Last Updated : 10 Sep, 2014 09:08 AM

 

Published : 10 Sep 2014 09:08 AM
Last Updated : 10 Sep 2014 09:08 AM

மதவெறிக்கு எதிராக என்றென்றும் நீங்கள் நினைவுகூரப்படுவீர்கள் விபின் சந்திரா!

மும்பையில் நிகழ்ந்த விஸ்வ இந்து பரிஷத் பொன்விழாக் கொண்டாட்டத்தின்போது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் இப்படிப் பேசினார்: “ஹிந்துஸ்தானம் என்பது இந்து நாடுதான்… நமது தேசத்தின் அடையாளம் இந்துத்துவாதான். அது பிறவற்றை (மற்ற மதங் களை) தன்னுள் ஸ்வாஹா செய்துவிட்டது.”

இதற்கும் சில நாட்களுக்கு முன்னர்தான் “நரேந்திர மோடி ஆட்சியின் கீழ், இந்தியா ஒரு இந்து நாடாக உருமாறும்” என்று கோவா அமைச்சர் தீபக் தபாலிகர் பேசினார். அதற்கும் கொஞ்ச நாட்கள் முன்னர்தான் சுப்பிரமணியன் சுவாமியும் அசோக் சிங்காலும் இதேபோன்ற வகுப்புவாத வார்த்தை களை உதிர்த்திருந்தார்கள்.

இந்தத் தருணத்தில் கடந்த ஆகஸ்ட் 30 அன்று மறைந்த, நாட்டின் குறிப்பிடத் தகுந்த வரலாற்றா சிரியரும், நேஷனல் புக் டிரஸ்டின் (என்.பி.டி) முன்னாள் தலைவருமான விபின் சந்திரா மீண்டும் மீண்டும் விடுத்துவந்த எச்சரிக்கை நினைவுக்கு வருகிறது.

வகுப்புவாதத்தின் ஆணிவேர்

“வகுப்புவாதத்தின் ஆணிவேராக இருப்பது மதமோ அல்லது மத வேறுபாடுகளோ அல்ல. மதம் வகுப்புவாதத்தின் அடிநாதமும் அல்ல. மதத்தைப் பரப்புவதற்காகவும் வகுப்புவாதிகள் கலவரத்தைத் தூண்டவில்லை. மதம் வகுப்புவாதிகள் பயணிக்கும் ஒரு வாகனம் மட்டுமே. அது ஒரு கருத்தியல்.

வகுப்புவாதம் என்பது பல்வேறு மதப்பிரிவுகளுக்கு இடையே பகைமையையும் வெறுப்பையும் வன் முறையையும் தூண்டிக்கொண்டேயிருக்கும். அதற்கு ஓய்வோ உறக்கமோ இருப்பதில்லை. எனவே, வகுப்புவாதத்தை முறியடிப்பது என்பது தொய்வில்லாத கருத்தியல் போராட்டம்” என்று கூறும் விபின் சந்திரா, மதச்சார்பின்மை மற்றும் வகுப்புவாதம் ஆகிய சொல்லாடல்களை மிகத் துல்லியமாக வரையறுக்கிறார்.

மதச்சார்பின்மையின் இந்திய வரையறை

மதச்சார்பின்மை என்பது ஐரோப்பியப் பொருத்தப்பாட்டில் அரசியல், அரசு மற்றும் மதம் தொடர்பற்ற அனைத்து மட்டங்களிலும் மதத்தை நீக்குவது எனப் புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால், பல மதங்களைச் சார்ந்த மக்கள், பல நூற்றாண்டுகளாக இணக்கமாக வாழும் இந்தியாவில் இது தனித்தன்மை பெறுகிறது என்கிறார் விபின் சந்திரா.

நேரு குறிப்பிடுவதைப் போல “மதச்சார்பின்மை பின்பற்றப்படும் ஒரு நாட்டில், அங்கு மதம் கீழ்மைப் படுத்தப்படும் என்ற மிகச் சாதாரண அர்த்தத்தில் புரிந்துகொள்ள வேண்டாம். ஒருவர் எந்த மதத்தையும் பின்பற்றாதிருக்கும் சுதந்திரம் உட்பட, அனைத்து மதங்களுக்கான சுதந்திரத்தையும் சுய விருப்பத்தையும் அது அர்த்தப்படுத்துகிறது” என்கிறார் விபின் சந்திரா. ஏனென்றால், காலனியாதிக்கத்துக்கு எதிராக இந்திய மக்களை ஒன்றுதிரட்டுவதில் 19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்தே மதச்சார்பின்மை என்ற கருத்தியல் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல, வகுப்புவாதம் என்ற கருத்தியலுக்கும் ஆழமாக அர்த்தம் கொடுக்கிறார். “இந்தியாவில் பல மதங்கள் ஒன்றையொன்று எதிர்த்தே வாழ்ந்துள்ளன. ஒன்றையொன்று அழிப்பதே அதன் இயக்கம். எனவே அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சமூகம் போன்ற மதம் சாராத காரணங்களாக இருந்தாலும் மத அடையாள அடிப்படையில் மட்டுமே மக்களை ஒன்றுதிரட்ட முடியும் என்ற நம்பிக்கையிலிருந்து வகுப்புவாதம் தொடங்குகிறது” என்கிறார்.

இன்று அவர் மறைந்துவிட்டபோதும் மீண்டும் வலதுசாரிக் கருத்தியல் வலுவடைந்துவரும் இன்றைய சூழலில், அதைக் கருத்தியலாக எதிர் கொள்வதற்கு அவரது வழிகாட்டுதல்கள் என்றும் மதச்சார்பற்ற சக்திகளுக்குப் பயனுள்ளதாக அமையும்.

- அப்பணசாமி, எழுத்தாளர், பத்திரிகையாளர், தொடர்புக்கு: jeon08@gmail.com​​

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x