Last Updated : 09 Apr, 2019 09:03 AM

 

Published : 09 Apr 2019 09:03 AM
Last Updated : 09 Apr 2019 09:03 AM

அசாம் கண பரிஷத்: மாணவர்களின் எழுச்சியில் முகிழ்த்த கட்சி

அசாமில் சட்ட விரோதமாகக் குடியேறியவர்களையும் ஊடுருவியவர்களையும் கண்டுபிடித்து வெளியேற்ற அசாமியர்கள் நடத்திய கிளர்ச்சியில் அம்மாநில மாணவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். அதற்கான உடன்பாடு 1985-ல் கையெழுத்தான பிறகு, அதை நடைமுறைப்படுத்தவும் அசாமியர்களின்  நலன்களைப் பாதுகாக்கவும் உருவானதுதான் அசாம் கண பரிஷத் (ஏஜிபி).

அன்றைய கிழக்குப் பாகிஸ்தானிலிருந்து (பின்னாளில் வங்கதேசம்) ஏராளமானோர் 1972 முதல் அசாமுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் அசாமியர்களின் தொழில், விவசாயம், வியாபாரத் துறைகளில் நுழைந்து மெள்ள மெள்ள ஆக்கிரமிக்கத் தொடங்கினர். அசாமிலேயே பிறந்து வளர்ந்தவர்களின் எண்ணிக்கையைவிட ஊடுருவியவர்களின் எண்ணிக்கை பலமடங்காக உயர்ந்தது. அவர்கள் அப்படியே வாக்காளர் பட்டியலிலும் இடம்பெற்றதால் அரசியல் செல்வாக்கும் கூடியது. அரசியல் கட்சிகளும் அவர்களுடைய வாக்குகளுக்காக ஊடுருவல் பிரச்சினையைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

அசாம் மக்கள் மிகவும் சாத்வீகமான முறையில் ஆறு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் 855 பேர் இறந்தனர். பிறகு மத்திய அரசு அவர்களை அழைத்துப் பேசியது. 15.8.1985-ல் பிரதமர் ராஜீவ் காந்தி முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டது. அன்னியர்களை அடையாளம் கண்டு வெளியேற்ற உடன்பாடு உறுதி கூறியது. அனைத்து அசாம் மாணவர் பேரவை என்ற போராட்டக் குழுவே அசாம் கண பரிஷத் என்ற அரசியல் கட்சியானது.  1985-ல் நடந்த பொதுத் தேர்தலில் சட்டமன்றத்தின் 126 இடங்களில் 67-ஐ ஏஜிபி கைப்பற்றியது. 14 மக்களவைத் தொகுதிகளில் 7 ஏஜிபிக்குக் கிடைத்தது. அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிரபுல்ல குமார் மகந்தா மிக இளம் வயதிலேயே முதலமைச்சரானார். இதற்கிடையே, அசாம் கண பரிஷத் தலைமையிலான அரசின் ஊழல்களும் உட்பூசல்களும் திறமைக் குறைவும் மக்களை அதிருப்திக்குள்ளாக்கின. சிறிது இடைவெளிக்குப் பிறகு 1996-ல் ஏஜிபி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பிரபுல்ல குமார் மீண்டும் முதல்வரானார். ஆயினும், சட்ட விரோதமாகக் குடியேறும் ‘அன்னியர்’ பிரச்சினை இன்னமும் தீரவில்லை. இதற்கிடையே ‘போடோலாந்து மக்கள் முன்னணி’ என்ற கட்சி தனியாக உருவாகி, போடோ மக்களுக்காகச் செயல்பட்டது. அது அசாம் கண பரிஷத்தின் செல்வாக்கைக் குறைத்தது.

இப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஏஜிபியும் இடம்பெற்றுள்ளது. ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதில் இடம்பெறாதவர்கள் உரிய ஆவணங்கள் வைத்திருந்தால் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உறுதியளித்திருக்கிறது. இந்த நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் இப்போது தனது மேற்பார்வையில் கண்காணிக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x