Last Updated : 03 Apr, 2019 02:18 PM

 

Published : 03 Apr 2019 02:18 PM
Last Updated : 03 Apr 2019 02:18 PM

மகேந்திரனின் விஜயன் பாத்திரமும் இயொனெஸ்கோவின் காண்டாமிருகங்களும்

தமிழகத்தைப் பொறுத்த வரையிலும் 1970-களின் இறுதி எப்படி இருந்தது என்பதைத் தமிழ்த் திரைப்படங்களைப் பார்த்தால் கிட்டத்தட்ட தெரிந்துகொள்ளவே முடியாது. அவ்வளவு அரசியலற்றதன்மையைத்தான் நம் படங்கள் கொண்டிருந்தன. இத்தனைக்கும் இந்தியாவையே தலைகீழாக மாற்றிப்போட்ட நெருக்கடிநிலை முடிவுக்கு வந்து எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சுவிட ஆரம்பித்திருந்த நிலை. எல்லோரும் அஞ்சியது எங்கோ மையமாக ஒரு இடத்தில் இருந்துகொண்டு எல்லோர் மீதும் ஒடுக்குமுறையைச் செலுத்திக்கொண்டிருந்த ஒரு சர்வாதிகாரியைக் கண்டல்ல. தன்னிடமும் சக மனிதர்களிடமும் உறங்கிக்கொண்டும் வெளிப்பட்டுக்கொண்டுமிருந்த சர்வாதிகாரியைக் கண்டுதான். அந்தக் காலகட்டம் முடிவுக்கு வந்தபோது வெளியாகிறது ‘உதிரிப்பூக்கள்’ திரைப்படம். மகேந்திரனின் படங்களும் பெரும்பாலும் அரசியலற்றவை என்றாலும் இப்போது திரும்பிப் பார்க்கும்போது ‘உதிரிப்பூக்கள்’ படம் மிக முக்கியமான அரசியல் ஒன்றை உள்ளடங்கிப் பேசுவதாகவே தோன்றுகிறது.

தன் மனைவி அஸ்வினி உயிரோடு இருக்கும்போதே மனைவியின் தங்கையைத் திருமணம் செய்துகொள்ள நினைக்கும் பாத்திரம் விஜயனுடையது. அது நடக்காமல் போகிறது. அவருடைய மனைவி இரு குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துபோகிறார். விஜயனும் வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்கிறார். இதற்கிடையே விஜயனின் மச்சினிக்கும் பள்ளிக்கூட ஆசிரியரான சுந்தருக்கும் காதல் மலர்ந்து திருமணம் நிச்சயமாகிறது. திருமணத்துக்கு முதல் நாள் விஜயன் வீட்டுக்குச் செல்லும் மச்சினி மது மாலினி தன் அக்காவின் குழந்தைகள் இரண்டையும் தன்னிடம் கொடுக்குமாறு கேட்கிறார். மது மாலினியை நிர்வாணமாக்கி, அதையே தன் ஆசிர்வாதமாக வைத்துக்கொள்ளும்படி விஜயன் அனுப்பிவிடுகிறார். தான் அவளைப் பாலியல் பலாத்காரம் ஒன்றும் செய்துவிடவில்லை என்றும் சொல்லிக்கொள்கிறார். விஜயன் செய்த காரியம் ஊரில் உள்ளவர்களுக்குத் தெரிந்துவிட அவருடைய வீட்டை முற்றுகையிட்டு அவரைப் பிடிக்கின்றனர்.

விஜயனுக்குத் தண்டனை கொடுப்பதற்காக அந்த ஊரில் உள்ள ஆற்றை நோக்கி அவரை அழைத்துச் செல்கிறார்கள். தனக்கு நீச்சல் தெரியாது என்பதற்காகவே ஊரில் உள்ள மற்றவர்களை நீச்சல் கற்றுக்கொள்ள விடாமல் தடுத்த விஜயனை ஆற்றில் இறக்கிவிடுவதற்காகக் கொண்டுசெல்கிறார்கள். ஏதோ விளையாட்டு இது என்று அந்தக் குழந்தைகளும் அவர்களோடு நாமும் அந்த அமைதியான காட்சியைப் பின்தொடர்கிறோம். ஆற்றில் இறக்கிவிடப்படுவதற்கு முன்பு அந்த ஊராரைப் பார்த்து விஜயன் இப்படிச் சொல்வார்: “நீங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்களா இருந்தீங்க. ஆனா, இன்னைக்கு உங்க எல்லாரையும் என்னைப் போல மாத்திட்டேன். நான் செஞ்ச தவறுகளிலேயே பெரிய தவறு அதுதான்.”

இன்று எந்த சர்வாதிகாரியும் இதுபோன்ற ஒரு மனம் திருந்தலை முன்வைக்க மாட்டார் என்றாலும் மக்களாகிய நாம் என்னவாகிக்கொண்டிருக்கிறோம் என்பதை மகேந்திரன் அந்தக் காட்சியின் மூலம் மிக அழகாகச் சொல்லியிருப்பார். கூடவே, யூழேன் இயொனெஸ்கோவின் ‘காண்டாமிருகம்’ என்ற நாடகத்துடன் இந்த இறுதிக் காட்சியை ஒப்பிடத் தோன்றுகிறது எனக்கு (தமிழில் ‘க்ரியா’ வெளியீடு).

1959-ல் மேடையேற்றப்பட்ட அந்த பிரெஞ்சு நாடகம் நாஜிக்களின் காலகட்டம் ஏற்படுத்திய தாக்கத்தை மறைமுகமாக உணர்த்துவது. ஒரு ஊரில் காண்டாமிருகங்களின் தாக்குதல் ஆரம்பிக்கிறது. போகப் போக ஒவ்வொருவரும் காண்டாமிருகமாக ஆகஆரம்பிக்கிறார்கள். யாரெல்லாம் உறுதியான காண்டாமிருகம் எதிர்ப்பாளர்கள் என்று நினைத்தோமோ அவர்களெல்லாம் மாற்றமடைகிறார்கள். கதாநாயகன் பெராஞ்சர் மட்டுமே அத்தனை பேருக்கும் நடுவில்

மனிதனாக எஞ்சுகிறான். நாஜிக்களின் காலகட்டத்தில் எத்தனையெத்தனை மகத்தான எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிவுஜீவிகள், தத்துவவியலாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நாஜிக்களின் ஆதரவாளர்களாக மாறியிருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு இன்று அதிர்ச்சியாக இருக்கிறது. மனித வாழ்க்கை குறித்தும் அன்பு, அறம் போன்றவை குறித்தும் அவர்களின் படைப்புகள் நமக்கு அவ்வளவு சொல்லியிருக்கின்றன. ஆனால், அவர்கள் இறுதியில் ஹிட்லரிடம் போய் நின்றார்கள். மகேந்திரன் இயொனெஸ்கோவைப் படித்திருப்பாரோ, இல்லையோ; இயொனெஸ்கோ பிடித்த இழையை எளிய வாழ்க்கையின் சித்திரங்கள் மூலம் அழகாக ‘உதிரிப்பூக்கள்’ விஜயன் மூலம் சொல்லியிருக்கிறார் என்றே தோன்றுகிறது.

இயொனெஸ்கோவின் பெராஞ்சர் மாதிரியான இரண்டு பாத்திரங்கள் ‘உதிரிப்பூக்கள்’ இறுதிக் காட்சியில் வெளிப்பட்டிருக்கும். அது மது மாலினியைத் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் ஆசிரியர் பாத்திரமும் அவருடைய நண்பர் பாத்திரமும்தான்.

யாரேனும் விஜயன் மீது மிகுந்த கோபம் கொண்டி ருக்க வேண்டுமென்றால் அது அந்த ஆசிரியர்தான். ஆனால், ஆற்றை நோக்கி இறங்கிக்கொண்டிருக்கும் விஜயனைத் தடுப்பதற்கு அந்த ஆசிரியரும் அவருடைய நண்பரும்தான் முயல்வார்கள். ஆனால், அவர்களிருவரையும் ஊரார் தடுத்து நிறுத்திவிடுவார்கள். கும்பல் வன்முறை, கும்பல் கொலைகளுக்கு நடுவே ஒற்றை நபர்களாய்ச் சிலர் துடித்துக்கொண்டிருப்பதையும் அவர்களே நாம் முற்றிலுமாக நம்பிக்கை இழந்துவிடாமல் நம்மைப் பாதுகாத்துக்கொண்டிருப்பதையும் நம் காலத்திலும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்!

மகேந்திரனின் இன்னொரு சிறந்த படைப்பும், ரஜினிக்கு அவர் நடித்ததிலேயே மிகவும் பிடித்ததுமான ‘முள்ளும் மலரும்’கூட வேறொரு அதிகாரத்தைப் பற்றிப் பேசுவதுதான். அன்பின் அதிகாரம் அது. இறுதிக் காட்சியில், தன் அண்ணனின் (ரஜினி) விருப்பத்துக்கு மாறாகத் தன் காதலனுடன் (சரத்பாபு) சென்றுகொண்டிருக்கும் தங்கை (ஷோபா) கையறு நிலையுடன் நின்றுகொண்டிருக்கும் அண்ணனை நோக்கி ஓடிவந்துவிடுவார். காதலைக் கைவிட்ட முடிவல்ல அது. தன் மேல் அளப்பரிய அன்பை வைத்திருக்கும் இன்னொரு ஜீவனைத் தன் அன்பினால் நெகிழ்த்திவிடத் துடிக்கும் துடிப்பின் விளைவு அது. அந்த நெகிழ்த்துதல்தான் ஷோபாவை அவருடைய காதலனுடன் சேர்த்துவைக்கும் முடிவை ரஜினி எடுக்கக் காரணமாகிறது.

அன்பையும் அறத்தையும் பற்றிப் பேசிக்கொண்டே அவற்றையும் அதிகாரமாக நாம் ஆக்கிக்கொண்டிருக்கும் காலம் இது. அதிகாரத்தின் தரப்பையல்ல, அன்பின் தரப்பில் உருவாகும் அதிகாரத்தைப் பற்றி எளிமையும் இனிமையும் கொண்ட காட்சிகளுடனான படங்களை உருவாக்கியவர் மகேந்திரன். நாம் காண்டாமிருகங்களாகவும் விஜயன்களாகவும் ஆகிவிடாமல் இருக்க ஒவ்வொரு காலத்துக்கும் இயொனெஸ்கோ, மகேந்திரன் மாதிரியான படைப்பாளிகள் தேவை. அவர்கள் என்றுமே உதிராத பூக்களாக நம்மிடையே இருப்பார்கள்.

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.inதம்பி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x