Published : 26 Feb 2019 09:58 AM
Last Updated : 26 Feb 2019 09:58 AM

பாமகவை மட்டும் ஏன் விமர்சிக்கிறீர்கள்?- கே.பாலு பேட்டி

அதிமுக - பாமக கூட்டணி அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே கடுமையான விமர்சனங்களைச் சந்தித்துவருகிறது பாமக. திராவிடக் கட்சிகளுக்கு மாற்று என்று பாமக முன்வைத்த முழக்கம் என்ன ஆயிற்று?  இவ்வளவு காலமும் அதிமுக ஆட்சியின் ஊழல்களைக் கண்டித்துவிட்டு அக்கட்சியுடன் கூட்டணி வைப்பது சரியா? பாமக செய்தித் தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே.பாலு பேசுகிறார்.

 தேசியக் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்பதான வியூகத்தை எடுத்த நீங்கள் இன்று மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்கள் என்றால், நீங்கள் வெளியிட்ட  நிழல் நிதியறிக்கைகள், வேளாண் நிதியறிக்கைகள் தொடங்கி அன்புமணியை மாற்றுத் தலைமையாக முன்னெடுத்தது வரை எதுவும் மாநிலத்தில் தனிச் செல்வாக்கு பெற வழிவகுக்கவில்லையா?

பாமக முன்வைத்த நிழல் அறிக்கைகள் மக்களுடைய கவனத்துக்குப் போயின. ஆனால், அதற்கு உரிய மதிப்பு அளிக்கப்படவில்லை. ஊடகங்களுக்கும் இதில் பங்கிருக்கிறது. அப்புறம், வேளாண் நிதியறிக்கைகள் போன்ற முன்னெடுப்புகளை எல்லாம் பாமக தேர்தல் வெற்றி தோல்விகளை வைத்து செய்யவில்லை. கூட்டணி முடிவு என்பது தேர்தல் வியூகம். அது பலனளிக்கவில்லை என்றால், மாற்றிக்கொள்வது அரசியல் கட்சிகளுடைய இயல்புதான்.

இன்று பாமக மீது வரும் விமர்சனங்கள் நீங்கள் கூட்டணி முடிவு எடுத்தது தொடர்பில் அல்ல; திமுக, அதிமுக இரண்டையும் முற்றிலுமாக நிராகரித்தீர்கள்; ஆளும் பாஜக – அதிமுக இரண்டின் ஆட்சியிலுமே எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று சொன்னீர்கள். இப்போது அவர்களுடன் எப்படி கூட்டணி சேர்ந்தீர்கள் என்பதே பிரதான கேள்வி?

தேர்தல் கூட்டணி தொடர்பாகச் கட்சிகளின் நிலைப்பாடு மாறுவது என்பதில் கடந்த காலச் செயல்பாட்டை எடுத்துக்கொண்டால் அதில் விதிவிலக்குகளே கிடையாது. காங்கிரஸோடு திமுகவும் சரி, காங்கிரஸோடு விடுதலைச் சிறுத்தைகளும் சரி, திமுகவோடு மதிமுகவும் சரி, கம்யூனிஸ்ட்டுகளோடு காங்கிரஸும் சரி; ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். பிறகு, அவர்களே அதை மாற்றிக்கொள்கிறார்கள். பாமகவை மட்டும் ஏன் நீங்கள் விமர்சிக்கிறீர்கள்?

ஆனால், பாமக மட்டும்தானே மாநிலத்தில் ஒரு மாற்று அரசியலை முன்னெடுப்பதாகச் சொல்லிக்கொண்டது? விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு கட்சிகளையும், அதன் தலைவர்களையும் முற்றிலுமாக நிராகரித்து உறுதிப்பட பேசியது?

நேற்று மக்கள் நலக் கூட்டணியிலிருந்தவர்கள் இன்று அப்படியே திமுக கூட்டணிக்கு வந்திருக்கிறார்களே, அவர்களைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேளுங்களேன். திமுகவுக்கும் இடதுசாரிகளுக்கும் இடையிலான கூட்டணியைப் பார்த்து ஊடகங்கள் ஏன் இப்படியொரு கேள்வியை முன்வைக்கவில்லை?

 நீங்கள் மற்றவர்களைத்தான் குற்றஞ்சாட்டுகிறீர்களே தவிர, நேரடியாகப் பதில் அளிக்க மறுக்கிறீர்கள். சரி, திமுக, அதிமுக இரண்டுடனும் பேசியது பாமக. எந்த அடிப்படையில் அதிமுகவைத் தேர்ந்தெடுத்தது? ஏனென்றால், நீங்கள் அதிமுகவையே அதிகம் விமர்சித்தீர்கள்?

 நாங்கள் திமுக, அதிமுக இரண்டையுமே பரிசீலித்தோம். அதில் எது சிறந்தது என்றுதான் முடிவெடுத்திருக்கிறோம். இது தொண்டர்களின் முடிவு.

 அப்படித்தான் அன்புமணி ராமதாஸும் சொல்லியிருக்கிறார். ஆனால், மக்களவைத் தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் அன்புமணிக்கு ஒரு மாநிலங்களவை இடம் உறுதி என்பதால்தான் இந்தக் கூட்டணி என்று சொல்கிறார்களே, அதுதான் காரணமா?

 அப்படிப் பார்த்தால், போன முறை திமுகவும் எங்களுக்கு மாநிலங்களவை இடம் தந்திருந்ததே! இடைத்தேர்தலில் 21 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுகவே போட்டியிடுகிறது; அதற்கான ஈடுதான் இந்த மாநிலங்களவை இடம். திமுகவைப் புறக்கணித்து அதிமுகவுடன் நாங்கள் சேரக் காரணம், திமுக எங்களைத் தனிமைப்படுத்த எண்ணியது. அதனால்தான், நாங்கள் அதிமுகவுடன் இணைந்தோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x