Published : 29 Apr 2019 12:00 AM
Last Updated : 29 Apr 2019 12:00 AM

ஏன் பெரும் பணக்காரர்கள் தொடர்பான விவாதம் முக்கியமானது ஆகிறது?

அமெரிக்காவின் ‘2020 அதிபர் தேர்தல்’ வேட்பாளருக்கான போட்டியில் ஒரு அத்தியாயம் திங்கள்கிழமை முடிவுக்கு வந்தது; மாதக்கணக்காகத் தன்னுடைய வருமான வரி விவரங்களைத் தாக்கல் செய்யாமல் தாமதித்துவந்த பெர்னி சாண்டர்ஸ், ஒருவழியாக அவற்றை வெளியிட்டார். 2016 தேர்தல் பிரச்சாரத்துக்குப் பிறகு சான்டர்ஸுக்கு அவருடைய புத்தகங்களுக்கான காப்புரிமைத் தொகை நிறைய கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது; இது வெளியே தெரிந்தால் உலகின் பெரும் பணக்காரர்கள் அடங்கிய ‘ஒரு சதவீதக் குழு’வில் சேர்ந்துவிட்டதாகத் தன்னையும் கேலிசெய்வார்களே என்ற தயக்கம் காரணமாகக்கூட அவர் தாமதப்படுத்தினாரோ என்னவோ?

பெர்னி சாண்டர்ஸின் வருமானத்தை ஒரு பிரச்சினையாக்கவும் சிலர் விரும்பினர். இத்தகைய தாக்குதல் முட்டாள்தனமானது. தங்கள் மீதான வருமான வரியை உயர்த்துவதை ஆதரித்தும், தங்களுக்குத் தேவைப்படாத, ஏழைகளுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துவதை வரவேற்றும் பணக்கார அரசியல்வாதிகள் பேசினால் அதை வெறும் நடிப்பு என்று நாம் கருத வேண்டியது இல்லை; சமூகத்தில் தங்களுக்குள்ள பொறுப்பை உணர்ந்து, ஆதரிக்கிறார்கள் என்றே கொள்ள வேண்டும்.

‘ஒரு சதவீதம்’ எனும் சொல்லாடல்

உலகின் செல்வத்தில் சரிபாதிக்கும் மேல் தனி உடைமையாக வைத்திருக்கும் மேல்தட்டு ‘ஒரு சதவீதக் குழு’ பணக்காரர்கள் பற்றிய உரையாடல், 21-வது நூற்றாண்டு இயல்புத்தன்மையை நாம் சரியாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டால் தவறாகிவிடும்.

கோடிக்கணக்கானவர்களின் ஊதியம் மிகச் சிறியதாக உயரும்போது, மிகச் சிலரின் வருமானமோ பல கோடிகளாக உயர்ந்துவருவதை உணர்த்தத்தான் ‘ஒரு சதவீதம்’ என்ற சொல்லாடல் வந்தது. கோடிக்கணக்கான நடுத்தரக் குடும்பத்தினர் சந்திக்கும் பிரச்சினைகள் பணக்காரர்களுக்கு இல்லை என்பது உண்மைதான்; அமெரிக்காவின் மத்திய வங்கியான ‘பெடரல் ரிசர்வ்’ கூற்றின்படி, திடீரென 400 டாலர் அவசரச் செலவு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் அளவுக்கு, வயதுவந்த அமெரிக்கர்களில் 40% பேரிடம் ரொக்கம் கிடையாது.

உள்ளபடி, பணக்காரர்கள் என்பதை நாம் பிரித்துப்பார்க்க வேண்டியிருக்கிறது. பணக்காரர், பெரும் பணக்காரர், உயர் அளவுக்குப் பணக்காரர் என்று மூன்று வகையினருக்கும் இடையில் செல்வத்திலேயே பெரிய வேறுபாடு இருக்கிறது. இன்றைக்கும்கூட எவ்வளவு பணம் இருந்தால் ஒருவர் உண்மையிலேயே பணக்காரர் என்று பெரும்பாலான பணக்காரர்கள் உணர்ந்ததைப் போலத் தெரியவில்லை.

பணக்காரர்கள் குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்?

என்னுடன் சிட்டி யூனிவர்சிடி ஆஃப் நியூயார்க்கில் படித்தவர் ஜேனட் கார்னிக். நிதி முதலீட்டுத் துறையில் முதல் 25 நிறுவனங்களில் மேலாளர்களாக இருப்பவர்கள் ஆண்டுக்குத் தலா 85 கோடி டாலர்கள் சம்பாதிக்கிறார்கள் என்பதைக் கூறிவிட்டு, ‘நிஜமாக இருக்குமா?’ என்று நம்பாமல் கேட்டார். அவர் சொன்ன தகவல் சரியானதுதான். ஒரு பெரிய தொழில் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிக்கு, சாதாரண ஊழியரைப் போல 30 மடங்கு அதிகமாக ஊதியம் இருக்கும் என்று பெரும்பாலான அமெரிக்கர்கள் கருத்து தெரிவித்தனர். ஆனால், உண்மையில் அது 300 மடங்கு!

ஏன் இந்த விவாதம் முக்கியமானது? பணக்காரர்கள் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? பொறாமைக்காக அல்ல, அப்படி பணக்காரர்களாக இருப்பது ‘சில்லோர் முற்றுரிமை’ (ஆலிகோபலி) என்ற நிலைமைக்குத்தான் சமூகத்தை இட்டுச்செல்லும். மிதமிஞ்சிய பணம், மிதமிஞ்சிய அதிகாரத்தையும் செல்வாக்கையும் செருக்கையும் அவர்களுக்குக் கொடுக்கும். ஏழைகள், நடுத்தர மக்களின் துயரங்கள் அவர்களுக்குத் தெரியாது. அவர்களுக்கு எவையெல்லாம் தேவையோ அவையெல்லாம் கைகளுக்கே வந்துவிடும். அவர்கள் எதை விரும்புகிறார்களோ அது பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தீங்கையே விளைவிக்கும். கோடீஸ்வரர்களிலேயே பொதுநலனை விரும்பும் பணக்காரர்களும் உண்டு, சுதந்திரச் சிந்தனையுள்ளவர்களும் உண்டு. ஆனால், இவர்கள் விதிவிலக்குகள் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

பெரும் கோடீஸ்வரர்கள் அரசியலுக்கு நேரடியாக வராவிட்டாலும் அரசியல்வாதிகளிடையே மிகுந்த செல்வாக்கு பெற்றுவிடுகிறார்கள். மக்கள் அவர்களுக்கு அரசியல் தொடர்பே இல்லை என்று தவறாக நினைப்பார்கள். அவர்களோ தங்கள் மீது வரிச்சுமை அதிகமாகிவிடாதபடித் தடுத்துவிடும் அளவுக்கு ஆட்சியாளர்களிடையே செல்வாக்கு பெற்றிருப்பார்கள். அவர்களுடைய நலனுக்கான நடவடிக்கைகளை ஆட்சியாளர்கள், ‘அத்தொழிலின் நன்மைக்காக’ என்று கூறி வரியைக் குறைத்தோ, வரியை ரத்துசெய்தோ, வரிச் சலுகை அளித்தோ காப்பாற்றுவார்கள்.

யார் பெரும் பணக்காரர்கள்?

அமெரிக்காவை இப்போது ஆளும் வலதுசாரி குடியரசுக் கட்சி, பெரும் பணக்காரர்களிடம்தான் அதிக நன்கொடைகளைப் பெறுகிறது. எனவேதான், ‘பெரும் பணக்காரர்கள்’ என்று கூறும்போது யாரைக் குறிப்பிடுகிறோம் என்று புரிந்து பேசுவது முக்கியம். பணக்காரர்கள் என்று நாம் கூறுவது மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்களை அல்ல; விதிவிலக்காக சிலர் அந்த ‘ஒரு சதவீதம்’ என்ற வரம்புக்குள் வருகிறவர்களாக இருந்தாலும்!

அந்தப் பிரிவில் இருப்பவர்கள் அபூர்வமான சமூக அந்தஸ்து மிக்கவர்கள். தொழில்நுட்பம் வளர வளர, பொது எது, தனி எது என்ற வேறுபாடுகள் மறையுமா? எதைப் பெற சமூகம் காத்திருக்கிறது? பணக்காரர்களின் விருப்பம் என்ன என்று ஆராயுங்கள், அதன் மூலம் உங்களுக்கு எது கிடைக்கும் என்பது புரியும். மிகவும் கண்ணியமான சமூகத்தை உருவாக்கும் பணியிலிருந்து பணக்காரர்களை ஒதுக்கி வைத்துவிட வேண்டும் என்று இதற்குப் பொருள் அல்ல. பணக்காரர்கள் அதிக வரி செலுத்த வேண்டும். பெரும் பணக்காரர்கள் அதைவிட அதிகமாக வரி கட்ட வேண்டும். அவர்கள் நம்மிலிருந்து வித்தியாசமானவர்கள். நம்மிடையேயான வர்க்க வேறுபாடு பெரியது - மக்கள் உணர்ந்திருப்பதைவிட ஆழமானது.

© தி நியூயார்க் டைம்ஸ், தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x