Published : 22 Feb 2019 10:53 AM
Last Updated : 22 Feb 2019 10:53 AM
ஒரு அறிஞனை, ஒரு கலைஞனை, ஒரு கவிஞனை, ஒரு சாதனையாளனை முதலில் அதன் மெய்யான ஆகிருதியோடு கற்பனைசெய்வது அந்த அறிஞனாக, கலைஞனாக, கவிஞனாக, சாதனையாளனாகப் பேருரு எடுக்கப்போகும் அந்தச் சாதாரண நபர்தான். ஒரு துறைக்கு தன்னை ஒப்படைத்து, தன் சுகங்களையும் அன்றாட லௌகீக சௌகரியங்களையும் அர்ப்பணித்து ஈடுபடும் ஊடகமும் ஈடுபடுபவரும் வேறல்ல என்ற நிலையை அடையும்போதே அவன் மெதுவாகக் கண்டுகொள்ளப்படுகிறான். கொஞ்சம் வெளிச்சம் அவன் பாதையில் விழுகிறது. தமிழ்ச் சமூகச் சூழலில் புதுமைப்பித்தன் சொல்வதுபோல அதுவரை அவன் தனி இருட்டிலேயே உலவுபவன்.
மார்க்ஸியத் தத்துவம், கவிதை, புனைவு என்று தாம் ஈடுபட்ட புலத்தை விஸ்தரித்த அறிஞர் கோவை ஞானி; இரண்டாயிரமாண்டு பாணர் மரபின் தொடர்ச்சியான கவிஞர் விக்ரமாதித்யன்; மகத்தான மாயாஜாலக்காரர் பா.வெங்கடேசன். மூவருக்கும் ‘தமிழ் திரு’ விருது வழங்கப்பட்ட நிகழ்வானது உணர்வுகள் ததும்பும் தருணமாக அமைந்திருந்தது. சமூக அங்கீகார எதிர்பார்ப்பின்றி குறைந்த ஒளியில் பயணித்த மகத்தான கலைஞர்களுக்கு சமகாலத் தமிழ்ச் சமூகம் செலுத்திய நன்றியறிவித்தலாகவும், பிரியமாகவும், திரும்ப வழங்கி மகிழ்ந்த ஒளியாகவும் விளங்கியது.
பார்வையில் குறைபாடு உள்ள நிலையிலும், இந்த 84 வயதிலும் சமீபத்திய படைப்புகள் வரை உதவியாளர்களின், நண்பர்களின் உதவியோடு வாசித்தும் விவாதித்தும்வருகிற கோவை ஞானி காலையிலேயே நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார்.
இரவு வரை அத்தனை அமர்வுகளையும் அவர் இடைவிடாது கவனித்ததும் இடையிடையே கைதட்டி ஊக்குவித்ததும் அவருடைய உற்சாகத்தை ஒட்டுமொத்த அரங்குக்கும் பரப்பியது. கோவையிலேயே நிகழ்ச்சி நடந்ததால் ஞானியின் சிஷ்யர்கள் ஏராளமானோர் நிகழ்வுக்கு வந்திருந்தனர். அவரை எப்போதும் அவர்கள் சுற்றியிருந்தனர்.
கவிஞர் விக்ரமாதித்யன் தன் மனைவி பகவதியம்மாள், மகன் ப்ரேம் சந்த் ஆகியோருடன் நள்ளிரவில் வந்து சேர்ந்தார். மறுநாள் விழா அரங்கில் அதிகமானோர் புகைப்படம் எடுத்துக்கொண்டது விக்ரமாதித்யனுடன்தான். சலிக்காமல், மறுக்காமல் எல்லோருடனும் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் விக்ரமாதித்யன்.
முன்தினம் நடைபெற்ற இரவு விருந்துக் கொண்டாட்டத்திலேயே கைகோத்துவிட்டார் பா.வெங்கடேசன். ‘இந்து தமிழ்’ குழுவினருடன் மறுநாள் அமர்வுகளில் பேசவிருந்த கவிஞர் ஆனந்த், பேராசியர்கள் ராஜன் குறை கிருஷ்ணன், நவீனா உள்ளிட்டோருடன் பா.வெங்கடேசனும் அவர் மனைவி நித்யாவும் இணைந்துகொண்டபோது அந்த இரவே இலக்கிய இரவானது; விடுதி பெரும் உற்சாகக் களமானது. அதை அப்படியே மறுநாளுக்கும் கடத்தினார் பா.வெங்கடேசன்.
விவாத அரங்குகள் எல்லாம் முடிந்து, விழாவின் உச்சஸ்தாயிபோல அமைந்தது ‘தமிழ் திரு’ விருது வழங்கும் நிகழ்ச்சி. சமகாலச் சாதனையாளர்களின் பங்களிப்பு குறித்து எழிலுடனும் சுருக்கமாகவும் எடுக்கப்பட்டிருந்த காணொளிகளைத் திரையிடத் தொடங்கியதும் ‘தமிழ் திரு’ விருதுகளுக்கான கொண்டாட்டம் பார்வையாளர்கள் மத்தியில் நெகிழ்ச்சியையும் குளுமையையும் பரப்பத் தொடங்கியது.
கடைப் பையனாக எளிமையாக வாழ்க்கையைத் தொடங்கிய கவி விக்ரமாதித்யன் தமிழின் மகத்தான கவிஞனாக விஸ்வரூபமெடுத்த கதையைச் சொன்னது ஒரு காணொளி. தமிழில் இதுவரை பதிவாகாத கதைகளுக்கு உருவையும் மாயத்தன்மையையும் கொடுத்து உலவவிட்ட பா.வெங்கடேசன் குறித்த காணொளி அவருடன் ஒரு குறும்பயணத்துக்குப் போன அனுபவத்தைத் தந்தது. காணொளிகளின் உச்சமாக அமைந்தது ‘வாழ்நாள் சாதனையாளர்’ கோவை ஞானியைப் பற்றிய காணொளி. “தமிழென்றால் அமுதம், தமிழென்றால் புரட்சி” என்று அவர் சொன்னபோது அரங்கம் நெகிழ்ந்து கரைந்தது. எங்கும் தமிழ் உணர்வு பெருக்கெடுத்து ஓடியது.
விருது பெற்றவர்கள் மூவரும் ஒருசேர நின்றபோது, ஒட்டுமொத்த அரங்கத்தினரும் எழுந்து நின்று கை தட்டியதோடு, “வாழ்க தமிழ்” என்றும் முழங்கியபோது அங்கிருந்த அத்தனை பேர் கண்களிலுமே நீர் துளிர்த்தது; தமிழுக்காக உழைப்போருக்கான ஆன்ம நன்றியறிவித்தலாக அது அமைந்தது!
தமிழ் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றி : அ சோகன், ஆசிரியர் ’இந்து தமிழ்’
தமிழால் இணைவோம் என்ற ‘இந்து தமிழ்’ நாளிதழின் முழக்கம் வெறும் வார்த்தைகள் அல்ல; அதை ஒரு லட்சியமாகவே கொண்டிருக்கிறோம். எங்கள் பத்திரிகை தொடங்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ‘தி இந்து’ என்ற தன்னுடைய பெயரை ‘இந்து தமிழ் திசை’ என்று மாற்றிக்கொண்டதுகூட அதன் ஒரு பகுதிதான். வாசகர்கள் முதல் நாளிலிருந்து வலியுறுத்திய மாற்றம் அது. வாசகர்கள் சொன்னபடி செய்தோம். தமிழ் வாசகர்கள் பெரிய நம்பிக்கையை எங்கள் மீது வைத்திருக்கிறார்கள். அந்த நம்பிக்கையையும் மதிப்பையும் துளிகூடப் பாதிக்கப்படாமல் பாதுகாப்பதே எங்கள் முன்னிருக்கும் சவால்.
எங்கள் மூதாதையான ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் உயர் விழுமியங்களை எடுத்துக்கொண்ட நாங்கள், அதேசமயத்தில் ஆங்கில நாளிதழின் மொழிபெயர்ப்புபோல தமிழ் நாளிதழைக் கொண்டுவரவில்லை. ஏனென்றால், தமிழ் மொழிக்கென்று தனித்த பாரம்பரியமும் பெருமையும் இருக்கிறது. தமிழ்ச் சமூகத்துக்கேற்ப, தமிழ்ச் சூழலுக்கேற்பவே எங்களை நாங்கள் வளர்த்துக்கொண்டோம். உலகத்தைத் தமிழ்க் கண்கொண்டு பார்க்கும் நாளிதழாகவே இதை நாங்கள் உருவாக்கினோம்.
தமிழையும் தமிழ் ஆளுமைகளையும் கொண்டாடும் நிகழ்வாக ‘யாதும் தமிழே’ நிகழ்வைத் திட்டமிட்டபோது, தமிழுக்காகத் தொண்டாற்றியவர்களுக்கு நன்றி கூறும் விதமாக ‘தமிழ் திரு’ விருதைத் திட்டமிட்டோம். விருதுகள் என்றாலே, சர்ச்சைகள் அவதூறுகள் என்றாகிவிட்ட இன்றைய சூழலில், இந்த ‘தமிழ் திரு’ விருதுகள் விதிவிலக்காக இருக்க வேண்டும் என்ற உறுதியையும் எடுத்துக்கொண்டோம்.
இரண்டு ஆண்டுகளாக இந்த விருது அறிவிப்பு வெளியாகும் சமயம் ஒரு சர்ச்சையும் உண்டாகாமல் இருப்பது நாங்கள் தேர்ந்தெடுக்கும் ஆளுமைகளின் பெருமைக்கும், விருதுத் தேர்வுக் குழு கடைப்பிடிக்கும் நேர்மைக்கும் சான்றாகக் கருதலாம் என்று நினைக்கிறேன்.
‘தமிழ் திரு’ விருதை வெறுமனே ‘இந்து தமிழ்’ நாளிதழ் வழங்கும் விருதாகக் கருத வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே இந்த விருதை நாங்கள் வழங்குகிறோம். அதன் பொருட்டுதான் வாழ்நாள் சாதனையாளர் கோவை ஞானி அவர்களுக்கு விருதை வழங்குவதற்கான விருந்தினர்களைத் தேர்ந்தெடுக்கையில், நிகழ்ச்சி நடக்கும் கோவை மண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு துறை ஆளுமைகளையும் கொண்டு இந்த விருதை வழங்க முடிவெடுத்தோம்.
கோவை ஞானி, விக்ரமாதித்யன், பா.வெங்கடேசன் மூவருமே மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். இந்த விருதின் வழி எங்கள் இதயத்தின் அடியாழத்திலிருந்து நன்றியை அவர்களுக்கு உரித்தாக்குகிறோம்.
சென்னையில் மட்டுமே நடந்துகொண்டிருந்த இத்தகைய விழாக்களை சென்னைக்கு வெளியே கொண்டுசெல்லும் முயற்சியின் தொடக்கம் கோவை. இது தொடரும்!
விருதுகள் தனிமனிதருக்கல்ல சமூககத்துக்கான அங்கீகாரம்: ராஜூ முருகன், இயக்குநர்
வார இதழ், சிற்றிதழ், தீவிர அரசியல் இதழ் ஆகியவற்றின் உள்ளடக்கங்கள் சேர்ந்து ஒரு புதிய கோணத்தில் வெளிவரும் நாளிதழ் ‘இந்து தமிழ்’. எங்கள் ஊரில் ‘தி இந்து’ படிப்பதையே பெருமையாகப் பேசும் பழக்கம் உண்டு. அப்படிப்பட்ட ‘இந்து’வின் மேடையில் நிற்பதைப் பெருமையாகக் கருதுகிறேன்.
“ஒரு விருதின் பெருமை அதை வாங்குபவர் கையில் இல்லை. கொடுப்பவர் கையில் இருக்கிறது” என்று ஜெயகாந்தன் சொல்வார். தமிழகத்தில் ஏராளமான விருதுகள் சமகாலத்தில் கொடுக்கப்படுகின்றன. இவற்றில் மலினமான முறையில் கொடுக்கப்படும் விருதுகளும் உண்டு. மறுபுறம் அரசியலோடு வழங்கப்படும் விருதுகளும் உண்டு. இவற்றையெல்லாம் உடைத்து, உண்மையான, நேர்மையான, சுத்தமான கைகளிலிருந்து கொடுக்கப்படும் விருதுகள்தான் தனித்துவமான வெளிப்பாட்டையும் மரியாதையையும் பெருமையையும் கலைஞர்களுக்குக் கொடுக்கின்றன.
அமைதிக்கான நோபல் விருதைப் பெற்றுக்கொண்ட மார்டின் லூதர் கிங், “உலக அமைதிக்கான இப்பரிசைப் பெறும் இந்த நேரத்தில், எமது மக்கள் 20 மில்லியன் பேர் தெருவில் இறங்கிப் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இந்த முரணான சூழலில், உலக அமைதிக்கான பரிசைப் பெறுகிறேன். ஏனெனில், நான் அவநம்பிக்கையாளன் அல்ல. நம்பிக்கையாளன்” என்று தன் மக்களுக்கு அமைதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
“அன்பு, வெறுப்பு என இரண்டு பாதைகள் என் முன்னர் இருந்தன. நான் அன்பைத் தேர்ந்தெடுத்தேன்” என்று ஆஸ்கர் விருது மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதன் மூலம் அன்பின் செய்தி சர்வதேச அளவில் குழந்தைகளை எளிமையாகப் போய்ச் சேர்ந்தது.
ஒரு படைப்பாளி, தான் பெறும் விருதின் மூலம் தனது சமூகத்துக்கு, தேசத்துக்கு, மக்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிறார். அது அவருக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம் அல்ல. நேர்மையான கைகளால் வழங்கப்படும் விருதுகள் அந்த வகையில் சமூகத்தை அடுத்தகட்டத்துக்கு நகர்த்துபவை. ‘இந்து தமிழ்’ போன்ற நேர்மையான இடத்திலிருந்து கோவை ஞானி, விக்ரமாதித்யன், பா.வெங்கடேசன் ஆகியோருக்கு வழங்கப்படும் விருதுகளை மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.
கோவை ஞானியை நான் எனது ஆசான்களில் ஒருவராகக் கருதுகிறேன். மனித குலத்தின் ஆகப் பெரிய ஆன்மிகம் மார்க்சியம் என்று என் போன்ற எத்தனையோ பேருக்குக் கற்றுக்கொடுத்த ஆசான்.
விக்ரமாதித்யன் எனது செல்ல அண்ணாச்சி. அவரது கவிதைகளுக்கு, எழுத்துகளுக்கு ஈடுசெய்யும் மரியாதை கிடைக்கவேயில்லை. இந்த விருது அதை ஈடுசெய்துள்ளது. நுணுக்கமான எழுத்துகளுக்குச் சொந்தக்காரரான பா.வெங்கடேசனுக்கு இந்த விருது கிடைத்திருக்கிறது. கொஞ்சம்கூடக் குறைசொல்ல முடியாத அளவுக்கு விருதுத் தேர்வு நடந்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT