Published : 05 Mar 2019 09:07 AM
Last Updated : 05 Mar 2019 09:07 AM
உரத்த குரலில் ‘போர் வேண்டும், போர் வேண்டும்’ என்று ஆளுக்காள் கூவிக்கொண்டிருக்கும் காலத்தில் ஜி.கிருஷ்ணனின் குரல் நிதானமானது. அமைதியை விரும்புவது. ராணுவ வீரரின் குடும்பத்தில் பிறந்து போரைப் பற்றிய கசப்பான நினைவுகளைச் சுமந்து, பின்னாளில் போர் தொடர்பான செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளராகப் பணியாற்றியவர். ‘தி இந்து’, ‘அசோசியேட்டட் பிரஸ்’ என்று அவருடைய இதழியல் பணி இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகளாவிய பரப்பைக் கொண்டது. தற்போது பாலக்காட்டில் தன் மனைவியுடன் வசித்துவரும் ஜி.கிருஷ்ணனுடன் நடத்திய உரையாடலிலிருந்து…
உங்கள் பின்னணியைப் பற்றிச் சொல்லுங்களேன்…
வேலையென்று முதலில் சேர்ந்தது ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில்தான். 1977-ல் ஆரம்பித்து 1988 வரை அங்கு பணிபுரிந்தேன். அதற்குப் பிறகு பல்வேறு நாடுகளில் பணிபுரிந்தேன். உலகின் பெரிய செய்தி நிறுவனமான ‘அசோசியேட்டட் பிரஸ்’ சார்பாக தெற்காசியப் பகுதியை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். தற்போது, செய்தித்தாள்களுக்கான சுயேச்சையான பயிற்சி ஆலோசகராக இருக்கிறேன். செய்தியாளர்கள், துணை ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்துக்கொண்டிருக்கிறேன். இதையெல்லாம் தாண்டி என் குடும்பம் ஒரு ராணுவக் குடும்பம். அப்பா ராணுவ வீரராக இருந்தவர். இரண்டாம் உலகப் போர், சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய-சீனப் போர், இந்திய-பாகிஸ்தான் போர் என்று பல போர்களையும் கண்டவர். அப்பா போர்களில் பங்கேற்றவராகவும் பிள்ளை அதன் பார்வையாளராகவும் இருந்ததுதான் காலத்தின் விசித்திரம்!
ராணுவம், போர்ச் சூழல் இவற்றோடு உங்களுக்கு நேரடி அறிமுகம் ஏற்பட்டது எப்போது?
1979-ல் ‘வார் கரெஸ்பாண்டென்ஸ் கோர்ஸ்’ என்று இந்திய அரசின் பாதுகாப்புத் துறை சார்பாக இரு மாதப் பயிற்சி வழங்கினார்கள். அப்போது ‘தி இந்து’ சார்பில் அனுப்பப்பட்டிருந்தேன். ‘மிலிட்டரி காலேஜ் ஆஃப் காம்பேட்’ என்ற ராணுவப் பயிற்சிக் கல்லூரியில்தான் எங்களுக்குப் பயிற்சி நடந்தது. அங்கே லெஃப்டினென்ட் ஜெனரலாக சுந்தர்ஜி இருந்தார். அவர் பின்னாளில் தரைப்படைத் தலைமைத் தளபதியாக ஆனார். அவர்தான் எங்களுக்குப் பயிற்சியளித்தார். அது தரைப்படை பயிற்சிக்கான களம். அதேபோல் கப்பற்படை, விமானப்படை என்று பல இடங்களுக்கும் சென்றோம். ராணுவத்தின் பல்வேறு கூறுகளையும் அப்போதுதான் தெரிந்துகொண்டோம். பயிற்சியின் முக்கியமான அம்சம் என்னவென்றால், போரைப் பற்றிய செய்திகளையும் தகவல்களையும் ஒரு செய்தியாளர் மக்களிடம் எப்படி முன்வைப்பது என்பதுதான்.
எங்களுக்கென செயற்கையாக ஒரு போர்க்களத்தையே உருவாக்கி, உருவகித்து அதைப் பற்றி உடனடியாகச் செய்திகளை எழுதச் சொல்லி எங்களுக்குப் பயிற்சியளித்தார்கள். அது ஒரு டிரில். ‘இது பாகிஸ்தான், இது நம் இந்திய நிலைகள்’ என்று இடங்களைப் பிரித்து, ஒரு போர்ச் சூழலையே அங்கு செயற்கையாக உருவாக்கினார்கள். பெரும் ஓசையை ஏற்படுத்தும் போலி குண்டு ஒன்றையும் பக்கத்தில் போட்டார்கள். ‘உங்கள் தட்டச்சு இயந்திரம் எல்லாம் உடைந்துபோய்விட்டன; பத்து நிமிடங்களுக்குள் இந்தப் போரைப் பற்றிய செய்தியை எழுதிக்காட்டுங்கள்’ என்று சொல்வார்கள். நாங்கள் கொடுக்கும் செய்திகளை வாங்கிப் படித்துக்காட்டி, ‘இன்னின்ன விஷயங்களை இப்படியெல்லாம் ஏன் எழுதக் கூடாது? இன்னின்ன விஷயங்களை எப்படியெல்லாம் எழுத வேண்டும்’ என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள். ஒரு சாதாரணத் தகவல்கூட எப்படி எதிரிகளுக்கு முக்கியமான சமிக்ஞை ஆகிவிடும் என்பதை அற்புதமாக விளக்குவார்கள்.
ஓர் உதாரணம் சொல்லுங்களேன்…
மக்களோடு மக்களாகத்தான் உளவாளிகள் கலந்திருப்பார்களாம். ராணுவச் சமையல்காரரிடம், “என்னய்யா, இன்னைக்கு என்ன சமைச்சே? முட்டை பிரியாணியா?” என்று கேட்பார்களாம். “ஆமாம். மூணு மணி நேரம் ஆச்சு” என்றாலே, அது முன்னூறு பேருக்கானது என்று புரிந்துகொண்டுவிடுவார்களாம். ராணுவக் குடியிருப்பில் திடீரென தினசரிகளின் எண்ணிக்கை குறைகிறது என்றால், அந்த நாடு எங்கோ ஆட்களைக் குவிக்கிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று சந்தேகப்படுவார்களாம். ஒருவர் வெளியூர் போகிறார் என்றால், முதலில் அவர் நிறுத்தச் சொல்வது தினசரி செய்தித்தாளைத்தானே? இப்படி நிறைய விஷயங்கள். அப்படி இருக்கையில், பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு விவகாரங்களை எழுதுகையில் விலாவாரியாக எழுதுவது, யூனிட்டுகளின் பெயர்கள் போன்ற நுட்மான தகவல்களையெல்லாம் குறிப்பிடுவது நம் நாட்டுக்கு நாமே குழிபறிப்பதாகிவிடும் என்று சொல்வார்கள். மிக முக்கியமாக அவர்கள் சொல்வது, போர் என்பது மிகத் தீவிரமான விஷயம். அதை விளையாட்டுபோல உற்சாக, வெறித்தன மனநிலையில் அணுகக் கூடாது என்பதுதான்.
இந்தப் பயிற்சியெல்லாம் உங்களுக்குப் பிற்பாடு உதவியதா?
கண்டிப்பாக. மிகப் பெரிய உதவியாக இருந்தது. எதையெல்லாம் எழுத வேண்டும்; எதையெல்லாம் எழுதக் கூடாது என்பதை நம்முடைய ராணுவத்திடமிருந்துதான் நான் கற்றுக்கொண்டேன். உதாரணத்துக்கு, கார்கில் போரின்போது டைகர் ஹில்ஸில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப்போகிறது என்பது எங்களுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால், நாளைக்கு இப்படி நடக்கப்போகிறது என்று எழுத முடியுமா? மல்டி பேரல் ராக்கெட் லாஞ்சரெல்லாம் கொண்டுவந்தபோது, அதையெல்லாம் நாங்கள் புகைப்படம்கூட எடுத்தோம். ஆனால், பிரசுரிக்கவில்லை. இதேபோல ராணுவத்தினர் எனக்குக் கற்றுக்கொடுத்த வழிகாட்டு நெறிமுறைகளும் முக்கியமானவை என்று நினைக்கிறேன்.
அந்த வழிகாட்டு நெறிமுறைகளைக் கொஞ்சம் பகிர்ந்துகொள்ளலாமா?
போர்க்களத்திலிருந்து நீங்கள் எதை உங்கள் வாசகர்களுக்குக் கொடுக்கப்போகிறீர்கள், எதை நீங்கள் மறைக்கப்போகிறீர்கள்? இதுதான் அந்த வழிகாட்டு நெறிமுறைகளின் மையமான விஷயம். ராணுவம் எவ்வளவோ அத்துமீறல்களில் ஈடுபடும்; சில சமயங்களில் மக்களையே அது கொல்லும். வியட்நாம், போஸ்னியா அனுபவங்களை இதற்கான உதாரணங்களாகச் சொல்லலாம். நீங்கள் எதையெல்லாம் வாசகர்களுக்குக் கொடுக்கப்போறீர்கள்? முக்கியமாக உங்களுடைய முதலாளி யார்? இப்படியான கேள்விகளை எழுப்பி ராணுவத்தினர் சொன்ன பதில் என்ன தெரியுமா? ‘உங்களுக்கு முதலாளி உங்கள் வாசகர்கள்தானே தவிர ராணுவமோ அரசோ அல்ல. உங்கள் தர்மம் ராணுவத்துக்குக் கட்டுப்பட்டதல்ல, உங்கள் வாசகர்களுக்குக் கட்டுப்பட்டது. நீங்கள் உண்மையைத்தான் வாசகர்களுக்குத் தர வேண்டும்.’
ராணுவத்திலேயே இப்படிக் கூறினார்களா, ஆச்சரியமாக இருக்கிறதே?
நம்புங்கள். ‘ஒவ்வொரு தரப்புக்கும் ஒவ்வொரு தர்மம் இருக்கிறது. போர் என்று வந்துவிட்டால் நாங்கள் எதையாவது முயன்று பார்க்கவே நினைப்போம். நாங்கள் செய்வது வெளியில் தெரியக் கூடாது என்றும் நினைப்போம். அது எங்களுடைய பிரச்சினை. ஆனால், பத்திரிகையாளர்களான நீங்கள் உண்மைக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ஏனென்றால், உண்மை என்ன என்பதுதான் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி அழைத்துச் செல்லும். அது உங்களுக்கான தர்மம்’ என்று சொன்னார்கள். ‘பத்திரிகையாளர் என்பவர் பங்கேற்பாளர் அல்ல, கூர்ந்துநோக்குபவர் மட்டுமே’ என்று சொன்ன அவர்கள் அதற்கு ஓர் உதாரணமாக மார்ட்டின் லூதர் கிங் காலத்தில் நடந்த விஷயம் ஒன்றையும் சொன்னார்கள்.
ஒரு துப்பாக்கிச்சூட்டின்போது புகைப்படக்காரர் தனது கேமராவைக் கீழே போட்டுவிட்டு ஒரு பெண்ணைக் காப்பாற்ற ஓடியிருக்கிறார். இதை மார்ட்டின் லூதர் கிங் எதிர்க்கிறார். ‘பத்திரிகையாளர், புகைப்படக்காரரெல்லாம் பங்கேற்பாளர்கள் அல்ல, உற்றுநோக்குபவர்களே. அந்தப் பெண்ணைக் காப்பாற்ற ஓடியதால் ஏற்பட்டிருக்கும் நல்விளைவைவிட அந்தத் துப்பாக்கிச்சூட்டைப் படம் எடுத்து உலகுக்கு முன் காட்டியிருந்தால் ஏற்பட்டிருக்கக்கூடிய நல்விளைவு இன்னும் பல மடங்கு அதிகமாக இருந்திருக்கும். இந்த விஷயம் பல லட்சம் மக்களைப் போய்ச்சேர்ந்து அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியிருக்கும்; உன் தர்மம் பத்திரிகைத் தொழில்’ என்று கிங் கூறியதை ராணுவத்தினர் மேற்கோள் காட்டினார்கள். அதேபோல, போர்ச் சூழலில் ராணுவமும் அரசும் சொல்வதை நம்புங்கள்; ஆனால் சரிபாருங்கள்’ என்றும் சொன்னார்கள். கிடைத்த தகவலை ஒன்றுக்குப் பத்து முறை சரிபார்க்க வேண்டும்.
இது போருக்கு மட்டும் அல்ல; இதழியலில் அடிப்படை அறம் என்று சொன்னாலும்கூட போர்ச் சூழலில் கூடுதல் முக்கியத்துவம் இதற்கு அளிக்க வேண்டும். ஏனென்றால், எந்த ஒரு போரிலும் முக்கியமான ஓர் அம்சம் இரு தரப்பும் நடத்தும் பிரச்சாரப் போர். பிரச்சாரம் என்றாலே அதிலும் பொய்யும் ஒரு பகுதிதானே! அப்படி இருக்கையில், எல்லாச் செய்திகளையும் சந்தேகமின்றி நம்புவதும் அதைச் செய்தியாகப் பரப்புவதும் பல கோடிப் பேரின் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாகிவிடும் என்பதைச் சுட்டிக்காட்டினார்கள். எல்லாவற்றிலும் சிகரம், ‘நியாயமாக எழுதுங்கள்; பாரபட்சமில்லாமல் எழுதுங்கள்; நிதானமாக எழுதுங்கள்’ என்று அவர்கள் சொன்னது. ‘இந்தியா-பாகிஸ்தான்’ இருவரும் எதிரிகள்; பாகிஸ்தானை அழிக்க வேண்டும், வெட்ட வேண்டும், கொல்ல வேண்டும்’ என்றெல்லாம் எழுதாதீர்கள். இப்படி எழுதும்போது எதிர் நாட்டைச் சேர்ந்த சிலரின் உயிரை மட்டும் அல்ல; உங்கள் சொந்த நாட்டு ராணுவம் உட்பட கோடிக்கணக்கான மக்களின் உயிர்களையும் சேர்த்தே பணயம் வைக்கிறீர்கள். மக்கள் முன் தகவல்களை வையுங்கள்; அவர்கள் எப்படிச் சிந்திக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானிக்க விழையாதீர்கள். அவர்களுக்குச் சொந்த மூளை இருக்கிறது. அதை மதியுங்கள்’ என்றார்கள்.
ராணுவத்திடமிருந்து இப்படிப்பட்ட வழிகாட்டுதல்கள் வருவது என்பது எவ்வளவு முக்கியமான, சந்தோஷமான விஷயம்!
நிச்சயமாக! ஆனால், இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. உண்மையில், ராணுவத்தினர் நாம் நினைப்பதுபோன்று, நமக்குக் காட்டப்படுவதுபோன்று போர் வெறி பிடித்தவர்கள் இல்லை. ஏனென்றால், போர் என்றால் எவ்வளவு தீவிரமானது என்பது அவர்களுக்குத்தான் முழுமையாகத் தெரியும். நாட்டின் உயிரைப் பாதுகாக்கத்தான் ஒவ்வொரு ராணுவ வீரரும் விரும்புகிறாரே தவிர, தன்னுடைய உயிரைத் தேவையின்றி இழக்க யாருமே விரும்புவதில்லை. இந்த விஷயத்தில் என்னுடைய குடும்ப அனுபவத்தையே நான் உதாரணமாகச் சொல்ல முடியும்.
கொஞ்சம் விளக்க முடியுமா?
சமீபத்திய பதற்றச் சூழலின் பின்னணியில் என் அம்மாவுடன் பேசிக்கொண்டிருக்கையில், என்னுடைய அப்பாவின் போர் அனுபவங்களைப் பற்றிய பேச்சு வந்தது. அம்மா சொன்னார், “திடீர்னு அழைப்பு வந்து அப்பா போனார். அப்புறம் ஒருநாள் திடீர்னு லெட்டர் வரும். அதோடு பல மாதங்கள் அப்படியே ஓடும். வீட்டில் ஒருவருக்கும் ஒருவேளை உணவு இறங்காது.
எப்படி இறங்கும்? போர் முனைக்குச் சென்றவர் வீடு திரும்புவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது?” இதை என் அம்மா சொன்னபோது இந்த 95 வயதிலும் அவர் தேம்பித் தேம்பி அழுதார். எனக்குப் பழைய ஞாபகங்கள் வந்தன. 1962 சீனப் போரின்போது எனக்கு 6 வயது. விடுப்பில் வீட்டுக்கு வந்திருந்த என் அப்பா திடீரென்று ஒருநாள், ‘‘போர் தொடங்கப்போகிறது. நான் செல்ல வேண்டும்’’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். போர் தொடங்கியாகிவிட்டது என்றால் ஊருக்குச் சென்றிருக்கும் ராணுவத்தினருக்குத் தகவலெல்லாம் சொல்ல மாட்டார்கள். தானாகவே விடுப்பெல்லாம் ரத்தாகிவிடும்.
வானொலியில் போர் அறிவிப்பைக் கேட்டுவிட்டு உடனடியாகப் பக்கத்தில் உள்ள ராணுவப் பிரிவில் போய்ப் பதிவுசெய்துகொள்ள வேண்டும். அதற்கப்புறம் அவர் எங்கே சென்றார் என்பது எங்களுக்குத் தெரியவே தெரியாது. அவர் உயிரோடு திரும்பிவந்த பிறகுதான் அவர் அசாம் அருகே இருந்திருக்கிறார் என்பது எங்களுக்குத் தெரியவந்தது. அப்பாவும் அவருடைய நண்பர்களும் புறப்பட்டுச் சென்றபோது எல்லாக் குடும்பங்களிலும் பெண்கள் அனைவரும் கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்கள். என் வீட்டிலும் அம்மாவும், அக்காக்கள் இருவரும் தேம்பித் தேம்பி அழுதார்கள். ஏன் அழுகிறார்கள் என்று எனக்குப் புரியவேயில்லை. 1965 பாகிஸ்தான் போரின்போது எனக்கு 9 வயது. கொஞ்சம் விஷயங்கள் புரிபட ஆரம்பித்திருந்தன. 1971 போரின்போது எனக்கு 15 வயது. நிறைய விஷயங்கள் புரிபட ஆரம்பித்திருந்தன. இரவெல்லாம் தூக்கமே வராது. ‘அப்பா செத்துப்போய்விடப்போகிறார்’ என்ற உணர்வுதான் சூழ்ந்திருக்கும். எதுவுமே உத்தரவாதம் கிடையாது, பாருங்கள். என் அப்பாவுடன் சென்றவர்களில் ஒருவர் பாதியிலேயே திரும்பிவந்தார், ஊனப்பட்டு. எப்படியிருக்கும் உங்களுக்கு!
கார்கில் போரின்போது எனக்கு ஏற்பட்ட அனுபவத்திலும் அதை நேரில் பார்த்தேன். திராஸ் என்ற இடத்தில்தான் அதிகம் சண்டை நடந்துகொண்டிருந்தது. அதற்கு எதிரே டைகர் ஹில்ஸ் இருக்கிறது. ஒரே ஒரு லேண்ட்லைன் தொலைபேசிதான் இருக்கும். எஸ்.டீ.டி. ராணுவ வீரர்களுக்கு வாரத்துக்கு ஒரு நாள் இரண்டு மணி நேரம் ஒதுக்கி, ஊருக்குத் தொலைபேசி மூலம் பேசட்டும் என்று அனுப்புவார்கள். அந்தத் தொலைபேசி மூலம் ஊரிலுள்ள தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்காக மிக நீண்ட வரிசையில் கால் கடுக்க அந்த வீரர்கள் நின்றிருப்பார்கள். இரண்டு நிமிஷம் மூன்று நிமிஷம் மட்டும்தானே பேச முடியும். அதில் ஒரு சர்தார்ஜி ‘நான் திராஸில் இருக்கிறேன். திராஸில் இருக்கிறேன்’ என்கிறார். எதிர் முனையில் உள்ள அவருடைய குடும்பத்தினரோ
‘ஓ மதராஸா?’ என்று கேட்கிறார்கள். அவருக்குக் கிடைத்த அந்த இரண்டு நிமிடம் முழுவதும் ‘திராஸ்-மதராஸ்’ உரையாடல்தான். கண்களில் நீர் கசிய அந்த மனிதர் அங்கிருந்து அகன்றார். நெஞ்சை உருக்கிய காட்சி அது.
ஊடகங்கள் தங்கள் வியாபாரத்துக்காக, தொலைக்காட்சி நெறியாளர்கள் தங்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்குக்காக உச்ச ஸ்தாயியில் ‘போர் வேண்டும்’ என்று முழங்கலாம். ஆனால், ராணுவக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூட ‘போர் வேண்டும்’ என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அந்த வார்த்தை எவ்வளவு கொடுமைகளைக் கூட்டி வரும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஊடகங்களைப் பற்றிப் பேச்சு செல்வதால் கேட்கிறேன், இன்றைய அணுகுமுறைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
மோசம், மஹா மோசம். அந்தக் காலத்திலும் தேசப் பற்று இருந்தது. ஆனால், யாரும் இப்போது செய்வதுபோல அடித்தொண்டையில் கத்தித் தங்கள் தேசப் பற்றை உரக்கக் கூவிக்கொண்டிருக்கவில்லை. எனக்கு 63 வயது ஆகிறது. ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பான பங்கேற்பாளராக இல்லாமல் வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கிறேன். ரொம்பவும் பயமாக இருக்கிறது. எங்கள் உறவினர்கள் இருக்கும் வாட்ஸ்-அப் குழுமத்தில்கூட ‘பாகிஸ்தானை வெட்டணும், குத்தணும், குண்டுவீசிக் கொல்லணும். போர் தவிர வேறு வழியே இல்லை’ என்பதுபோலெல்லாம் தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள். வேதனையாக இருக்கும். ஊடகங்களுக்கு இதில் முக்கியமான பங்குண்டு. நிலைமை மோசமாவதற்கு அர்னாப் கோஸ்வாமியைப் போன்றவர்கள்தான் முக்கியக் காரணம். ‘எதிரி நாட்டின் ரத்தமா, நம் தேசத்தின் மண்ணா?’ என்பதுபோலெல்லாம் கத்துகிறார்கள். இப்படி வெறிபிடித்துக் கூச்சலிடுவதால் பீதியைக் கிளப்பிவிடுகிறார்கள்.
பீதி அதிகரிக்க அதிகரிக்க அவர்களுக்கு டி.ஆர்.பி. எகிறும். அந்தக் காலத்தில் நல்லவேளை அர்னாப் கோஸ்வாமி இல்லை. அதிகபட்சமாக “சீனாக்காரனே வெளியே போடா!” என்று சொல்வார்களே தவிர “போர் வேண்டும்” என்றெல்லாம் இப்படி பேச மாட்டார்கள். சமூக ஊடகங்கள் ஒவ்வொருவரையும் ஒரு ஊடகமாக்கிவிட்டிருப்பதன் விளைவு இது. ஒவ்வொருவரும் ராணுவ - ராஜதந்திர வல்லுநர்கள் ஆகிவிடுகிறார்கள். லைக்குகள், ஷேர்கள் கொடுக்கும் மயக்கம்தான் அவர்களைக் கத்தவைக்கிறது. அதன் உச்சம்தான், ‘நீ என் கருத்தை ஏற்கவில்லையென்றால் நீ ஒரு தேசத்துரோகி’ என்று சொல்லும் நிலை நோக்கி அவர்களைத் தள்ளுகிறது. புல்வாமா-பாலாகோட் தாக்குதல்களைப் பொறுத்தமட்டில் ஊடகங்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. ‘நம்புங்கள்; ஆனால் சரிபாருங்கள்’ என்று சொன்னேன் அல்லவா! நம் தரப்பில் 40 சொச்சம் பேர் இறந்தார்கள் என்று செய்தி வெளியிட்டால் அதற்கு ஆதாரம் இருக்கிறது; அவர்களின் உடல்களைக் கொண்டுசென்ற சவப்பெட்டிகளே அதற்குச் சான்று; செய்திகளை வெளியிட்டீர்கள்.
ஆனால், பாகிஸ்தான் தரப்பில் 300 சொச்சம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற செய்திக்கு என்ன சான்று தரப்பட்டிருக்கிறது? இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது என்று எந்தத் தொலைக்காட்சி நிறுவனமாவது கூறினார்களா? அப்படியென்றால், இந்தச் செய்தியை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் என்ன செய்திருக்க வேண்டும்? ‘இதை உறுதிசெய்துகொள்ள எங்களிடம் வழி இல்லை’ என்ற வரியோடு தகவலை எழுத வேண்டும். தரமான சர்வதேசச் செய்தி நிறுவனங்கள் இப்படித்தான் செய்யும். அப்புறம் அடுத்த தரப்புச் சூழலையும் கவனிக்க வேண்டும். பாகிஸ்தானில் ‘ராய்ட்டர்ஸ்’ செய்தி நிறுவனம் என்ன செய்தியை வெளியிட்டிருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். அதோடு நம்முடைய செய்தியைப் பொருத்திப்பார்த்து வாசகருக்குக் கொடுக்க வேண்டும்.
பாகிஸ்தானில் குண்டுவீசப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் உள்ள கிராமத்தினருடன் ‘ராய்ட்டர்ஸ்’ பேசியிருக்கிறார்கள். “ஆமாம். குண்டு வீசினார்கள்” என்று ராய்ட்டர்ஸிடம் கிராமத்தினர் கூறியிருக்கிறார்கள். மறுபடியும் அங்கு சென்றபோது “35 உடல்களை எடுத்துக்கொண்டு போனார்கள். அந்தப் பகுதியைச் சுற்றிலும் பாதுகாப்பைப் பலப்படுத்தினார்கள். எங்கள் கைபேசிகளையெல்லாம் பிடுங்கிக்கொண்டார்கள். எல்லோரையும் துரத்தியடித்தார்கள்” என்று அந்தக் கிராமத்தினர் கூறியிருக்கிறார்கள். இதையெல்லாம் செய்திக்கட்டுரைகளாக ராய்ட்டர்ஸ் எழுதி வெளியிட்டிருக்கிறார்கள். ஆக, இப்போது நாம் இந்தச் சம்பவம் தொடர்பாக சுயேச்சையான விசாரணையையோ ஆய்வையோ செய்வதற்குத் திடமான ஒரு தொடக்கப்புள்ளி கிடைத்திருக்கிறது. இங்கிருந்துதான் நாம் தொடங்க வேண்டும். ஆனால், இந்திய ஊடகங்கள் மோசமான இடம் நோக்கி நகர்ந்திருக்கின்றன. ‘பிரச்சாரப் போர்’ என்பார்கள். அதில் எடுத்த எடுப்பில் நம் ஊடகங்களில் பெரும்பாலானவை பலியாகிவிட்டன.
பிரச்சாரப் போரை எப்படித்தான் எதிர்கொள்வது? அதற்கான வழிமுறைதான் என்ன?
அரசுத் தணிக்கை என்று வந்தால் ஆபத்தாகிவிடும். புரளிகளை அம்பலப்படுத்தும் ‘ஆல்ட்நியூஸ்’ போன்ற சுயேச்சையான அமைப்புகள் நிறைய வேண்டும். செய்தித்தாள்களும் புரளிகளைக் களையும் விழிப்புணர்வு பகுதிகளைப் பிரசுரிக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக மக்களிடம் இயல்பான ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும். ஒரு அராஜகம் வரும்போது மக்களிடமிருந்து விழிப்புணர்வு தோன்றினால் மட்டுமே அதை எதிர்த்துப் போரிட முடியும்.
- ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT