Last Updated : 29 Mar, 2019 09:30 AM

 

Published : 29 Mar 2019 09:30 AM
Last Updated : 29 Mar 2019 09:30 AM

திராவிட நாட்டைக் கட்டமைக்க தமிழ்நாட்டுக்கு வெளியே அண்ணா மேற்கொண்ட பயணம்

திராவிட எனும் சொல் கிபி ஏழாம் நூற்றாண்டு கல்வெட்டு, மனு ஸ்மிருதியின் குறிப்பு ஆகியவற்றிலேயே இடம்பெற்றிருந்தாலும், காலனிய ஆட்சிக் காலத்தில்தான் அது அரசியல் சொல்லாடலாக அறியப்படலானது. எல்லீஸ், ஹாட்சன் ஆகியோர் பயன்படுத்திய இச்சொல்லை, 1856-ல் ‘திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ நூலை வெளியிட்டு, பரவலாக அறியச்செய்தவர் கால்டுவெல். 1885-ல் ரெவரெண்ட் ஜான் ரத்தினம், பண்டிதர் அயோத்திதாசருடன் இணைந்து ‘திராவிடர் கழகம்’ என்ற ஆதி திராவிடர்களுக்கான அமைப்பையும், அதற்கென ‘திராவிட பாண்டியன்’ என்ற ஏட்டையும் உருவாக்கியபோது அச்சொல் புத்துயிர் பெற்றது. பிராமணரல்லாதோர் உரிமைகளுக்காகத் தொடங்கப்பட்ட நீதிக் கட்சியின் வழித்தோன்றல்கள் 1920-களில் அச்சொல்லைப் பயன்படுத்தலானார்கள். மொழியையும் இனத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட இச்சொல், பெரியார் காலத்தில் வடக்கை எதிர்கொள்ளும் தெற்கின் அடையாளமாக உருவெடுத்தது. 1930-களின் இறுதியில் இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்றபோது, நீதிக் கட்சியினரால் கோரிக்கை வைக்கப்பட்டபோது ‘திராவிட நாடு’ முழக்கம் உயிர் பெற்றது. அப்போதைய மெட்ராஸ் மாகாணமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசுபவர்களின் தொகுதியாக இருந்ததால், இந்த முழக்கம் கூடுதல் பொருத்தம் பெற்றது.

திராவிட நாடு முழக்கத்தின் தொடக்கத்திலிருந்தே அண்ணாவுக்குப் பங்கிருந்தது. 1940 திருவாரூர் நீதிக் கட்சி மாநாட்டில் ‘திராவிட நாடு திராவிடருக்கே’ என்ற முழக்கம் வைக்கப்பட்டபோதும் சரி, 1942-ல் பெரியார் தலைமையில் கிரிப்ஸ் குழுவிடம் திராவிட நாடு கோரிக்கை முன்வைக்கப்பட்டபோதும் சரி; அண்ணாவும் உடனிருந்தார். திராவிடர் கழகத்திலிருந்து விலகி 1949-ல் திமுகவைத் தொடங்கிய அண்ணா, தமிழ்நாட்டைத் தாண்டி அதற்கெனப் பெரிய முனைப்புகளைக் காட்டவில்லை என்று இன்று பலரும் பேசுகிறார்கள். அது சரியல்ல. டி.எம்.நாயர், பெரியார் போன்றவர்கள் திராவிட நாடு கோரிக்கையை முன்வைத்தாலும், அதனை அடைவதற்கான செயல்திட்டங்களைக் கொண்டிருக்க‌வில்லை. திராவிட நாடு கனவு சார்ந்து தன்னுடைய சாத்தியங்களுக்கு உட்பட்ட வகையில் நிறைய செயல்பாடுகளை முன்னெடுத்தார் அண்ணா. திராவிட நாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அவருக்கு நிச்சயமான செயல்திட்டம் இருந்தது.

அண்ணாவின் அணுகுமுறை

இந்தியாவில் மொழிவாரி மாநிலங்களை அமைப்பது என்ற முடிவை நேரு அரசு எடுத்ததன் பின்னணியில் அண்ணாவின் திராவிட நாடு திட்டத்தை உருக்குலைக்கும் வியூகமும் இருந்தது. இன்றைய கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தின் பகுதிகள் புவியியல்ரீதியாக மெட்ராஸ் மாகாணத்துடன் இணைந்திருந்த நிலையில், மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்கும்போது இயல்பாக திராவிட நாடு கோரிக்கை பிசுபிசுக்கும் என எண்ணியது அரசு.

இதைப் புரிந்துகொண்ட அண்ணா, மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கும் அரசின் திட்டத்தை வரவேற்றார் – அதாவது, எதிர்ப்புத் தெரிவித்து கேரள, ஆந்திர, கன்னட மக்களை அவர் பகைத்துக்கொள்ளவில்லை. “திராவிட நாட்டின் அங்கமான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் பேசும் நிலங்கள் நான்கு மாநிலங்களாக உருவாவது உடனடித் தேவை. இவ்வாறு உருவாவதன்மூலம் ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்தின் நிலத்தை அபகரித்துக்கொள்ளாதவாறு தடுக்க முடியும்” என்று அறிக்கை வெளியிட்டது திமுக. அதேசமயம், மொழிவாரி மாநிலங்களாகத் தமிழகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களும் பிரிந்த பின்னர் சுயநிர்ணய அடிப்படையில் சுயாட்சி பெற்ற மாநிலங்களாக இயங்க வேண்டும் என அண்ணா விரும்பினார்.

இந்த நான்கு மாநில அரசுகளையும் இணைத்துக் கூட்டாட்சி முறையில் சுதந்திர திராவிடக் குடியரசை உருவாக்க எண்ணினார். 1953 அக்டோபர் 1 அன்று ஆந்திரா பிரிந்துசென்றபோது திமுக சார்பில் அனுப்பப்பட்ட வாழ்த்துக் கடிதம் இதைத் துல்லியமாக்குகிறது. “ஆந்திரப் பிரிவினையை மனதாரப் பாராட்டுகிறோம். திராவிட இனவழி மக்களைக் கொண்ட ஜனநாயகக் கூட்டாட்சிக் குடியரசில் ஆந்திராவும் ஒரு உறுப்பினராக இணைந்திடும் நாளை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறோம்.”

அதாவது, நான்கு மாநிலங்களும் சம உரிமை பெற்றவையாக இருக்கும். நான்கு மொழிகளும் ஆட்சிமொழிகளாக இருக்கும். கூடவே, ஆங்கிலமும் இணைப்புமொழியாக இருக்கும். திராவிட நாட்டில் ஒரு மாநிலத்தின் மீது இன்னொரு மாநிலம் ஆதிக்கம் செலுத்தாத வகையில் சம அதிகாரம் இருக்கும். திராவிட மொழிகளில் தமிழ்தான் மூத்தது என்றாலும், கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகியவற்றுக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்று யோசித்ததன் மூலம் நான்கு இனங்களுக்கும் சம உரிமை கிடைப்பதற்கான சிந்தனையை வளர்த்தெடுத்தார்.

வலுவான கட்டமைப்பு வலைப்பின்னல்

திமுகவின் தொடக்க நாட்களிலேயே பெங்களூரு, சித்தூர், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில் கிளைகள் உருவாகின. இந்தக் கிளைகள் அந்தந்த மாநில அமைப்புகளுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் விதமாக அமைக்கப்பட்டன. ஆனால், கர்நாடகத்தில் தமிழர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் திமுகவின் வேகம் அங்கே அதிகம் இருந்தது. விளைவாக, தமிழ்நாட்டுக்கு வெளியே முதலில் வலுவாக அமைப்பை உருவாக்க வாய்ப்புள்ள மாநிலமாக கர்நாடகத்தைக் கருதிய அண்ணா அங்கே கட்சியைக் கட்டியெழுப்பி அதே மாதிரியை ஏனைய இரு மாநிலங்களுக்கும் கொண்டுசெல்ல முற்பட்டார்.

சென்னையில் திமுக தொடங்கப்பட்ட அதே நாளில் கோலார் தங்க வயலிலும், பெங்களூருவிலும் அதன் கிளைகள் உதயமாகின. மாவட்டம், வட்டம், நகரம், பகுதி, ஒன்றியம், வட்டாரம் என அத்தனை நிலைகளிலும் வலுவான உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அலுவலகம், கொடிக் கம்பம், உட்கட்சித் தேர்தல், இதழ், படிப்பகம், இலக்கிய மன்றம், நாடக மன்றம், மாநாடு, பிரச்சாரம், பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் என‌ அனைத்துத் தளங்களிலும் கட்சி தீவிரமாக இயங்கியது.

அண்ணா நாடகச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்த காலகட்டத்திலேயே அடிக்கடி பெங்களூரு வந்துசென்றவர், மாதக்கணக்கில் தங்கியிருந்தார். காந்தி நகர் குப்பி வீரண்ணா அரங்கில் கே.ஆர்.ராமசாமி நாடகக் குழுவின் சார்பில் அண்ணா எழுதிய நாடகங்கள் அரங்கேறியபோது கூட்டம் அலைமோதும். ஆகையால், அப்போதைய சந்திப்புகள் கன்னட மக்கள், மொழி, பண்பாடு, வரலாறு குறித்து அவருக்கு ஒரு புரிதலை உருவாக்கியிருந்தது எனலாம்.

தமிழ் நிலத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயரை மீட்டுக்கொடுத்தவர் அண்ணா என்பது உலகறிந்தது. இன்று பலருக்குத் தெரியாத உண்மை, கர்நாடகம் அதன் பெயரைப் பெறுவதற்கும் குரல் கொடுத்தவர் அண்ணா என்பதாகும். “இந்த மாநிலத்தை ‘மைசூரு மாநிலம்’ என்ற பெயரில் அழைப்பது தவறு. ‘கருநாடகம்’ என்று இம்மாநிலத்துக்குப் பெயர் சூட்ட வேண்டும்” என்று கூறிய அண்ணா இதற்கு ஆதாரமாக தமிழ் இலக்கியங்களில் மேட்டுப் பகுதியில் இருக்கும் இந்த நிலப்பரப்பு ‘கருநாடகம்’ என்றே குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

திமுக இதைத் தீர்மானமாக நிறைவேற்றியது. திமுக தொடங்கிய பின்னர் முதல் முறையாக 1956-ல் சிவாஜி நகரில் – அன்றைக்குக் கருப்பர் டவுன் என்றழைக்கப்பட்ட பகுதி இது - நடந்த அக்கட்சியின் முதல் பெங்களூர் மாவட்ட மாநாட்டில் இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது (பிற்பாடு, 1972-ல் ‘கர்நாடகா’ என்ற பெயரை முதல்வர் தேவராஜ் அர்ஸ் சூட்டியபோதும் அதை வழிமொழிந்து பேசியவர் திமுக சட்டமன்ற உறுப்பினர் திராவிடமணி). அண்ணாவின் இந்தப் பிரகடனம், கன்னடர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

கன்னடத்துக்கு அண்ணா கொடுத்த முக்கியத்துவம்

பெங்களூர் மாவட்ட திமுக கூட்டங்களில் உள்ளூர் தமிழ்த் தலைவர்களான எஸ்.வி.பதி, கி.சோழன், தி.திராவிட மணி, எஸ்.ஜே.உசேன் கோலோச்சினர். தமிழில் இவர்கள் மணிக்கணக்கில் பேசிய நிலையில், கட்சிக்குள் இருந்த கன்னடத் தலைவர்களான கே.எம்.சம்பங்கி இராமய்யா, தாஸப்பா, லிங்கைய்யா, குமார் வெங்கண்ணா,

எஸ்.என்.நாராயண், எம்.ராமன், ராஜு உள்ளிட்டோருக்குப் பேசப் போதிய வாய்ப்பு இல்லை. இந்தத் தகவல் அண்ணாவின் காதை எட்டியபோது, “கழ‌க மேடைகளில் அவரவர் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும்” என்று கட்சியினருக்கு உத்தரவிட்டிருக்கிறார் அண்ணா.

கன்னடரான கே.எம்.சம்பங்கி இராமய்யா “தமிழில் கட்சிக்கென வரும் ‘நம் நாடு’ பத்திரிகையைப் போலவே கன்னடத்திலும் வெளியிட வேண்டும்” என்றபோது அதை ஏற்ற அண்ணா, கன்னட நாளிதழுக்கு என்று நிதி திரட்டுவதற்காக ஒரு பொதுகூட்டத்தையே பெங்களூரில் நடத்தினார். கன்னடத்தில் ‘நம்ம நாடு’ என்ற பெயரில் பத்திரிகை வெளியாகும் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டார். மேலும், “என் அனுமதி இல்லாமலேயே எனது நூல்களைக் கன்னடத்தில் மொழிபெயர்த்து வெளியிடலாம்” என்றும் தெரிவித்தார்.

திராவிட நாட்டின் தலைநகர் பெங்களூர்

1958-ல் சுபாஷ் நகரில் (மெஜஸ்டிக் பேருந்து நிலைய‌ மைதானம்) நடந்த பெங்களூர் மாவட்ட திமுக மாநாட்டின் பந்தலுக்கு கன்னட இலக்கியவாதியான ‘டி.பி.கைலாசம்’ பெயரே சூட்டப்பட்டது. இம்மாநாட்டில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி பேசுகையில், “பெங்களூரில் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழியினரும் சரிசமமாக வாழ்கின்றனர். நான்கு மாநிலங்களிலிருந்தும் வந்துசெல்வதற்குத் தேவையான போக்குவரத்து வசதி, அடிப்படைக் கட்டமைப்பு, சீரான தட்பவெப்ப நிலை இருப்பதால் திராவிட நாடு அமையும்போது இதுவே அதன் தலைநகராக இருக்கும்” என்றார்.

இதற்குப் பதிலளிக்கையில், “இப்போதுதான் பெண் பார்க்க ஆரம்பித்திருக்கிறோம். அதற்குள் குழந்தைக்குப் பெயர் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. திராவிட நாடு அமைந்தால் நான்கு மாநிலங்களும் சம அதிகாரம் பொருந்திய தனி மாநிலங்களாக இருக்கும். அதன் தலைநகர் குறித்து, அனைத்துத் தரப்பினருடன் கலந்து பேசி முடிவெடுப்போம்” என்று குறிப்பிட்டார் அண்ணா. இந்த மாநாட்டிலும், கர்நாடகப் பெயர் மாற்றத்தை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒருகட்டத்தில் “தமிழகத்தில் மட்டுமின்றி, மைசூரு மாநிலத்திலும் திமுக தீவிரமாக வளர்ந்துவருகிறது. வட இந்தியர்கள் இந்த வளர்ச்சியைக் கண் மூடி கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது” என்று பம்பாயிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த புகழ்பெற்ற ஏடான ‘கரன்ட்’ எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு அண்ணாவின் வளர்ச்சி இருந்தது.

தமிழர்கள் கன்னடம் கற்றுக்கொள்ளுங்கள்

பெங்களூரில் 1960-களில் நடந்த கூட்டங்களில் பேசுகையில், “தமிழிலிருந்து உருவான கன்னட மொழியை எனக்குப் பிடிக்கும். ஒரு தாய் வயிற்றில் பிறந்த சகோதரர்கள் என்ற முறையில் கன்னடர்களை நான் பெரிதும் நேசிக்கிறேன். இங்கு வாழும் தமிழர்கள் கன்னடர்களை நேசிக்க வேண்டும். அவர்களுடன் இணைந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். இந்த மண்ணின் நலனில் அக்கறை உள்ளவர்களாக வாழ வேண்டும். தமிழர் - கன்னடர் உறவு சகோதரத்துவம் மிக்கதாக இருக்க வேண்டும். அந்தந்த மாநிலங்களின் அந்தந்த மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இங்கு வாழும் தமிழர்கள் கன்னடம் கற்று, அந்த மொழியின் வளர்ச்சிக்குத் துணை நிற்க வேண்டும்” என்றதை இன்றும் நினைவுகூர்வோர் இருக்கின்றனர்.

பிற்பாடு திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டபோதிலும் திமுகவைத் தமிழ்நாட்டைத் தாண்டி வளர்ப்பதில் காட்டிய கவனத்தை அண்ணா கைவிடவில்லை. 1967-ல் திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்ததைத் தொடர்ந்து, அதன் தாக்கம் மைசூரு மாநிலத்திலும் எதிரொலித்தது.

இதுகுறித்து நிருபர்கள் அப்போதைய கர்நாடக‌ முதல்வர் ஹ‌னுமந்தய்யாவிடம் கேட்டபோது, அதற்கு அவர் “கர்நாடக திமுகவில் கன்னடர்கள் பெரும்பான்மையாக இல்லாதபோது அந்தக் கட்சி எப்படி கர்நாடகாவில் வளரும்?” என்று கேள்வி எழுப்பினார். அண்ணாவிடம் இதுகுறித்து கேட்டபோது அண்ணா சொன்னார், “ஹனுமந்தய்யா சொல்வது உண்மைதான். கர்நாடக‌ திமுகவில் தமிழர்கள் மட்டுமே இருந்தால் அது மேஜை மீது வைக்கப்பட்ட காகித மலராகவே இருக்கும். கன்னடர்களும் வந்து சேர்ந்தால்தான் திமுக மணக்கும் மலராக மாறும். திமுகவில் சேருமாறு கன்னடச் சகோதரர்களுக்கு இதன்மூலம் அழைப்புவிடுக்கிறேன்!”

சேரிகளில் திமுக‌

கன்னட மொழிக்கு இப்படி முக்கியத்துவம் கொடுத்ததுபோலவே கட்சி அமைப்பில் தலித்துகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கொடுப்பதிலும் உறுதிகாட்டினார் அண்ணா. ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடே எல்லா மேம்பாடுகளிலும் முக்கியம் என்பதைக் கட்சியினரிடமும் வலியுறுத்திவந்தார். பின்னாளில், திமுகவின் வளர்ச்சி குறித்து ஒருமுறை கேள்வி எழுப்பப்பட்டபோது, “திமுகவா? அது சேரியில் மட்டும்தான் இருக்கிறது!” என்றார் கர்நாடக முதல்வர் நிஜலிங்கப்பா. அந்த அளவுக்குக் கட்சியில் பல்வேறு நிலைகளிலும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இடம்பெற்றிருந்தனர். 1967-ல் முதல் முறையாக மைசூரு மாநிலச் சட்டமன்றத்துக்குள் காலடி எடுத்துவைத்தது திமுக.

அண்ணாவுக்குப் பின் திமுக இரண்டாக உடைந்த நிலையில், தமிழ்நாட்டுக்குள்ளேயே அதன் அரசியல் சுருங்கியது. இன்றைக்குத் தமிழகக் கட்சிகளின் கிளைகளாகப் பெயருக்குச் செயல்படும் அமைப்புகளாக அண்ணா வழிவந்த கட்சிகள் சுருங்கிவிட்டாலும் அண்ணா எழுப்பிய குரல் திடீர் திடீர் என்று உத்வேகம் பெறத்தான் செய்கிறது. ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ என்ற ஒற்றையாட்சிக் குரல் வலுக்கும்போதும், தென்னகம் புறக்கணிக்கப்படும்போதும், மாநில உரிமைகள் நசுக்கப்படும்போதும் கர்நாடகத்தில் எதிர்க்குரல்கள் உயிர் பெறுகின்றன. அந்தக் குரல்கள் அண்ணாவை எதிரொலிக்கின்றன!

(‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலிலிருந்து...)

புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x