Published : 08 Feb 2019 09:00 AM
Last Updated : 08 Feb 2019 09:00 AM

டெல்லி கட்சிகள் தமிழகத்திடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்- கர்க சாட்டர்ஜி பேட்டி

வங்கத்தில் சிபிஐ அதிகாரிகள் சிறைபிடிப்பு, முதல்வர் மம்தா பானர்ஜியின் தர்ணா போராட்டம் ஆகியவை இந்திய அரசியலில் கூட்டாட்சி குறித்தும் மத்திய அரசின் அதிகாரங்கள் குறித்தும் மீண்டும் ஒரு விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ளது. இதுகுறித்து மொழியுரிமைச் செயல்பாட்டாளரும் கூட்டாட்சி குறித்துத் தொடர்ந்து குரல் எழுப்பி வருபவருமான வங்கத்தைச் சேர்ந்த ஆய்வறிஞர் கர்க சாட்டர்ஜியிடம் பேசினோம்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின்  ‘ஜனநாயகத்தைக் காப்போம்’ போராட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்திய ஒன்றியத்தின் கூட்டாட்சி முறை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் மிக முக்கியமான, அடிப்படை அங்கம். இதுவே அரசியலமைப்புச் சட்டத்தின் புனிதமான பகுதி. இந்தியா பல மாநிலங்களின் ஒன்றியம், அப்படித்தான் இந்தியா உருவானது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்படியிருக்கையில், ஒன்றிய அரசால் மாநில உரிமைகள் மீறப்படும்போது, இந்திய ஒன்றியம் என்ற கருத்துரு பல சவால்களைச் சந்திக்க நேரிடுகிறது. சிறப்பு போலீஸ் நிர்வாகச் சட்டத்தின் கீழ், பிரதமர் அலுவலகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சிபிஐ, மாநில சட்டம்-ஒழுங்கு, அரசியலமைப்புச் சட்டத்தை மீறுகிறது. இது ஜனநாயகத்தைக் குழிதோண்டி புதைப்பதற்குச் சமம்.

தேர்தல் நெருங்குவதால், இந்த நேரத்தில் மம்தா பானர்ஜி மீது குறிவைக்கிறார்கள். எதிர்க்கட்சிகளை இணைத்துப் பேரணி நடத்தியதாலேயே மம்தா மீது இத்தகைய தாக்குதல் தொடுக்கப்படுகிறது. மம்தா பானர்ஜி கூட்டாட்சியைக் காக்க தர்ணாவில் ஈடுபட்டார். ஒரு அரசியல் கட்சித் தலைவராக அவர் தேர்தலுக்காகக்கூட இதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சாரதா சிட்பண்ட் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட முகுல்ராய், கடந்த ஆண்டு பாஜகவில் சேர்ந்தார். அதன் பிறகு, அவரை சிபிஐ விசாரிக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக பாஜக அனைத்து அமைப்புகளையும் சிதைத்துவிட்டது. இப்போது இந்தியாவின் கூட்டாட்சி முறையையும் சிதைக்கிறது. அதனால், நமது கூட்டாட்சி முறையைப் பாதுகாப்போம் என்ற நிலையை மம்தா பானர்ஜி எடுத்திருக்கிறார். ஏனென்றால், அது பலரின் தியாகங்களால் உருவான ஒன்று.

மம்தா பானர்ஜியை சர்வாதிகாரி என பாஜக கூறுகிறதே? எதிர்க்கட்சிகள் வரும்போது அவர்களின் ஹெலிகாப்டர்களைத் தரையிறங்க விடுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளதே?

மம்தா பானர்ஜி வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை வாங்க நினைக்கிறார். பாஜக கோவாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைப் பணத்தின் மூலம் வாங்கியது. கர்நாடகத்திலும் அவ்வாறு முயன்று தோற்றுப்போனது. இது சர்வாதிகாரம் இல்லையா? பாஜக ஒரு பாசிசக் கட்சி. வன்முறையை நிகழ்த்தும் கட்சி. பாசிசவாதிகளான சாவர்க்கர், கோட்சே வழியில் செயல்படும் பாசிச பாஜகதான் இந்திய ஒன்றியத்தை ஆட்சிசெய்கிறது.

பாஜக அனைத்துத் தன்னாட்சி அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துவதாக நினைக்கிறீர்களா?

