Published : 12 Apr 2019 09:21 AM
Last Updated : 12 Apr 2019 09:21 AM
இந்திய நாடாளுமன்றத்துக்குப் பெருமைசேர்த்த உறுப்பினர்களில் கொங்கணத்தைச் சேர்ந்த நாத் பாய் (1922-1971) முக்கியமானவர். ராஜாபூர் மக்களவைத் தொகுதியிலிருந்து 1957, 1962, 1967 என்று மூன்று முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞருமான நாத் பாய், பிரஜா சோஷலிஸ்ட் கட்சியின் தூண்களில் ஒருவர்.
மராத்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசியவர் நாத் பாய். அவர் பேசத் தொடங்கினால் மக்களவை முழுவதும் அவர் வசமாகிவிடும். ஆளுங்கட்சியைக் கதிகலங்கவைத்துவிடுவார். ஆங்கிலம், மராத்தி, சம்ஸ்கிருதம் என்று எல்லா மொழிகளிலிருந்தும் மேற்கோள்களாக வந்து விழும். பழைய சம்பவங்களை நினைவுகூர்வார், கதைகளைச் சொல்வார், தான் பேசவந்த விஷயத்தைவிட்டு சற்றும் விலகமாட்டார். சட்டபூர்வமாக எதையும் அலசுவார். கேட்போர் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கச் செய்துவிடுவார். மிகவும் நாசூக்காகவும் பேச வேண்டியவற்றை அழகாகவும் பேசி, பல இளம் உறுப்பினர்களுக்கு அவர் முன்மாதிரியாக இருந்திருக்கிறார். யுனெஸ்கோவின் மனித உரிமைகள் குழுவில் உறுப்பினராகப் பல ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT