Published : 12 Apr 2019 06:53 AM
Last Updated : 12 Apr 2019 06:53 AM

ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி தேர்தலில் பிரதிபலிக்குமா?

ஆட்சியில் இருப்பவர்கள் தேர்தலுக்குப் பிறகு ஆட்சியிலிருந்து விலக வேண்டியிருக்கலாம், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆட்சியைப் பிடிக்கவும் நேரலாம் என்பதுதான் தேர்தல் ஜனநாயகத்தின் சிறப்பு. தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் அரசியலோடு பொருளாதாரக் காரணிகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அந்தக் காரணிகளைப் பற்றி ஆராய்வதில் நவீன அரசியல், பொருளாதார ஆய்வாளர்கள் ஆர்வம்காட்டிவருகிறார்கள்.

ஆட்சியாளர்களுக்குத் தேர்தல் வெற்றி சாதகமாக இருக்கிறதா, ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி அவர்களுக்கு எதிரான வாக்குகளாக மாறுகிறதா என்பது குறித்து துபாய் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகப் பேராசிரியர் அஜீத் கர்ணிக் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ‘எகனாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி’ (மார்ச் 30, 2019) இதழில் ஓர் ஆய்வுக்கட்டுரையை எழுதியிருக்கின்றனர். இந்தியாவில் 1980 முதல் 2014 வரையிலான பத்து மக்களவைத் தேர்தல் விவரங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.  நடந்துகொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலையொட்டி, வாக்காளர்களின் கருத்துகளை முன்னமே கணிப்பதற்குக் கடும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் இந்நாட்களில் அஜீத் கர்ணிக் எழுதியிருக்கும் கட்டுரை சில முக்கியமான விஷயங்களைக் கவனப்படுத்தியிருக்கிறது.

அமெரிக்காவுக்கு நேரெதிர் இந்தியா

அமெரிக்கத் தேர்தல் முடிவுகளைப் பற்றிய ஆய்வுகளில், ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்புகளே அங்கு அதிகம் இருக்கின்றன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை அதற்கு நேரெதிராக இருக்கிறது. 1980 தொடங்கி 1999 வரையிலான காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தவர்கள் மீதான அதிருப்தி அவர்கள் மீண்டும் வெற்றிபெற முடியாத சூழலை உருவாக்கியது. குறிப்பாக, தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ், இதனாலேயே தோல்விகளைச் சந்திக்க நேர்ந்தது.

1975 தொடங்கி 2003 வரையிலான காலகட்டத்தில் மாநிலத் தேர்தல்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி அவர்களின் தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருந்தது. அதிருப்திக்கு இதுதான் காரணம் என்று எதையும் இதுவரை எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்தாவிட்டாலும், ஆளுங்கட்சியின் ஊழல்கள் மக்களின் அதிருப்திக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது.

ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கடந்த பத்து மக்களவைத் தேர்தல்களில் திருப்புமுனையாக அமைந்தது 1998 தேர்தல்தான். அந்தத் தேர்தலில்தான் காங்கிரஸுக்கு இணையாக பாஜகவும் தன்னை ஒரு தேசியக் கட்சியாக நிறுவிக்கொண்டது. அதற்குப் பிறகுதான், ஆட்சியாளர் மீதான அதிருப்தி என்பது வெற்றியைத் தீர்மானிக்கும் ஒரு காரணியாகவும் அமைந்தது. குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுபவர்கள் மீது அதிருப்தி ஏற்பட்டால், அவர்கள் அடுத்துவரும் தேர்தலில் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்பது 1998-க்குப் பிறகு உறுதியாகிவிட்டது.

வடக்கும் தெற்கும்

தென்னிந்திய மாநிலங்களில் ஆட்சியில் இருப்பவர்கள் அடுத்த தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு 47% ஆக இருந்தது. வட மாநிலங்களில் இது 32% மட்டுமே. காங்கிரஸா அல்லது பாஜகவா என்ற கட்சி சார்பு தென்னிந்தியாவைப் பொறுத்தவரை ஒரு பொருட்டாகவே இல்லை.

கடற்கரையோர மாநிலங்களைப் பொறுத்தவரை, ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே இருந்தது. கடற்கரையோரத்தில் அல்லாத மற்ற மாநிலங்களில் வெற்றிபெறும் வாய்ப்பு 50% இருந்தது. வேட்பாளர் ஒருவர் காங்கிரஸ் கட்சி உறுப்பினராக இருப்பதோ, இல்லாமல் இருப்பதோ அவர் மீண்டும் வெற்றிபெறுவதில் எந்த விளைவையும் உண்டாக்கவில்லை. ஆனால், பாஜகவின் உறுப்பினர்களுக்கு அது சாதகமாக அமைந்திருந்தது.

இந்தி பேசும் மாநிலங்களைப் பொறுத்தவரை ஆட்சியின் மீதான வெறுப்பு 50% வெற்றிவாய்ப்பைப் பாதித்திருக்கிறது. இந்தி பேசாத மாநிலங்களில் ஆட்சியின் மீதான அதிருப்தி என்பது ஒப்பீட்டளவில் குறைவு.

பொருளாதாரக் காரணிகள்

தேர்தல் நடக்கும் ஆண்டில் தனிநபர் சராசரி வருமானத்தைக் காட்டிலும் சராசரி வருமான மதிப்பு குறைவாக இருக்கும்பட்சத்தில் அது கண்டிப்பாகத் தேர்தலில் பிரதிபலிக்கவே செய்யும். ஆளுங்கட்சியினர் மீண்டும் வெற்றிபெறும் வாய்ப்பை 22% அது பாதிக்கக்கூடும்.

நகர்ப்புற வாக்காளர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஆட்சியில் இருக்கிறார்களா, இல்லையா என்பது வெற்றியைத் தீர்மானிக்கும் விஷயமாக இல்லை. அதிகளவில் கிராமப்புறங்களை உள்ளடக்கியத் தொகுதிகளைப் பொறுத்தவரை ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு 38% குறைவு. கல்வியறிவு பெற்றவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் வெற்றிபெறுவதற்கான வாய்ப்பு 41%. கல்வியறிவு பெறாதவர்கள் அதிகமிருக்கும் தொகுதிகளில் ஆட்சியாளர்கள் மீண்டும் வெற்றிபெறும் வாய்ப்பு 43% குறைவு.

ஆக மொத்தத்தில், ஏழைகளும் கிராமப்புறங்களில் வசிப்பவர்களும் கல்வியறிவு பெறாதவர்களும்தான் ஆட்சியில் இருப்பவர்கள் மீண்டும் தொடரலாமா என்பதைத் தீர்மானிக்கிறார்கள். அஜீத் கர்ணிக்கின் கட்டுரை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருக்கும் காலகட்டம், கடந்த 2014 மக்களவைத் தேர்தல் வரைக்குமானது. அப்போது, ஆட்சியின் மீதான அதிருப்தி என்பது ஆளுங்கட்சியின் வெற்றிவாய்ப்பை நிச்சயம் பாதித்திருக்கிறது. ஐந்தாண்டுகள் முடிந்துவிட்டன. அடுத்த தேர்தல் நடந்துகொண்டிருக்கிறது. ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி என்பது அவர்களது வெற்றிவாய்ப்பைப் பாதிக்கவும் செய்யலாம். குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்களுக்கு இத்தேர்தல் கடும்போட்டியாகவே அமையும்.

தொடர்புக்கு: puviyarasan.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x