Published : 21 Feb 2019 09:50 AM
Last Updated : 21 Feb 2019 09:50 AM
தமிழ் வாழ்வின் பண்பாட்டு அசைவுகளைப் பேசும் அரங்கமாகவும் தமிழ் கலை இலக்கியச் சாதனையாளர்களைக் கௌரவிக்கும் விழாவாகவும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் முன்னெடுக்கும், ‘யாதும் தமிழே’ கொண்டாட்டத்தின் மாலை அமர்வுகள் தமிழ் அடையாளத்தையும் வாழ்வையும் பேசுவதாக அமைந்தது. தமிழ் உணவு, தமிழ்க் கல்வி, தமிழ் அரசியல் என்று தனித்தனியே நடந்த மூன்று அமர்வுகளும் பார்வையாளர்களைக் கட்டிப்போட்டிருந்தன.
தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்றான தமிழ் உணவைப் பற்றிய அமர்வில், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியனும் மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதியும் விவாதித்தனர். ‘இந்து தமிழ்’ நடுப்பக்க ஆசிரியர் சமஸ் அமர்வை ஒருங்கிணைத்தார்.
சமஸ்: இந்தியா முழுக்கப் பயணிக்கையில், பல்வேறு கலாச்சாரங்களிலும் உணவுப் பழக்கத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டிருப்பதைக் கண்டேன். உதாரணமாக, தமிழ்ப் பண்பாட்டைப் போலவே சிறப்புமிக்க வங்கப் பண்பாட்டைச் சொல்லலாம். கொல்கத்தாவில் இன்று பாரம்பரிய வங்காளி உணவை நீங்கள் சாப்பிட வேண்டும் என்றால், ஒன்று மெஸ்கள், சாலையோரக் கடைகளுக்குச் செல்ல வேண்டும் அல்லது உயர் வர்க்க விடுதிக்குச் செல்ல வேண்டும்.
மற்ற இடங்கள் யாவும் பிரட் சாண்ட்விச்சும் மோமோவும் ஃபாஸ்ட்ஃபுட்டும் ஆக்கிரமித்திருக்கின்றன. தமிழ்நாட்டில் புதிய உணவுகளுக்கான இடமும் உருவாகிறது; பழைய உணவுகளும் நீடிக்கின்றன. அதாவது, பீட்ஸாவுக்கும் இங்கே இடம் இருக்கிறது; இன்னொருபுறம் பீட்ஸாவின் பாதிப்பில் தோசையும் பல விதங்களில் மாறி தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. ஆனால், புதிய தலைமுறை எப்படி அணுகும் என்று தெரியவில்லை. நகரங்களில் இன்று வீடுகளில் இட்லி மாவு அரைப்பதே அரிதாகிவருவதையும் குழந்தைகள் முழுக்க நூடுல்ஸ் பக்கம் சாய்வதையும் உதாரணமாகச் சொல்லலாம். இதை எப்படிப் பார்ப்பது?
தமிழச்சி தங்கபாண்டியன்
ஒரு கரிசல்காட்டுக்காரியாக இன்னமும் எனது பால்யத்தில் சாப்பிட்ட உணவுகளின் ருசி என் நாவில் ஒட்டியிருக்கிறது. நம்முடைய பாரம்பரிய உணவு என்பது ருசியோடு மட்டும் தொடர்புடையது இல்லை. அந்தந்தப் பகுதி மண்ணின் இயல்புக்கேற்ற தானியங்களோடும் நம்முடைய உடல்வாகோடும் தொடர்புடையது. நிறைய நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது. என் அப்பா வழியில் சித்தப்பாவும் பெரியப்பாவும் காலையில் வாய் கொப்பளிப்பதே ஒரு மரத்துக் கள்ளில்தான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.
கள் வெறும் போதை வஸ்தாக மட்டும் இருந்ததில்லை. நாம் இழந்துவிட்டோம். முக்குளிப் பணியாரம், பருத்திப் பாலில் செய்த அப்பம், பெரும்பானைச் சோறு என்று எவ்வளவோ என் நினைவுக்கு வருகிறது. பருத்திப் பால் எவ்வளவு அபாரமான ஒரு உணவு! இன்று கண் முன்னே காணாமல்போய்விட்டது. என் அப்பச்சிக்குக் கடைசி வரை ஒரு பல்கூட விழவில்லை என்றால், அவர் சாப்பிட்ட உணவு அப்படியானதாக இருந்தது. இளைய தலைமுறை என்று குழந்தைகளை மட்டும் இந்த விஷயத்தில் குற்றம் சொல்ல முடியாது.
என் பாட்டி, அம்மா எனக்குச் சமைத்துத் தந்த பல பாரம்பரிய உணவு வகைகளையும் அவற்றின் சிறப்பைச் சொல்லி என் மகள்களுக்கு நான் சமைத்துக்கொடுக்கவும் சமைக்கக் கற்றுக்கொடுக்கவும் செய்திருக்கிறேன். அவர்கள் அதை ஆர்வத்தோடுதான் எடுத்துக்கொள்கிறார்கள். புதிய உணவுகளைச் சாப்பிடுவதில் தவறேதும் இல்லை. வெளிநாடுகளுக்குச் செல்லும்போது அறிமுகமாகும் உணவுகளைக்கூட இங்கு வந்ததும் நான் செய்து சாப்பிட்டுப் பார்க்கத்தான் செய்கிறேன்.
ஆனால், அது அன்றாடம் ஆகிவிடக் கூடாது. குழந்தைகளை நுகர்வுக் கலாச்சாரத் தாக்கத்திலிருந்து காக்க வேண்டிய கடமை இன்று ஏற்பட்டிருக்கிறது.
சிதைகிறது தமிழ்ச் சமூகத்தின் பாரம்பரிய உணவு முறை: பக்தவத்சல பாரதி
உலகத்தில் இன்றும் நின்று நீடிக்கும் பழைமையான நாகரிகங்களில் ஒன்று தமிழ் நாகரிகம். தினைகளை அடிப்படையாகக் கொண்ட உணவு முறை நம்முடையது. இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 350 சமூகங்கள் சேர்ந்து வசிக்கின்றனர். இவர்களில் 250 சமூகங்கள் தமிழ் பேசுபவை; மீதியுள்ள சமூகங்கள் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று ஏனைய மொழிக் குழுக்களாக வந்து இன்று தமிழ்ச் சமூகத்தின் ஒரு பகுதியாக உருவெடுத்திருப்பவை.
இன்றைய தமிழ் உணவில் இவ்வளவு சமூகங்களின் பங்களிப்பும் பல்லாயிரமாண்டு வரலாறும் கலந்திருக்கிறது. தமிழ்நாட்டில் நகர்மயமாக்கம் மூன்று கட்டங்களாக நடந்துள்ளது. பட்டினப்பாலையில் பேசக்கூடிய நாளங்காடி, அல்லங்காடி நகர் கலாச்சாரம் முதல் கட்டம். பிறகு, காலனிய காலத் தொழில்மயமாதலோடு நடந்தது இரண்டாவது கட்டம். பிறகு, பின்காலனியமும் உலகமயமாக்கமும் சேர்ந்து செய்தது மூன்றாவது கட்டம். இந்த மூன்றாவது கட்டம், அதாவது பின்காலனியச் சூழ்நிலையில் உணவு முழுக்க வர்த்தகப் போரின் நடுவே சிக்கிக்கொண்டிருக்கிறது. இது ஒரு கலாச்சாரத் தாக்குதல்தான்.
இது மூன்றாம் உலகப் போரை ஒத்த போராகும். பன்னாட்டு மூலதனத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த நுகர்வுக் கலாச்சாரத்தில்தான் தமிழ்ச் சமூகத்தின் உணவு முறை பெரிய அளவில் சிதைந்திருக்கிறது. சங்க காலத்தில் ‘தேறல்’ என்று அழைக்கப்படும் கள்ளைப் பெண்களும் சாப்பிட்டிருக்கிறார்கள். விருந்தினர்களுக்கும் அதைக் கொடுத்திருக்கிறார்கள்.
இன்று இழந்துவிட்டோம். நீராகாரம் ஓர் அற்புதமான உணவு. இழந்துவிட்டோம். சிறுதானியங்களைக் கொண்ட சில உணவு வகைகளை நாம் மீட்டெடுக்கிறோம், ஏனைய சமூகங்களைக் காட்டிலும் விழிப்புணர்வோடு இருக்கிறோம் என்றாலும், இன்றைய நுகர்வுத் தாக்குதலிலிருந்து நாம் தப்பிப்பது பெரும் சவால்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT