர் பகுதிகளைக் கொண்டுள்ள இந்தத் தொகுதியில் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. எனவே, இந்தத் தொகுதியை மையப்படுத்தி பன்னோக்கு மருத்துவமனை அமைக்க வேண்டுமென்பது நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கிறது.

2015 பெருமழையின்போது பாதிப்புக்கு உள்ளான அடையாறு கால்வாய் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதூர் பகுதியை இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளுடன் இத்தொகுதி மக்கள் காத்திருக்கிறார்கள்.

ஒரு சுவாரஸ்யம்: தமிழகத்தில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் அதிக வாக்காளர்கள் கொண்டுள்ள தொகுதி என்ற சிறப்பு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உண்டு. வாக்குப்பதிவு நாளன்று திருவிழா கணக்கில் கூட்டம் வரும். இதற்காகவே தேர்தல் பணிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் கூடுதல் கவனம் செலுத்துகிறது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் பட்டியலின சமூகத்தினர் வன்னிய சமூக மக்கள் ஏறத்தாழ சரிபாதி எண்ணிக்கையில் இருக்கின்றனர். ரெட்டியார், யாதவ சமூக மக்களும் கணிசமான எண்ணிக்கையில் வசிக்கிறார்கள்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இதுவரை நடைபெற்ற மக்களவைத் தேர்தல்களில் திமுக எட்டு முறை வெற்றி பெற்றுள்ளது. இதனால், இந்தத் தொகுதி திமுகவின் கோட்டையாகக் கருதப்படுகிறது. அதிமுகவும் காங்கிரஸும் தலா மூன்று முறை இந்தத் தொகுதியைக் கைப்பற்றியிருக்கின்றன. காங்கிரஸின் மரகதம் சந்திரசேகர் மூன்று முறை வென்றவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x