Published : 18 Apr 2019 11:29 AM
Last Updated : 18 Apr 2019 11:29 AM
காமராஜரும் சங்கரலிங்கனாரும் பிறந்த மண் இது. 1985 மார்ச் 15-ல் ராமநாதபுர மாவட்டத்திலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, சிவகாசி, திருவில்லிபுத்தூர், ராஜபாளையம் என ஏழு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, திருப்பரங்குன்றம், திருமங்கலம் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. முதலில் சிவகாசி மக்களவைத் தொகுதியாக இருந்தது. 2008-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பின்னர் விருதுநகர் மக்களவைத் தொகுதியாக ஆனது.
பொருளாதாரத்தின் திசை: பிரதானத் தொழில் விவசாயம். பருத்தி, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், தினை உள்ளிட்டவை அதிக அளவில் விளைகின்றன. பருப்பு, எண்ணெய், மிளகாய் வத்தல் வணிகத்தில் விருதுநகர் சந்தைக்கு முக்கியப் பங்கு உண்டு. பட்டாசு ஆலைகள், தீப்பெட்டி ஆலைகள், அச்சுத் தொழில், நூற்பு ஆலைகள், போன்றவை மாவட்டத்தில் முக்கியமான தொழில்கள். தீப்பெட்டிகளை மடக்கி ஒட்டுதல், குச்சிகளை அடுக்கிவைத்தல் போன்ற குடிசைத் தொழில்களும் உண்டு.
தீர்மானிக்கும் பிரச்சினைகள்: விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய பிரச்சினை குடிநீர்த் தட்டுப்பாடு. தென் தமிழகத்தில் வறட்சி மாவட்டங்களில் ஒன்றான விருதுநகர் மாவட்டத்தில் பருமழையின் அளவு கடந்த 10 ஆண்டுகளில் படிப்படியாகக் குறைந்துகொண்டே வந்துள்ளது. குடிநீர் ஆதாரங்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு முழுமையாக நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசியில் பட்டாசுத் தொழிலுக்குப் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது. இத்தொழிலை நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. உற்பத்தியின்போது ஏற்படும் எதிர்பாராத விபத்துக்கள் தொழிலாளர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.
நீண்ட காலக் கோரிக்கைகள்: குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுப்பதாக அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் கொடுக்கின்றன. ஆனால், மாவட்டத்திலுள்ள 998 கண்மாய்களில் பல தூர்வாரப்படாமலும், கரைகள் உயர்த்தப்படாமலும் இருக்கின்றன. அவற்றைச் சரிசெய்தாலே நிலத்தடி நீராதாரத்தை அதிகரிக்கச் செய்து குடிநீர்த் தட்டுப்பாட்டை ஓரளவு ஈடுகட்ட முடியும்.
பட்டாசுத் தொழிற்சாலைகளையும், அதில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொழிலாளர்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் எதுவும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பாதுகாப்பில்லாத தொழில் என்பதால் தீக்குச்சி உற்பத்தித் தொழிலிலும் சரிந்துவருகிறது. இந்தக் கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் அக்கறையுடன் அணுகவில்லை எனும் வருத்தம் விருதுநகர் மக்களிடையே இருக்கிறது.
ஒரு சுவாரஸ்யம்: விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குள் அடங்கும் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, காமராஜருக்கு இரண்டு முறை (1957, 1962) வெற்றியைத் தேடித் தந்த பெருமைக்குரியது. 1977-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு எம்ஜிஆர் வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வர் ஆனார் என்பது இன்னொரு சிறப்பு.
வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: தேவர், நாயக்கர், பட்டியல் இனத்தவர், நாடார் சமூகத்தினர் இந்தத் தொகுதியில் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அனைத்துத் தேர்தல்களிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தச் சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
அதிக வெற்றியை ருசித்தவர்கள்: இந்தத் தொகுதியில் ஐந்து முறை அதிமுக வென்றுள்ளது. 1967 மக்களவைத் தேர்தலில் சிவகாசி மக்களவைத் தொகுதியில் சுதந்திரா கட்சியைச் சேர்ந்த ராமமூர்த்தி வென்றார். 1971, 1977 தேர்தல்களில் காங்கிரஸ் வென்றது. மதிமுக மூன்று முறை வென்றிருக்கிறது. இதில் 1998, 1999 தேர்தல்களில் வென்றவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT