Published : 08 Apr 2019 09:20 AM
Last Updated : 08 Apr 2019 09:20 AM
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் (தனி), திருச்செங்கோடு என்று இரண்டு மக்களவைத் தொகுதிகள் இருந்தன. கடந்த 2009-ல் தொகுதி மறுசீரமைப்பின்போது மேற்குறிப்பிட்ட இரு தொகுதிகளும் நீக்கப்பட்டு, நாமக்கல் மக்களவைத் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. இது நாமக்கல், ராசிபுரம் (எஸ்.சி), சேந்தமங்கலம் (எஸ்.டி), திருச்செங்கோடு, பரமத்தி வேலூர் மற்றும் சேலம் மாவட்டத்தின் சங்ககிரி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் மூலிகை மலை என்றழைக்கப்படும் கொல்லிமலை உள்ளது. இம்மலையைத் தலைமையிடமாகக் கொண்டுதான் தமிழகத்தின் கடையெழு வள்ளல்களில் ஒருவரான ஓரி ஆட்சிசெய்தார்.
பொருளாதாரத்தின் திசை: பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. பரமத்தி வேலூர், மோகனூர் பகுதிகளில் வாழை, வெற்றிலை, தென்னை போன்றவை பிரதான பயிர்கள். நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோட்டில் லாரி, கோழிப்பண்ணை மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கும் ரிக் ஆகியவை பிரதான தொழில்கள். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 1,500 கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டையில் 90% நாமக்கல் முட்டைகளாகும்.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: நாட்டின் எந்த ஒரு மூலையில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும், நாமக்கல்லிலிருந்து முட்டை ஏற்றுமதி செய்வது தடைபடுகிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் நாமக்கல்லைத் தனி மண்டலமாக அறிவிக்க வேண்டும் எனப் பல ஆண்டுகளாகக் கோழிப்பண்ணையாளர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதுபோல், லாரித் தொழிலுக்கென தனி நலவாரியம், லாரி ஸ்டாண்ட் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. நாமக்கல் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என 7 ஆண்டுகளுக்கு முன் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டும் பணிகள் தொடங்கப்படவில்லை. நாமக்கல், திருச்செங்கோட்டில் வட்டச் சாலைத் திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன.
நீண்ட காலக் கோரிக்கைகள்: நாமக்கல் மாவட்டம் வழியாகக் காவிரி பாய்ந்து சென்றாலும் கரையோரம் நீங்கலாகப் பிற பகுதிகளில் காவிரிப் பாசனம் இல்லை. ஆழ்துளைக் கிணறு மற்றும் ஏரிப் பாசனத்தை நம்பியே விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்குத் தீர்வாகக் காவிரி - சரபங்கா - திருமணிமுத்தாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் எனப் பல ஆண்டு காலமாகக் கோரிக்கை விடுக்கப்படுகிறது. பரமத்தி வேலூர் சுற்று வட்டாரத்தில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேறவில்லை. மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இணை மின் உற்பத்தித் திட்டம் பல கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. எனினும், மின் உற்பத்தி தொடங்கப்படாமல் உள்ளது.
ஒரு சுவாரஸ்யம்: கோழிப் பண்ணை உரிமையாளர்களைக் கவர வேண்டும் என்று எல்லாக் கட்சி வேட்பாளர்களுமே முயல்கிறார்கள். கூண்டுக்குள் கோழி வளர்க்கக் கூடாது என்ற மத்திய அரசின் திட்டத்தை ரத்துசெய்வேன் என்பது முக்கிய வாக்குறுதியாக இருக்கிறது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: தொகுதியில் கொங்கு வேளாளர், நாட்டுக் கவுண்டர் உள்ளிட்ட உட்பிரிவுகளைக் கொண்ட கவுண்டர் இன மக்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: நாமக்கல் மக்களவைத் தொகுதி கடந்த 2009-ம் ஆண்டு உதயமானது. அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. அடுத்து வந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அந்த வகையில் திமுக, அதிமுகவும் தொகுதியைத் தலா ஒரு முறை கைப்பற்றியுள்ளது.
வாக்காளர்கள் யார்?
மொத்தம் 13,77,987
ஆண்கள் 6,74,053
பெண்கள் 7,03,815
மூன்றாம் பாலினத்தவர்கள் 119
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள்: 96.93 %
முஸ்லிம்கள்: 1.88 %
கிறிஸ்தவர்கள்: 0.98 %
பிற சமயத்தவர் 0.02%
எழுத்தறிவு எப்படி?
மொத்தம் 74.63 %
ஆண்கள் 82.64 %
பெண்கள் 60.98 %
புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT