Published : 29 Mar 2019 08:27 AM
Last Updated : 29 Mar 2019 08:27 AM
நாட்டின் 15 பிரதமர்களில் 8 பிரதமர்களைத் தந்த மாநிலம், தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் மாநிலம் என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொண்டாலும் சமூக, பொருளாதார, கல்வி, தொழில்ரீதியாக இன்னமும் பின்தங்கிய மாநிலமாகவே இருக்கிறது உத்தர பிரதேசம். அதிக அளவிலான மக்கள்தொகையும் விவசாயத்தையே பெரிதும் நம்பியிருப்பதும் மட்டுமல்ல இதன் பிரச்சினை. இன்னமும் சாதிரீதியாகப் பிளவுபட்டுக்கிடப்பதும்தான்.
1947 முதல் 1967 வரையில் காங்கிரஸ் கட்சி ஏகபோகமாக மாநிலத்தை ஆட்சிசெய்தது. ஆனால், எந்த முதலமைச்சரும் முழுதாகத் தனது பதவிக்காலத்தைப் பூர்த்திசெய்ய முடியாதபடிக்குக் கட்சி அரசியல் குறுக்கிட்டது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் நீங்கலாக 20 பேர் ஆட்சிசெய்துள்ளனர். அவர்களில் கோவிந்த வல்லப பந்த், சம்பூர்ணானந்த், அகிலேஷ் யாதவ் மட்டுமே ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சிசெய்தனர். பெரும்பாலும் நிலையான ஆட்சி நடந்ததில்லை. ஆளும்கட்சிக்குள்ளேயே புகையும் உள்பூசல்களும், சாதி – மத அரசியல் அடிப்படையில் நடக்கும் பேரங்களும், வன்முறைகளுமே உத்தர பிரதேசத்தின் பின்தங்கிய நிலைமைக்கு முக்கியக் காரணம்.
மேல் சாதியினரின் ஆதிக்கம்
உத்தர பிரதேசத்தின் சுமார் 20 கோடி மக்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 40%; முற்பட்ட வகுப்பினர் 23%; பட்டியல் இனத்தவர் 21.1%; முஸ்லிம்கள் 19%. முற்பட்ட வகுப்பினரில் பிராமணர்கள் 11.26%; தாக்கூர்கள் 9%; பிற்படுத்தப்பட்டோரில் யாதவர்கள் 8.7%. மாநிலத்தின் மத்தியப் பகுதியில் யாதவர்களும் வடக்கு மத்தியப் பகுதி, கிழக்குப் பகுதிகளில் ராஜபுத்திரர்களும் தாக்கூர்களும் மேற்குப் பகுதியில் ஜாட்டுகள், குஜ்ஜார்களும் கிழக்கில் குர்மிகள், மத்தியப் பகுதியிலும் கிழக்கிலும் மவுரியா, குஷ்வாஹா பிரிவினரும் வசிக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் 5,013 சாதிப் பிரிவுகள் இருக்கின்றன. இந்தச் சாதிகளுக்குள் நடக்கும் போட்டி - பேரம்தான் உத்தர பிரதேச அரசியல்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது நன்றாக நிர்வகிக்கப்பட்ட பிராந்தியங்களில் ஒன்றாக இருந்தது உத்தர பிரதேசம். அது பின்தங்கக் காரணம் சமூக நீதிக்கு எதிராக அது செயல்பட்டதும், அரசியலில் சாதி பேயாட்டம் போட அனுமதிக்கப்பட்டதும். பெரும்பாலான நிலங்கள் மேல் சாதியினர் வசமே இருந்தன. அதனால், அவர்கள் பிற சாதியினரைத் தங்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வைத்திருந்தனர்.
பஞ்சாயத்துகளில் முக்கியப் பதவிகளையும் பொறுப்புகளையும் மேல் சாதியினர் பங்கிட்டுக் கொண்டனர். சட்டபூர்வமாகப் பட்டியல் இனத்தவர், பழங்குடி இனத்தவருக்கு இடங்கள் இருந்தாலும் அதில் தாங்கள் சொன்னதைக் கேட்டு நடப்போரை நியமித்து அல்லது போட்டியிட வைத்துக் கட்டுப்பாட்டை இழக்காதிருந்தனர். சமூகத்தில் கிடைத்த அந்தஸ்து அரசியலிலும் கைவரப்பெற்றது. இதனால், அரசின் பொதுப்பணித் துறை, பாசனத் துறை, நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்கள், வேலைவாய்ப்பு, அரசின் நிதி ஆகியவற்றில் பெரும்பங்கை மேல் சாதியினரால் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடிந்தது.
சாதியக் கண்ணோட்டங்களோடு இயங்கும் சமூகம் நவீன அறிவியல் முன்னேற்றங்களையும் சமூக மாற்றங்களையும் உள்வாங்காது, தேக்கமடைந்த நிலையிலேயே இருக்கும் என்பதற்கு உத்தர பிரதேசம் சிறந்த உதாரணம். சாதி ஆதிக்கமுள்ள சமூகம் பெண்களையும் முன்னேறவிடாது. இதனால், உத்தர பிரதேசத்தில் அரசியலில் பெண்களின் பங்கேற்பும்கூடக் குறைவாகவே இருக்கிறது.
உலகமயத்துக்குப் பிறகு
1990-களில் உலகமயம், தாராளமயம் கொள்கைகள் கடைப்பிடிக்கப்பட்டதால் உத்தர பிரதேசம் உள்ளிட்ட எல்லா மாநிலங்களிலும் சமூகங்களின் மீது அரசின் பிடி கொஞ்சம் தளர்ந்தது. அதுவரை அழுத்தி வைக்கப்பட்டிருந்த சமூகத்தவர் கொஞ்சம் கூடுதல் எண்ணிக்கையில் உயர் கல்விக்கூடங்களில் சேர்ந்து படிக்கவும் பட்டம் பெறவும் முடிந்தது. விவசாயத்திலிருந்து ஏராளமானோர் வெளியேறினர். ஆனால், இப்படி வெளியே வந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வேண்டும் இல்லையா, அது நடக்கவில்லை. ஏனென்றால், தொழில் துறை இங்கே பெரிதாக வளரவில்லை. நிலையற்ற ஆட்சி, சாதி – மதக் கலவரங்கள், அமைதியற்ற சூழல் நிலவும் மாநிலத்தை முதலீடு எப்படி வந்தடையும்?
கால் நூற்றாண்டில் கரைந்த காங்கிரஸ்
பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கை ஓங்கியபோது, சமாஜ்வாதி கட்சியும், தாழ்த்தப்பட்ட மக்கள் மேலெழும்பி வந்தபோது பகுஜன் சமாஜ் கட்சியும் முன்னோக்கி நகர்ந்தன. பாஜக மதத்தைக் கையில் வைத்து விளையாடியது. விளைவாக கால் நூற்றாண்டில் காங்கிரஸ் கரைந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸோடு சேர்த்து, ஏனைய இரு கட்சிகளையும் முறியடிக்க, பாஜக வேறொரு உத்தியைக் கையாண்டது. மாயாவதியின் சமூகமான ஜாதவ்கள் நீங்கலான பட்டியலின சாதிகள், முலாயம் சிங் சமூகமான யாதவ்கள் நீங்கலான பிற்படுத்தப்பட்ட சாதிகளைப் பிரதானப்படுத்தியதோடு, மதத்தையும் தேசியத்தையும் கலந்த ஒரு அரசியலை உருவாக்கியது. மக்களவைத் தேர்தலிலும், சட்டமன்றத் தேர்தலிலும் அது பெற்ற பெரும் வெற்றி இன்று உத்தர பிரதேசத்தை மேலும் சாதியமயமாக்கிவிட்டிருக்கிறது.
வெளிப்படையாகச் சொன்னால், இந்த முறை ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு சாதிப் பிரிவையே தம்முடைய பிரதான படையாகக் கருதி இந்தத் தேர்தலில் நிற்கின்றன. பகுஜன் சமாஜ் தாழ்த்தப்பட்ட சாதிகளையும், சமாஜ்வாதி பிற்படுத்தப்பட்ட சாதிகளையும் பெரிதென நம்புகின்றன. காங்கிரஸும் பாஜகவும் முற்பட்ட சாதிகளின் வாக்குகள் யாருக்கு என்ற போட்டியில் இருக்கின்றன. உத்தர பிரதேசத்தில் சாதிகள்தான் உண்மையான வேட்பாளர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT