Published : 31 Mar 2019 08:33 AM
Last Updated : 31 Mar 2019 08:33 AM
இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர்; ஆளுநர்; தொழிலாளர் நலத் துறை அமைச்சர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவர் - வி.வி.கிரி என்று அழைக்கப்படும் வரககிரி வேங்கட கிரி. இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த இன்றைய ஆந்திரத்தின் பாதபட்டினம் தொகுதியிலிருந்து வெற்றிபெற்றார். நேருவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறைக்குப் பொறுப்பு வகித்தார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மாகாணத்தின் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக ராஜாஜி, டி.பிரகாசம் ஆகியோரின் அமைச்சரவையில் பதவி வகித்தவர் அவர். 1957 தொடங்கி 1967 வரைக்கும் உத்தர பிரதேசம், கேரளா, மைசூரு மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். 1967-ல் குடியரசுத் துணைத் தலைவரானார். 1969-ல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கிரியின் தந்தை ஜோகையா பண்டுலு சென்னை மாகாண சட்டக் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். வங்கத்தில் ‘வட இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கம்’ அமைக்கப்பட்டத்தில் ஜோகையாவுக்கு முக்கியப் பங்குண்டு. தந்தையின் வழியிலேயே அரசியலிலும் தொழிலாளர் சங்க நடவடிக்கையிலும் அடியெடுத்துவைத்தவர் வி.வி.கிரி. லண்டனுக்குச் சட்டம் படிக்கச் சென்ற கிரி, அப்போது தீவிரமடைந்திருந்த அயர்லாந்து தொழிலாளர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். அதே காலக்கட்டத்தில்தான் காந்தியை அவர் லண்டனில் சந்தித்தார்.
1921-ல் காந்தியின் அழைப்பை ஏற்று, வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இந்திய தொழிற்சங்கத் தந்தை என்.எம்.ஜோஷியுடன் இணைந்து பணியாற்றினார். 1926, 1942 ஆண்டுகளில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் தலைவராக பதவிவகித்தார். குடியரசுத் தலைவரான பிறகும்கூட, சிறப்பு அழைப்பின்பேரில் ஜெனீவாவில் நடந்த சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். ஏறக்குறைய 40 ஆண்டு காலம் சர்வதேசத் தொழிலாளர் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் வி.வி.கிரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT