Published : 18 Apr 2019 11:36 AM
Last Updated : 18 Apr 2019 11:36 AM
உலகில் இதுவரை மனிதகுலம் கண்டறிந்த ஆட்சிமுறையிலேயே மகத்தானது ஜனநாயகம்தான். மக்கள் ஒவ்வொருவருக்கும் சமமான ஓட்டுரிமையும், அந்த ஓட்டுரிமையின் அடிப்படையிலான ஆட்சியாளர்கள் தேர்வும் அமைவதுதான் ஜனநாயகத்தின் மகத்துவம். இந்தியாவில் சாதியும் மதமும் ஏற்கெனவே ஜனநாயகத்துக்கு சவால்விட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சமீப ஆண்டுகளில் இவற்றை மிஞ்சிய புதிய பூதமாக உருவெடுத்திருக்கிறது பணம்!
மக்களால் மக்களே மக்களை ஆள்வதுதான் ஜனநாயகம் என்பது போய் கோடீஸ்வரர்களால், கோடீஸ்வரர்கள் பணத்தின் துணை கொண்டு கோடீஸ்வரர்களைத் தேர்ந்தெடுக்கவைப்பதே ஜனநாயகம் என்று உருமாற்றப்பட்டுவருகிறது. இந்தத் தேர்தலில் நம் முன்னிருக்கும் பெரிய சவால் இதுதான்.
இந்தியா ஏழை நாடாக இருந்தாலும் தேர்தலில் பணத்தின் செல்வாக்கு அதிகமாவதற்கு சில காரணங்களும் உள்ளன.
மக்களவைத் தொகுதிகள் என்பது பரப்பளவில் பெரியது. வேட்பாளரும் தொண்டர்களும் சுற்றிச்சுற்றி வந்து வாக்கு சேகரிக்கவும் கட்சியின் தேர்தல் அறிக்கை, வேட்பாளரின் வாக்குறுதிகள் ஆகியவற்றைத் தொகுதியில் பரப்புரை செய்யவும் வாகன வசதியும் இதர செலவுகளும் பணத்தின் தேவையை அதிகரிக்கின்றன. அத்துடன் செய்தித்தாள், தொலைக்காட்சி, சமூக வலைதளம் ஆகியவற்றில் பிரச்சாரம் செய்யவும் பணம் தேவைப்படுகிறது.
பணம் ஏன் உள்ளே நுழைகிறது?
வாக்களிப்பு சதவீதம் எப்படி இருந்தாலும் ஒவ்வொரு தொகுதியிலும் பத்து லட்சம் அல்லது அதற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் சராசரியாக இருக்கின்றனர் (வடகிழக்கு, யூனியன் பிரதேசத் தொகுதிகள், மலை மாநிலத் தொகுதிகள் விதிவிலக்காக இருக்கலாம்). இவர்களில் பெரும்பாலானவர்களைச் சந்திக்கவும் வாக்கு சேகரிக்கவும் பணம் அவசியமாகிறது. வேட்பாளர் தேர்வாகி கட்சியால் அறிவிக்கப்பட்டு வாக்காளரைச் சென்றுசேர மிகக் குறுகிய கால அவகாசமே இருப்பதால் பிரச்சாரத்துக்கு மிகுந்த பொருட்செலவு ஆகிறது.
ஒவ்வொரு தேர்தலின்போதும் புதிது புதிதாகப் பிரச்சார உத்திகளும் சாதனங்களும் சந்தைக்கு வருவதால் அவற்றை வாங்குவதற்கும் பணத் தேவை அதிகமாகிக்கொண்டே வருகிறது. உணவு, எரிபொருள் ஆகியவற்றின் செலவும் கட்டுக்கடங்காமல் போவதால் தேர்தல் செலவும் அதிகமாகிறது. தேர்தலில் பணம் நுழைவதும், எல்லாக் கட்சிகளுமே பணக்காரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் இப்படித்தான் தொடங்குகிறது.
ஆனால், இந்தச் செலவையெல்லாம் மக்களிடமே வசூலிக்க முடியும் - மக்கள் மத்தியில் அரசியல் கட்சிகள் பணியாற்றினால், தாங்கள் மக்களுக்குத் தேவை என்பதை அவர்களுக்கு உணர்த்தினால். ஆனால், அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்சார வழிகளைத் தாண்டி பணத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகையில், இன்னும் ஒரு படி மேலே சென்று ஓட்டு போடுவதற்கு வாக்காளருக்கு லஞ்சம் கொடுக்க முற்படுகையில் பணத்தின் வேகமும் பணக்காரர்களின் ஆதிக்கமும் கட்டுப்படுத்த முடியாததாகிறது.
எங்கும் பணம் எதிலும் பணம்
மக்களவைக்குப் போட்டியிட்டவர்களில் கடந்த முறை 72% மாநிலங்களில் 50%-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கெனவே கோடீஸ்வரர்கள். 2014-ல் தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் 443 பேர் (82%) கோடீஸ்வரர்கள். அதற்கு முன்பு 2009-ல் வென்றவர்களில் 300 பேர்தான் (58%) கோடீஸ்வர்கள். அதாவது, எல்லா அரசியல் கட்சிகளும் கோடீஸ்வரர்களையே வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கத் தொடங்கிவிட்டன.
ஆந்திரத்தில் மட்டும் 2009-ல் வென்றவர்களில் 76% கோடீஸ்வரர்களாக இருந்தார்கள், 2014-ல் 100% கோடீஸ்வரர்கள். சத்தீஸ்கர் என்பது மிகச் சிறிய மாநிலம். வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டது. ஓரளவுக்குத்தான் கனிமவளம் சார்ந்த தொழில்கள். அங்கேயே 2009-ல் வென்றவர்களில் கோடீஸ்வரர்கள் 13% ஆக இருந்தது 2014-ல் 76% ஆக கிட்டத்தட்ட ஆறு மடங்கு உயர்ந்துவிட்டது. வங்கம், ஒடிஷா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலிருந்து வெற்றி பெறும் கோடீஸ்வர்களின் எண்ணிக்கையும் மும்மடங்காகிவிட்டது.
செலவு ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. தேசியக் கட்சிகளின் தேர்தல் செலவுகள் மட்டும் அதிகாரபூர்வமாகவே 2004-ல் ரூ.269.42 கோடி, 2009-ல் ரூ.875.81 கோடி, 2014 தேர்தலில், ரூ.1,308.75 கோடி என்று உயர்ந்திருக்கிறது. அதாவது, 386% அதிகரித்துtள்ளது. தேசியக் கட்சிகள் மேலே குறிப்பிட்ட மூன்று பொதுத் தேர்தல்களில் வசூலித்த தேர்தல் நன்கொடை மொத்தம் ரூ.2,237.28 கோடி. அதில் 45% அதாவது ரூ.1,007.81 கோடி ரொக்கம்.
கவலை தரும் அம்சம்
பணத்தின் ஆதிக்கம் இப்படி அதிகரிக்க அதிகரிக்க தேர்தல்களில் சாமானியர்களின் பங்களிப்பு குறைகிறது. ஒரு விவசாயி, ஒரு ஆலைத் தொழிலாளி, அடுத்த மாதச் செலவுக்கு என்ன செய்வது என்று திகைக்கும் ஒரு குடும்பத் தலைவி எங்கேனும் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதாக ஒரு தொகுதியிலிருந்தாவது கேள்விப்படுகிறோமா?
மதிக்கத்தக்க வருமானத்தைக் கொண்ட மருத்துவர்கள், பொறியாளர்கள், தணிக்கையாளர்கள், பேராசிரியர்கள் போன்றோரே இன்றைக்கு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது அபூர்வம் ஆகிவிட்டது. விளைவாக, சாமானியர்களின் பிரச்சினைகளுக்கான கவனமும் குறைந்துவருகிறது. தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுப்பதும் ஒரு கலாச்சாரம் ஆகும்போது சாமானியர்களுக்கு முற்றிலும் அந்நியப்படுத்தப்படும் இடத்துக்கு ஜனநாயகம் கொண்டுசெல்லப்படுகிறது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் சமீபத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் சொல்கிறது, ‘2009-ல் தேர்தல் காலத்தில் வன்முறைதான் எங்களுக்குப் பிரச்சினையாக இருந்தது, இப்போது பணபலம் பெரிய பிரச்சினையாக இருக்கிறது!’ பறக்கும் படைகளும் செலவுக் கண்காணிப்பாளரும் இருந்தும் கோடிக்கணக்கான ரூபாய்கள் வாக்காளர்களுக்காகப் பதுக்கிவைக்கப்பட்டதாகவும் கடத்தப்பட்டதாகவும் இம்முறை பிடிபட்டிருக்கிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் 15 வரையில் நாடு முழுவதும் மொத்தம் ரூ.217 கோடி ரொக்கம், 100 லட்சம் லிட்டர் மதுபானம், 100 கிலோ ஹெராயின் ஆகியவை பிடிபட்டுள்ளன. இவையும்கூட எதிர்க்கட்சிகளை மட்டுமே குறிவைத்து பிடிக்கப்பட்டவை; ஆளுங்கட்சியுடையது கணக்கிலே வரவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால், பிடிபட்டதைப் போல நூறு மடங்கு பணம் தேர்தலில் கரைபுரண்டு ஓடுகிறது என்பதைப் பொதுஜனங்களே அறிவார்கள்.
2019 பொதுத் தேர்தலில் மட்டும் மொத்தம் ரூ.30,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. தேர்தல் ஆணையம் சட்டபூர்வமாகச் செய்யும் செலவு ரூ.7,000 கோடி முதல் ரூ.8,000 கோடி வரை. எஞ்சியவை அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் செய்யும் செலவுகள். இப்படி பணத்தின் ஆதிக்கம் ஏற ஏற ஜனநாயகம் கீழே இறங்கிக்கொண்டேயிருக்கிறது.
பணத்தை வைத்து ஓட்டுகளை வாங்கிவிடலாம் என்று நினைப்பவர்கள் அடிப்படையில், மக்களைச் சோற்றால் அடித்த பிண்டங்கள்போலத்தான் நினைக்கிறார்கள்; ‘இல்லை நாங்களும் சமமான மனிதர்கள்; குடிமக்கள்; சாதி, மத, பண ஆதிக்கத்தை மீறி இந்நாட்டை ஆள பிரதிநிதிகளைத் தேர்தெடுக்கும் வல்லமை பெற்றவர்கள்’ என்று சொல்ல நமக்கு சுயமரியாதை தேவைப்படுகிறது. ஆம், நாட்டுக்கான கடமை என்று ஓட்டைக் கருதுவதும், தவறாது வாக்களிப்பதும் நம்முடைய சுயமரியாதையின் ஒரு பகுதிதான். நாம் எதற்காகவும் விலைபோகலாகாதுதானே!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT