Last Updated : 15 Apr, 2019 10:07 AM

 

Published : 15 Apr 2019 10:07 AM
Last Updated : 15 Apr 2019 10:07 AM

இதுதான் இந்த தொகுதி: தென்காசி (தனி)

மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருப்பதால், இதமான தென்றல் காற்று, மிதமான வெயில், பருவ காலங்களில் அவ்வப்போது மெல்லிய சாரல் என்று இதமான சீதோஷ்ண நிலைக்குப் பெயர்பெற்ற தொகுதி தென்காசி. இத்தொகுதியில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிகளும், விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்றத் தொகுதியும் இடம்பெற்றுள்ளன. இந்த ஆறு தொகுதிகளுமே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கின்றன.

பொருளாதாரத்தின் திசை: முழுக்க முழுக்க விவசாயத்தையே நம்பியுள்ள தொகுதி. இத்தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழில் பிரதானம். வாசுதேவநல்லூரில் பெயரளவுக்கு ஒரு தனியார்ச் சர்க்கரை ஆலை இயங்கிவருகிறது. தற்போது விவசாயமும் நலிந்துவரும் நிலையில் பிழைப்புக்காக மக்கள் அண்டை மாநிலங்களை நாடிச் செல்லும் நிலை உள்ளது. அருவிகளுக்குப் பெயர்பெற்ற குற்றாலத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் சீசன் காலம். இக்காலங்களில் சுற்றுலாத் தொழில் கைகொடுக்கிறது.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: தென்காசியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும், விவசாயம் தொடர்பான தொழிற்சாலைகளை ஏற்படுத்துதல் ஆகியவை முக்கியக் கோரிக்கைகள். முன்பு வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்துசென்ற சுற்றுலாத் தலம் குற்றாலம். ஆனால், அரசின் பாராமுகத்தால் அந்தப் பெருமையை தற்போது இழந்து நிற்கிறது. ராஜபாளையம் புறவழிச் சாலை, ரயில்வே மேம்பாலம் மற்றும் நலிவடைந்துவரும் பஞ்சு மார்க்கெட் போன்றவை இப்பகுதியின் முக்கியப் பிரச்சினைகள். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காதது, விளைநிலங்களை அழித்து செங்கோட்டை வரை சாலை அமைப்பது, வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்கள் போன்றவை தேர்தலில் எதிரொலிக்கும்.

நீண்ட காலக் கோரிக்கைகள்: இந்தப் பகுதியில் அதிகளவில் மலர்ச் சாகுபடி செய்யப்படுவதால் வாசனை திரவியத் தொழிற்சாலை அமைக்க வேண்டும். தென்காசியிலிருந்து திருநெல்வேலி செல்லும் 52 கி.மீ. தூரமுள்ள சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்.  கிடப்பில் போடப்பட்டுள்ள தூத்துக்குடி – கொச்சி சாலைப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.  திராட்சை குளிர்பதனக் கிட்டங்கி அமைக்க வேண்டும், தென்னை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும், செண்பகவல்லி அணையைச் சீரமைக்க வேண்டும் ஆகியவை நீண்ட காலக் கோரிக்கைகளாக உள்ளன.

ஒரு சுவாரஸ்யம்: இத்தொகுதியில் 1977 முதல் 1996 வரை நடந்த ஆறு தேர்தல்களில் எம்.அருணாச்சலம் தொடர்ந்து வெற்றிபெற்றிருக்கிறார்.

வெற்றியை தீர்மானிக்கும் சமூகங்கள்: பட்டியலினத்தவர் கணிசமான அளவில் இருக்கின்றனர். முஸ்லீம், முக்குலத்தோர், நாடார், நாயுடு, ராஜுக்கள், பிள்ளைமார் உள்ளிட்ட பிற சமூகத்தினர் அடுத்தடுத்த நிலைகளில் இருக்கின்றனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இத்தொகுதியில் 1957 முதல் 1991 வரை நடந்த 9 தேர்தல்களில் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. 1996-ல் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எம்.அருணாச்சலம் ஆறாவது முறையாக வெற்றிபெற்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 முறையும், அதிமுக 2 முறையும் இத்தொகுதியில் வெற்றிபெற்றுள்ளன.

களம் காணும் வேட்பாளர்கள்

திமுக தனுஷ்குமார்

அதிமுக கிருஷ்ணசாமி

மக்கள் நீதி மய்யம் முனீஸ்வரன்

அமமுக பொன்னுத்தாய்

வாக்காளர்கள்

மொத்தம்: 14,72,670

ஆண்கள் 7,25, 035

பெண்கள் 7,47,555

மூன்றாம் பாலினத்தவர்கள் 80

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்:86%

முஸ்லிம்கள்: 8%

கிறிஸ்தவர்கள்: 6 %

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 82.50%

ஆண்கள் 89.24%

பெண்கள் 75.98%

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x