Last Updated : 26 Mar, 2019 07:50 AM

 

Published : 26 Mar 2019 07:50 AM
Last Updated : 26 Mar 2019 07:50 AM

திராவிட இயக்கம் மேலிருந்த தீண்டாமைக்குத் தமிழிலக்கியவாதிகளுடைய பிராமணியப் பார்வைதான் காரணம்- கி.ராஜநாராயணன் பேட்டி

தமிழ்நாட்டின் வெகுமக்கள் மொத்தமாக அண்ணாவைப் பேரறிஞர் என்று கொண்டாடியிருந்திருக்கலாம். ஆனால், நவீனத் தமிழிலக்கிய கர்த்தாக்களில் பெரும் பகுதியினர் மத்தியில் அவர் மீது கீழான பார்வையே அக்காலத்தில் இருந்தது.

“அண்ணாவின் குப்பைப் புத்தகங்களெல்லாம் அவரது மரணத்தை எருவாகக் கொண்டு, குருக்கத்திப் பூக்களாய் மலர்ந்துவிடப்போவதில்லை. அவரை அறிஞர் என மூடர்களே அழைக்கலாயினர். அவரைப் பேரறிஞர் என்று பெருமூடர்களே அழைக்கலாயினர்” என்று அண்ணாவின் மரணத்தையொட்டி - எழுத்துலகில் மட்டும் அல்லாமல், சமூக அரசியல் தளத்திலும் கொண்டாடப்பட்ட எழுத்தாளுமையான - ஜெயகாந்தன் எழுதிய குறிப்பை இங்கே ஓர் உதாரணமாகக் கொள்ளலாம். அண்ணாவைப் பற்றியோ, அவர் வழிவந்த திராவிடக் கட்சிகளின் தலைவர்களைப் பற்றியோ ஆக்கபூர்வமான மதிப்பீடுகள், விமர்சனங்கள், இடையீடுகள் நம்முடைய அறிவுசார் தளத்தில் நடக்காமல்போனதும் திராவிட இயக்கத்தினருக்கும் நவீன இலக்கியவாதிகளுக்கும் அக்கால கட்டத்தில் ஒரு நல்லுறவு உருவாகாமல்போனதும் பெரும் துரதிர்ஷ்டம்தான். ஆனால், திட்டவட்டமான ஒரு தீண்டாமை இதன் பின்னணியில் இருக்கவே செய்தது. நம் காலத்தின் தலைசிறந்த கதைசொல்லியான கி.ராஜநாராயணனுடன் இது தொடர்பாக உரையாடினேன்.

அண்ணாவை நீங்கள் நேரில் பார்த்திருக்கிறீர்களா? பேச்சைக் கேட்டிருக்கிறீர்களா?

அண்ணாதுரையோட பேச்சை முதல்ல கேட்டது விருதுநகர்லதான். கூட்டத்துக்குள்ள போகல. ஆனா, கூட்டத்தில் மைக் வச்சிருப்பாங்கல்ல, தூரத்திலிருந்தே கேட்கலாம்னு நிக்கிறேன். கூட்டத்துக்குக் குதிரை வண்டியில வந்திறங்குனார் அண்ணாதுரை. தனியாத்தான் வாராரு. அப்படித்தான் பார்த்தது. எனக்கு அண்ணாதுரையோட பேச்சுல பெரிய ஆர்வமில்லை. ஆனா, அண்ணாதுரையைப் பத்தி பல விஷயங்களும் காதில விழுந்துக்கிட்டே இருக்கும். ‘தனியா இருக்கும்போது அண்ணா நல்லா பாடுவாரு’, ‘பெரியார் எல்லாரையும் கருப்புச் சட்டைப் போடச் சொன்னப்போ அண்ணா மட்டும் முடியாதுன்னு சொல்லிட்டாரு…’ இப்படி எதாவது காதில் விழுந்துகிட்டே இருக்கும். அவர் காலகட்டம் முழுக்க அவர் பேசப்படுறவரா இருந்தார்ங்கிறது நெஜம். எல்லா தரப்புலேயும் பேசினாங்க.

உங்களுடைய இடைச்செவல் கிராமத்துக்குள் அண்ணாவும் அவர் கட்சியும் எப்படி வந்தார்கள்?

கிராமத்துல பெருந்தனக்காரர்களுடைய வீட்டுப் பிள்ளைகள் எந்தக் கட்சியில இருக்காங்களோ அந்தக் கட்சிதான் ஊர்ல செல்வாக்கா இருக்கும். பெரிய ஆட்கள் நீதிக் கட்சியைத்தான் முதல்ல ஆதரிச்சாங்க. வெள்ளைக் காரங்களைப் பத்தி ரொம்ப சிலாகிச்சுப் பேசுவாங்க. “இந்த ரயில் போட்டிருக்கானேடா, இந்த மாதிரி எவன்டா செய்வான்?; ஒரு தபால் கார்டு டெல்லியில போட்டா, அடுத்த மூணு நாள்ல இங்கெ கிடைக்குதேடா, இப்படி யாராலடா செய்ய முடியும்?” அப்படின்னு கேட்பாங்க. அதனால, இளந்தாரிங்கயெல்லாம் நீதிக் கட்சிக்கு எதிரியாயிட்டாங்க. காங்கிரஸ் செல்வாக்கானுச்சு. அடுத்து, கம்யூனிஸ்ட் கட்சி எங்க ஊருக்கு வந்த பிறகு, காங்கிரஸ் காணாமப்போயிடுச்சு. திமுக ரொம்ப நாள் கழிச்சுதான் வந்துச்சு. எப்படி வந்துச்சுன்னா, ‘வேலைக்காரி’ சினிமா இருக்குல்லியா, அதுவழியா வருது.

உங்கள் ஊருக்குள் திமுகவில் முதலில் இணைந்தவர்கள் யார்? எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்?

எல்லாம் கீழ்த்தட்டுல இருக்கிறவங்கதான் – ஆனா, இன்ன சமூகம்னு இல்லை. “நாங்க ஒரு கொடி கட்டிக்கிறோம்”னு கேட்டாங்க. “ஏதாவது ஒரு மரத்துல கட்டிக்கோங்கப்பா”னுட்டோம். அப்படித்தான் முதன்முதலில் திமுக கொடி எங்க ஊரில் பறந்தது.

மக்கள் மத்தியில் திமுக செல்வாக்கு பெற்றதை நீங்கள் அப்போது எப்படி அர்த்தப்படுத்திக்கொண்டீர்கள்?

 நான் இடதுசாரி இயக்க ஆளுங்கிறதுனால, கீழ கட்சியோட அடிப்படைக் கட்டுமானம் எப்படி இருக்குன்னு பார்ப்பேன். டீக்கடை, சைக்கிள் கம்பெனி, சலூன்னு திராவிட இயக்கப் பத்திரிகைகள் பார்க்கக் கிடைக்காத இடம் கிடையாது. கூட்டம் எங்கேயாவது பேசிக்கிட்டே இருப்பாங்க. கீழ்நிலை வரை அமைப்பை வலுவா கட்டினாங்க. கொள்கைகளைப் பரப்புறது, கட்சி அமைப்பு, தெருமுனை போராட்டம் இந்த மாதிரி விஷயங்கள்லாம் கம்யூனிஸ்ட் கட்சியைப் பார்த்து அவங்க எடுத்துக்கிட்டது. ஆனா, எல்லாத்தையும் தமிழ்ப்படுத்தினாங்க.

உங்களுடைய இலக்கிய வட்டாரத்தில் யாருக்காவது அண்ணா மீது ப்ரியம் உண்டா?

 யாருக்குமே ப்ரியம் கிடையாது. காரணம் என்னன்னு கேட்டா, அவருடைய தமிழ் இருக்குது பாத்தியளா, அது ரொம்ப அலங்காரமா இருக்கும். பெரியார் பேச்சுத் தமிழ்ல பேசுவார். ஆனா, அண்ணாதுரை எழுத்துக்கூட்டி சிங்காரப்படுத்திப் பேசுவார். மிகைப்படுத்திப் பேசுவார். அது தமிழ் எழுத்தாளர்களுக்கு அந்நியப்பட்டுப்போச்சு. அப்பவே இதெல்லாம் நிலைக்குமான்னு நாங்கள்லாம் விவாதிச்சிருக்கோம். இது நாடகம், சினிமா மூலமா வந்துச்சு; அதுகளுக்கு மவுசு குறையும்போது, இதுவும் காணாமப்போயிடும்னு நெனைச்சோம். ஆனா, பொதுவுல அண்ணாதுரைக்கு மட்டுமில்லாம, அவர் கட்சி உருவாக்கின பேச்சாளர்கள் அத்தனை பேருக்குமே ஒரு மவுசு இருந்துச்சு. நான் நாகர்கோவில்ல எட்டு மாசம் தங்கி காசநோய்க்காக சிகிச்சை எடுத்துக்கிட்டிருந்தேன். அப்ப நாஞ்சில் மனோகரன் பேச்சைக் கேட்டிருக்கேன். பெரிய கூட்டம் கூடும். இவ்வளவுக்கும் அவர் பத்தாம் வகுப்புதான் படிச்சுக்கிட்டிருந்தார். ஆனா, அப்படி ஒரு கூட்டம். பின்னால அண்ணாதுரை ஆட்சிக்கு வந்தாரு பாருங்க, அப்போ அவர் மேல பெரிய மரியாதை வந்துச்சு. என்ன காரணம்னா, முதல்வர் பதவிக்கே வந்தாலும், அதை வெச்சி தனிப்பட்ட முறையில எந்த ஆதாயமும் தேடலை. ரொம்பப் பெரிய மனசோட நடந்துகிட்டார். எல்லாரையும் அரவணைச்சார். அவர் மட்டும் கூடுதல் ஆண்டுகள் இருந்திருந்தால் ரொம்ப நல்ல விஷயங்கள் நடந்திருக்கும். வேண்டாத விஷயங்கள் இவ்வளவு அதிகமா நடந்திருக்காது. இதை எல்லாருமே பேசினாங்க. உதாரணத்துக்கு ஒரு விஷயம் சொல்றேன். என்னுடைய ‘கதவு’ சிறுகதை தமிழ்நாடு அரசுப் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதே, அப்ப முதல்வர் கருணாநிதிதான் அந்தப் பரிசைக் கொடுத்தார். பள்ளிக்கூட நிகழ்ச்சியில பரிசு கொடுக்குற மாதிரி வரிசையா கொடுத்தார்; நானும் வரிசையில நின்னு வாங்கிக்கிட்டு இறங்கினேன். அப்போ சா.கந்தசாமி சொன்னார், “அண்ணாதுரை மாத்திரம் உங்களுக்கு இந்தப் பரிசு கொடுத்திருந்தா, நிச்சயமாக இந்தப் பொஸ்தகத்துலேருந்து ஒரு வரியாவது மேற்கோள் காட்டிப் பாராட்டியிருப்பாரு”ன்னு. ஒவ்வொரு இடத்திலேயும் இந்த மாதிரி இழப்பை அவரோட சாவுக்குப் பின்னாடி தமிழ்நாடு பேசுச்சு.

தமிழ் இலக்கியவாதிகளும் சரி; பெரும்பான்மை சிறுபத்திரிகைகளும் சரி; திராவிட இயக்கத்தைப் புறக்கணித்தும் எதிர்த்துமே செயல்பட்டிருக்கின்றன. நவீனத் தமிழ் இலக்கியம் என்பது பிராமண, பிள்ளைமார் சமூகத்தினர் ஆதிக்கம் செலுத்திய இடம் என்பதும் இந்த இரண்டு சமூகங்களுமே திராவிட இயக்கத்தால் தங்கள் மேலாதிக்கத்தில் சரிவு கண்ட சமூகங்கள் என்பதும் இந்தப் போரிலிருந்து பிரித்துப் பார்க்கக்கூடியவை அல்ல. தமிழ்நாட்டில் இன்று அரசியல் மீது ஒரு வெறுப்பும் தீண்டாமை உணர்வும் நிறுவப்பட்டிருக்கிறது என்றால், நவீனத் தமிழ் இலக்கியவாதிகளுக்கு அதில் முக்கியமான ஒரு பங்கிருக்கிறது. நான் விமர்சனங்கள் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால், அவை ஒரு இடையீடாக இல்லை என்று சொல்கிறேன். ரஷ்ய அதிபர் ஸ்டாலின் மேல் எவ்வளவோ குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாப்லோ நெருடா அவருக்கு ஒரு மகத்தான இடத்தைக் கொடுத்து எழுதுகிறார். அப்படியான ஓரிடம் இங்கே உருவாகவில்லை. தவறு ஒரு தரப்பினுடையது என்று மட்டும் நான் சொல்லவில்லை. ஆனால், இலக்கியவாதிகளின் பின் ஒரு சாதி அரசியல் இருந்தது. திராவிட இயக்கத்தினர் மீது மலிந்த பார்வை இருந்தது. இதற்கான அடிப்படை பிராமணியம்தான் என்ற குற்றச்சாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

சரிதான். இந்த பிராமணியத்தைப் பத்திச் சொன்னீங்க பாருங்க, அந்தக் கருத்துல ரொம்ப ரொம்ப உடன்பாடு உண்டு எனக்கு. அது ‘மணிக்கொடி’ ஆட்கள்கிட்டேயிருந்தே தொடங்கிட்டுது. நானும் கு.அழகிரிசாமியும் அந்தக் காலத்துலேயே இதைப் பேசியிருக்கோம். நீங்க சொன்ன ரெண்டு சாதிகளைக் கடந்தும் இன்னைக்கு நிறைய பேர் எழுத வந்திருக்காங்க. ஆனா, பிராமணிய மனோபாவம், பார்வை இப்பவும் எல்லா சாதிகள்கிட்டயும் தொடர்றதாதான் எனக்குத் தோணுது.

பிராமணிய மனோபாவம் என்பது ஒரு சாதிக்கு மட்டும் சொந்தமானது இல்லையே! எனக்கு இந்த விஷயத்தில் உங்கள் மீதே தாக்கீது இருக்கிறது. உங்களுடைய நடத்தை எந்த வகையில் மேற்கண்ட குற்றச்சாட்டிலிருந்து மாறுபட்டது என்று சொல்ல முடியும்? தவிர, கு.அழகிரிசாமியோ நீங்களோகூட இதையெல்லாம் விமர்சித்து இதுவரை எங்கும் பேசியதாகத் தெரியவில்லையே?

 நெஜம்தான். ஆனா, எங்களுக்கு பிராமணிய மதிப்பீடு இருந்துச்சுன்னு சொல்ல மாட்டேன். நாங்க பண்ணின தப்பு இதை வெளியே பேசாம இருந்தது, வேறொரு மதிப்பீட்டை முன்வைக்காம இருந்தது. அதுக்குக் காரணம் இருந்துச்சு. நாங்க ரெண்டுலேயும் சேத்தியில்லாம இருந்தோம். இந்தப் பக்கம் செல்லப்பா வழிவந்தவங்கன்னா, அந்தப் பக்கம் அண்ணாதுரை வழிவந்தவங்க. எங்களுடைய பாடு ரொம்பக் கஷ்டம். எங்களால ‘மணிக்கொடி’ பக்கமும் போக முடியல, ‘திராவிட நாடு’

பக்கமும் போக முடியல. ரெண்டு மேலேயுமே விமர்சனம் இருந்துச்சு. திராவிட இயக்க எழுத்து மேல என்ன பயம்னா, அவங்க மொழியை திருவள்ளுவர் காலத்துக்குக் கொண்டுபோயிடுவாங்களோன்னு பயமா இருந்துச்சு. ‘நவீன உரைநடை இலக்கியம் காலாற நடந்துபோற மாதிரி இருக்கணும், நாட்டிய நடை கூடாது’ அப்படிங்கிறதுல நாங்க ரொம்பக் கவனமா இருந்தோம். அங்கெ என்ன பிரச்சினைன்னா மொழிநடைல அவங்களுக்கு விழிப்பு இருந்துச்சு; ஆனா, சரக்குக்குள்ள வெடி இருந்துச்சு. நாம இதை ரெண்டையுமே சொல்லக்கூடிய நிலையில இல்லை.

சொன்னா, முழுசா கட்டம் கட்டப்பட்டிருப்போம்கிறதுதான் உண்மை நிலை. ஆனா, இன்னைக்குத் தோணுது, நீங்க கேட்கும்போது, அண்ணாதுரையைப் பத்தி நாலு வார்த்தை பேசக்கூட நமக்கு வரலியேன்னு. நொந்துக்க ஏதுமில்ல, காலம் இப்படித்தான்!

‘மாபெரும் தமிழ்க் கனவு’ புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும்: https://www.kamadenu.in/publications

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x