Published : 16 Apr 2019 09:35 AM
Last Updated : 16 Apr 2019 09:35 AM
மேற்கு தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மிக்க மாவட்டங்களில் முக்கிய நகரம் திருப்பூர். நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் இந்நகருக்கு முக்கியப் பங்கு உண்டு. சென்னைக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வாழும் மாவட்டம் இது. கோவை மாவட்டத்துடன் இணைந்திருந்த திருப்பூர் 2008-ல் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மூன்றே மாதங்களில் திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டது. திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பவானி, அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், பெருந்துறை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதில் அடங்கியுள்ளன.
பொருளாதாரத்தின் திசை: பின்னலாடை உற்பத்தி மற்றும் அதைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள், சிறு குறு நிறுவனங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும். ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி அளவுக்கு வெளிநாட்டு ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுப் பின்னலாடை வர்த்தகத்தைக் கொண்ட பகுதி. நாட்டின் அந்நியச் செலாவணி மதிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. திருப்பூர் நகரைத் தவிர தொகுதிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் விவசாயம் சார்ந்தவை. அரிசி, கரும்பு, வாழை, தென்னை, பருத்தி, சோளம், தக்காளி உள்ளிட்டவை பிரதான பயிர்களாக உள்ளன. பாரம்பரிய பாத்திர உற்பத்தி, வெண்ணெய், தயிர் உற்பத்தி, சிற்பத் தொழில். விசைத்தறித் தொழில் ஆகியவையும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்துக்கான அம்சங்களாக உள்ளன.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: பணமதிப்புநீக்கம் மற்றும் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கத்தால் தொழில் துறையினர் கடுமையான பாதிப்பைத் சந்தித்தனர். பின்னலாடை துறை சார்ந்த நிறுவனங்களும் சிறு,குறு நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்துள்ளன. அதோடு நேரடிப் பாசனத் திட்டத்துக்கான நீராதாரங்கள் மாவட்டம் முழுமைக்கும் இல்லாத நிலையில் பெரும்பான்மையான விவசாயிகள் நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். மேலும், மாவட்டத்தில் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. போக்குவரத்து நெரிசல் பெரும் பிரச்சினை. ஜீவ நதியான நொய்யல் நாளுக்கு நாள் மாசுபட்டுவருகிறது. கிளை நதிகளான நல்லாறு, கெளசிகா நதிகளின் வழித்தடங்கள் ஆக்கிரமிப்புகளில் சிக்கியுள்ளன.
நீண்ட காலக் கோரிக்கைகள்: மாவட்டத்தில் குறிப்பிட்ட சதவீத மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கான தண்ணீர்த் தேவையைப் பூர்த்திசெய்ய, கடந்த 60 ஆண்டுகளாக அத்திக்கடவு - அவிநாசி திட்டம் வலியுறுத்தப்பட்டுவருகிறது. தற்போது திட்டத்துக்கான தொடக்கப் பணிகள் நடந்துவருகின்றன. திருப்பூர் நான்காம் குடிநீர் திட்டப் பணிகள் ஆரம்ப கட்டத்தில் உள்ளன. பின்னலாடை துறைக்கென தனி வாரியம் அமைக்கப்பட வேண்டும் எனத் தொழில் துறையினர் கோரிவருகிறார்கள். பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம், விவசாயிகளுக்குப் பயன்படும் குளிர்பதன சேமிப்புக் கிடங்குகள், விசைத்தறிக்குத் தனி ரகம் ஒதுக்கீடு என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் நீண்ட காலமாக உள்ளன.
ஒரு சுவாரஸ்யம்: வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்தவர் ராமகிருஷ்ண ஹெக்டே. 1999-ல் திருப்பூரில் நடைபெற்ற ஏற்றுமதியாளர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சராகப் பங்கேற்க வந்தவர், அதே நாளில் மத்தியில் ஆட்சி கவிழ்ந்த காரணத்தால் பதவி இழக்க நேரிட்டது. அன்றைய தினம் காவல் துறையினர் வற்புறுத்தியும் அமைச்சருக்குரிய வாகன வசதிகளைத் தவிர்த்து, நண்பரின் காரில் திரும்பிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: கொங்கு வேளாளர் சமூகத்தினரும், அருந்ததியர் சமூகத்தினரும் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இவர்களே வெற்றியைத் தீர்மானிப்பவர்களாகவும் உள்ளனர். அவர்களுக்கு அடுத்த நிலையில் முதலியார், செட்டியார் சமூகங்கள் உள்ளன.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: திருப்பூர் மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டு 2009 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற்றுள்ளது. இரு தேர்தல்களிலும் அதிமுகவே வெற்றி பெற்றுள்ளது.
களம் காணும் வேட்பாளர்கள்
அதிமுக எம்.எஸ்.எம்.ஆனந்தன்
இந்திய கம்யூனிஸ்ட் கே.சுப்பராயன்
மக்கள் நீதி மய்யம் வி.எஸ்.சந்திரகுமார்
அமமுக எஸ்.ஆர்.செல்வம்
நாம் தமிழர் ஜெகநாதன்
வாக்காளர்கள் யார்?
மொத்தம்: 15,29,836
ஆண்கள்: 7,62,935
பெண்கள்: 7,66,765
மூன்றாம் பாலினத்தவர்கள்: 136
சமூகங்கள் என்னென்ன?
இந்துக்கள்: 91.92%
முஸ்லிம்கள்: 5.00%
பிற சமயத்தவர் 0.26%
புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT