Published : 31 Mar 2019 08:37 AM
Last Updated : 31 Mar 2019 08:37 AM

இதுதான் இந்தத் தொகுதி: நீலகிரி (தனி)

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகமண்டலத்தைக் கொண்டது நீலகிரி மக்களவைத் தொகுதி. உதகை, குன்னூர், கூடலூர்(தனி), மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் (தனி) ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய தொகுதி இது. இதில், உதகை, குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் மட்டுமே நீலகிரி மாவட்டத்துக்கு உட்பட்டவை. மேட்டுப்பாளையம் தொகுதி கோவை மாவட்டத்திலும், அவினாசி திருப்பூர் மாவட்டத்திலும், பவானிசாகர் ஈரோடு மாவட்டத்திலும் உள்ளன. நீலகிரி மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை, மலைப்பகுதியைச் சேர்ந்த தொகுதிகளும் சமவெளிப் பகுதிகளை சேர்ந்த தொகுதிகளும் வெவ்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.

பொருளாதாரத்தின் திசை: நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் அதிகம். விவசாயிகளில் 50% பேர் தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். மலை காய்கறி விவசாயமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுற்றுலா தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இங்கு சிறு, குறு விவசாயிகளும் இங்கு உள்ளனர். நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை தேயிலைத் தொழிற்சாலைகளை தவிர வேறு தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. இருந்த ஒரே ஒரு பொதுத் துறை நிறுவனமான  ‘இந்துஸ்தான் போட்டோ பிலிம்’ தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்டது. இளைஞர்களில் 80% பேர் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில்தான் பணியாற்றி வருகின்றனர்.

தீர்மானிக்கும் பிரச்சினைகள்: அத்திக்கடவு  அவினாசி குடிநீர்த் திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், குடிநீர்த் தட்டுப்பாடு மக்களை வதைக்கிறது. சுற்றுலா தொழிலை பொறுத்தவரை ஆண்டுக்கு மூன்று மாதங்கள் மட்டுமே வருமானம். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதிகளில் பிரிவு 17 நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கப்படாமல் உள்ளது. தனியார் வனப் பாதுகாப்புச் சட்டம் போன்றவை மக்களைக் கடும் சிரமத்துக்குள்ளாக்குகின்றன. மருத்துவக் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி இல்லை. மேட்டுப்பாளையம், பவானிசாகரில் போதிய நீர்ப் பாசன வசதிகள் இல்லை. சாயப் பட்டறைக் கழிவுகளின் பாதிப்புகள் அதிகம். அவினாசி தொகுதியில் நெசவுத் தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது. 

நீண்ட கால கோரிக்கைகள்: பல ஆண்டுகளாகப் பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். பசுந்தேயிலை கிலோவுக்கு ரூ.30 ஆதார விலை வழங்க வேண்டும் என்பது முக்கியக் கோரிக்கை. மாற்றுத் தொழிலாக அரசு முன்வைத்த மலர் சாகுபடித் தொழிலுக்கு, ஏற்றுமதி மையம், பதப்படுத்தும் மையம் அமைக்க வேண்டும். குன்னூரில் நிலவும் குடிநீர் பிரச்சினையைத் தீர்க்க கொண்டுவரப்பட்ட எமரால்டு கூட்டுக் குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாகியும் நிறைவேறாமல் உள்ளது. உருளைக்கிழங்கு ஆராய்ச்சி மையத்தை வட மாநிலத்துக்கு இடமாற்றும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு சுவாரஸ்யம்: நீலகிரி மக்களவைத் தொகுதியில் உள்ளூர் வேட்பாளர்களைக் காட்டிலும் வெளியூர் வேட்பாளர்களே அதிக முறை வென்றுள்ளனர். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் மூன்று தொகுதிகள் கோவை, ஈரோடு, திருப்பூர் ஆகிய சமவெளி மாவட்டங்களைச் சேர்ந்தவை. இந்த மூன்று தொகுதிகளில் 60% வாக்காளர்கள் உள்ளனர். வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக சமவெளிப் பகுதி இருப்பதால், வெளியூர் வேட்பாளர்களே போட்டியிடுகின்றனர். வெற்றிவாய்ப்பும் அவர்களுக்கே கிடைக்கிறது.

வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகங்கள்: நீலகிரி மக்களவைத் தொகுதியில் படுகர்கள், பழங்குடியினர், பட்டியலின சமூகத்தினர், கவுண்டர்கள், ஒக்கிலிகர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர் உள்ளனர். இதில் மலை மாவட்டத்தில் படுகர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் உள்ளனர். சமவெளிப் பகுதி மாவட்டங்களில் பட்டியலின சமூகத்தினர், கவுண்டர்கள் தேர்தல் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர்.

அதிக வெற்றியை ருசித்தவர்கள்: நீலகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கம்தான் அதிகம். ஏழு முறை அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது. 1967-ல் சுதந்திரா கட்சி, 1971 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் திமுக, 1977, 2014 ஆகிய ஆண்டுகளில் அதிமுக வென்றிருக்கின்றன. இரு முறை பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸின் ஆர்.பிரபு ஐந்து முறை வெற்றி பெற்று மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். திமுகவின் ஆ.ராசா மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகித்துள்ளார். பாஜகவின் மாஸ்டர் மாதனும் மத்திய இணை அமைச்சராக இருந்தவர்.

வாக்காளர்கள் யார்?

மொத்தம் 13,49,740

ஆண்கள் 6,58,075

பெண்கள் 6,91,600

மூன்றாம் பாலினத்தவர்கள் 65

சமூகங்கள் என்னென்ன?

இந்துக்கள்: 82.80%

முஸ்லிம்கள்: 10%

கிறிஸ்தவர்கள்: 6%

பிற சமயத்தவர் 1.20%

எழுத்தறிவு எப்படி?

மொத்தம் 69.05%

ஆண்கள் 37.56%

பெண்கள் 31.48%

புள்ளிவிவரங்கள் கடைசியாக மாவட்டவாரியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x