ஆமாம். அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. எதிர்க்கட்சிகள் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி ஒரு காரணம். எதிர்க்கட்சிகளை இணைத்து  மம்தா பேரணி நடத்தினார். அதற்காக அவர் மீது தாக்குதல் நிகழ்த்தப்படுகிறது. மற்றொன்று, பாஜக அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி, அதனைச் சிதைக்கப்பார்க்கிறது. அதன்மூலம், இந்திய ஒன்றியத்தை சர்வாதிகாரமாக மாற்றுவதற்கு முன்னர், மாநில அதிகாரங்களைக் காக்க வேண்டும்.

சிபிஐ அதன் நம்பகத்தன்மையை இழந்து விட்டதாக நினைக்கிறீர்களா?

சிபிஐ அதன் நம்பகத்தன்மையை எப்போதோ இழந்துவிட்டது. பாஜகவை மட்டும் குற்றம்சாட்டவில்லை. காங்கிரஸ் ஆட்சியிலும் இம்மாதிரி நடைபெற்றிருக்கிறது. சிபிஐயை ஒரு அரசியல் கருவியாக மத்தியில் இருக்கும் அரசு பயன்படுத்துகிறது. இம்மாதிரியான அதிகாரம் மத்திய அரசுக்குத் தேவைதானா எனக் கேள்வியெழுப்ப வேண்டிய தருணம் இது. மத்திய அரசு மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டு வந்தால், எந்த அமைப்பு அதனை விசாரிக்கும்? சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படுவதன் மூலம், மாநிலங்களின் இறையாண்மை தகர்க்கப்படுகிறது. மாநிலங்களின் இறையாண்மை தகர்க்கப்பட்டால், இந்திய ஒன்றியத்தின் இறையாண்மையும் சிதைந்துபோகும்.

அப்படியென்றால், சாரதா சிட்பண்ட் போன்ற ஊழல் குற்றச்சாட்டு விவகாரத்தில், எப்படி சுதந்திரமான விசாரணையைக் கோருவது?

இது மிக முக்கியமான பிரச்சினை. நான் சிபிஐயின் தனிப்பட்ட அதிகாரிகள் குறித்துக் கூறவில்லை. அவர்களை ஆட்டுவிக்கும் அரசியல் தலைவர்கள் குறித்துப் பேசுகிறேன். தன்னளவில் சுதந்திரம் பெற்ற சிபிஐ போன்ற அமைப்புகளை அரசியல் கட்சிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்போதுதான் இத்தகைய பிரச்சினைகள் எழுகின்றன. மாநிலங்களில் சிபிசிஐடியை அரசுகள் தவறாகப் பயன்படுத்தினால், மக்கள் அந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிவார்கள். இதுதான் முக்கியம். அரசியல் அதிகாரம் மக்களிடத்தில்தான் இருக்கிறது. அதேபோன்று, சிபிஐ தவறாகப் பயன்படுத்தப்படும்போது எதிர்க்கட்சிகள், அதனை மக்களிடத்தில் கொண்டுசெல்ல வேண்டும்.

இந்த விவகாரம், கூட்டாட்சி குறித்த பரவலான விவாதத்தை எழுப்பியிருப்பதாக நினைக்கிறீர்களா?

விவாதத்தை எழுப்பியிருக்கிறதா என்றால், அதைச் சொல்ல இன்னும் காலம் தேவைப்படுகிறது. 1950-ல் நமது அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதிலிருந்து மாநில அதிகாரங்கள் பெரும்பாலானவை பொதுப்பட்டியலில் சென்றுவிட்டது. மாநில அதிகாரங்கள் குறைந்துகொண்டே வருகின்றன. அதாவது, மத்திய அரசின் அதிகாரங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்தியாவின் கூட்டாட்சி முறை சிக்கலானது. அதனை முழுவதுமாகக் கூர்ந்துநோக்குவதற்கான காலம் வரும். திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி மத்திய - மாநில அரசுகளின் அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய ராஜமன்னார் கமிட்டியை அமைத்தார். அதன் பரிந்துரைகள் மிக முக்கியமானவை. அண்ணாவும் கருணாநிதியும் கூட்டாட்சி குறித்துப் பேசியதை டெல்லியில் உள்ள அரசியல் கட்சிகள், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்டவை சிந்திக்க வேண்டும்.

சித்தராமையாவும் கூட்டாட்சிக்காகக் குரல் எழுப்பியிருக்கிறார். பரவலான குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. கூட்டாட்சியை வலியுறுத்திய தமிழகத்தில், இப்போது அண்ணாவின் பெயரில் இயங்கும் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக வரும் செய்திகள் வருத்தத்தை அளிக்கின்றன. நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. நம்மிடையே ஒற்றுமைதான் இருக்க முடியும். ஒன்றுபோல் இருக்க முடியாது.

- நந்தினி வெள்ளைச்சாமி

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x