Last Updated : 04 Sep, 2014 12:00 AM

 

Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM

இன அழிப்பின் சாட்சியம்

மனிதர்களின் பல்வேறு சாத்தியங்களும் போரின்போது வெளிவரும் என்று ஓஷோ சொல்வார். அது உண்மைதான். அதிலும் மனிதர்களின் எதிர்மறையான சாத்தியங்களை இரண்டாம் உலகப் போர் அளவுக்கு வெளிக்கொண்டுவந்தது வேறு எதுவும் இல்லை எனலாம். இதன் பரிமாணங்கள்தான் இரண்டாம் உலகப் போரும், ‘ஹோலோகோஸ்ட்’ எனும் யூத இன அழிப்பும்.

கிரேக்க மொழியிலிருந்து உருவாகிய ‘ஹோலோகோஸ்ட்’ என்ற சொல்லின் அடிப்படைப் பொருள் ‘தீயில் பலிகொடுத்தல்’. இதற்கு யூதர்கள் வைத்த பெயர் ‘ஷோவா’(Shoah). யூத மொழியில் இதற்குப் ‘பேரழிவு’ என்று பொருள்.

தங்களுடைய ஆரிய இனம்தான் உலகில் உள்ள இனங்களிலேயே உயர்ந்தது என்று கருதிய நாஜிக்கள், பிற இனங்களை, குறிப்பாக யூத இனத்தைக் கடுமையாக வெறுத்தனர். ஜெர்மனே யூதர்களால் அசுத்தப்பட்டிருக்கிறது என்று நாஜிக்கள் நம்பினார்கள். இந்த வெறுப்பின் உச்சம்தான் இன அழிப்பு.

‘ஹோலோகோஸ்ட்’டின்போது யூதர்கள் மட்டுமல்ல… ரோமா நாடோடி இனத்தவர்கள், தன்பாலின உறவாளர்கள், யெஹோவாவின் சாட்சிகள், உடல் குறைபாடுடையவர்கள், மனநலம் குன்றியவர்கள், நாஜிக்களை எதிர்த்தவர்கள், கம்யூனிஸ்டுகள், சோஷலிஸ்டுகள், தூய்மைக் குறைவான வர்களாகக் கருதப்பட்ட மற்ற இனத்தவர்கள் என்று பலரும் அழித்தொழிக்கப்பட்டனர்.

ஏப்ரல் 1, 1933-ல்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் அதிகாரபூர்வமாகத் தொடங்கப்பட்டன. யூதர்களின் குடியுரிமை முற்றிலுமாகப் பறிக்கப்பட்டது. தொடர்ந்து யூதர்கள் மீது நாஜிக்களாலும் ஜெர்மானியப் பொதுமக்களாலும் அத்துமீறல்கள் நிகழ்த்தப்பட்டன. 1938-ல் நவம்பர் மாதத்தில் ஆஸ்திரியாவில் உள்ள யூதர்கள் மீதான ‘இனஅழிப்’பை நாஜிக்கள் தொடங்கினார்கள். யூதர்களின் வியாபார நிறு வனங்கள், வீடுகள், சொத்துகள், வழிபாட்டுத் தலங்கள் எல்லாம் சூறையாடப்பட்டன. யூதர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.

கெட்டோக்கள் என்னும் யூதச்சேரிகள்

யூதர்களைத் தனிமைப்படுத்துவதற்கும் அவர்களை அழிப்பதற்கும் ஏதுவாகப் பல நகரங்களுக்கு வெளியே நூற்றுக் கணக்கான யூதச்சேரிகள் (கெட்டோ) உருவாக்கப்பட்டன. எந்த அடிப்படை வசதியும் இல்லாத நிலையில், யூதர்கள் அங்கே வசிக்கும்படி தள்ளப்பட்டனர். வார்ஸாவில் இருந்த ஒரு யூதச்சேரியில் மட்டும் அதிகபட்சமாக 4,45,000 யூதர்கள் இருந்தார்கள். யூதச்சேரிகளிலிருந்து தினமும் ஆயிரக் கணக்கான யூதர்கள் வதை முகாம்களுக்கும் கொலை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டனர். அதிகபட்சம் 100 பேர் இருக்கக்கூடிய ரயில் பெட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை ஏற்றி அனுப்பினார்கள். இதனால், பெரும்பாலானோர் கொலை முகாம்களை அடையும் முன்னரே இறந்துபோனார்கள்.

வதை முகாம்களும், கொலை முகாம்களும்

பொதுவாக, வதை முகாம்கள் என்று அழைக்கப்பட்டாலும் அவற்றில் உடலுழைப்பு முகாம்கள், படுகொலை முகாம்கள், போர்க் கைதிகளுக்கான முகாம்கள், இடைத்தங்கல் முகாம்கள் என்று பல வகைகள் இருந்தன. உடலுழைப்பு முகாம்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு மிகமிகக் கடினமான பணிகள் செய்விக்கப்பட்டன.

பொழுதுபோக்குபோல யூதர்களை நாஜிக்கள் கொன்றனர். எலிகள், கரப்பான்பூச்சிகள் போன்றவற்றை அறுத்து ஆய்வகங்களில் அறிவியல் சோதனை நடத்துவதைப் போல யூதர்களை, குறிப்பாக யூதக் கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் வைத்து ஜெர்மனி மருத்துவர்கள் நடத்திய மருத்துவ ஆய்வுகள்தான் கொடூரத்தின் உச்சம். மயக்க மருந்தே கொடுக்காமல் யூதர்கள் கோழியை அறுப்பது போல் விதவிதமாக அறுத்துப் பரிசோதிக்கப்பட்டனர். ஜெர்மானிய இனத்தின் மக்கள்தொகையை அதிகப்படுத்தும் வழிமுறையைக் கண்டறிய யூத இரட்டைக் குழந்தைகளை வைத்து டாக்டர் ஜோசஃப் மெங்கெலே நடத்திய பரிசோ தனைகள்தான் மிகவும் கொடூரம். அது மட்டுமன்றி, யூதர்களுடைய உடல்நிலை, மனநலம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களை இனம் பிரித்து உடலுழைப்பு முகாமுக்கும், விஷவாயு அறைக்கும் அனுப்பும் மருத்துவர்கள் குழுவைச் சேர்ந்தவர் அவர். ஆனால், இரண்டாம் உலகப் போர் முடிவுற்றதும் ஜெர்மனியிலிருந்து தென் அமெரிக்க நாடுகளுக்குத் தப்பிச்சென்றுவிட்டார். இரண்டாம் உலகப் போரின்போது கொடூரமான செயல்களை நிகழ்த்திவிட்டு, எந்தத் தண்டனையும் அனுபவிக்காமல் தப்பிய பெரும்பாலானோரில் மெங்கெலேயும் ஒருவர்.

மொத்தம் ஆறு இடங்களில் கொலை முகாம்கள் நிறுவப்பட்டன. யூதர்களை அழித்தொழிப்பதற்காக எத்தனையோ கொலை முறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. நம்பவே முடியாத அளவுக்கு மனித குலம் அழிவின் கருவிகளைக் கண்டுபிடித்திருக்கிறது. அந்தக் கருவிகளின் சோதனைக்கூடங்கள்தான் கொலை முகாம்கள். போலந்து பகுதியில் இருந்த ஆஷ்விட்ஸ் கொலை முகாம்தான் மிகப் பெரியது. இங்கே மட்டும் 11 லட்சம் யூதர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

போர் முடிவுக்கு வரும்போது மொத்தம் 60 லட்சம் யூதர்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதாவது, ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் மூன்றில் இரண்டு என்ற வீதத்தில் கொல்லப்பட்டி ருந்தனர். இதில் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 11 லட்சம். யூதர்களைத் தவிர, நாஜிக்களால் கொல்லப்பட்ட பிறரின் எண்ணிக்கை 50 லட்சம். போர் முடிவுக்கு வருவதற்குள் ஒட்டுமொத்த உலகையே கொலை முகாமாக்கிவிட்டிருந்தனர் நாஜிக்கள். இவ்வளவு பேரழிவை நாஜிக்கள் நிகழ்த்தியபோது பாராமுகமாக இருந்ததன் குற்றவுணர்விலிருந்து ஜெர்மானிய மக்களால் இன்றுவரை விடுபட முடியவில்லை. அதுபோலவே பெரும் துயரம் எதுவென்றால், மனித குலத்தின் மோசமான அழிவை எதிர்கொண்ட யூதர்கள் தாங்களும் ஒரு பேரழிவில் ஈடுபடுவதுதான்.

அந்தச் சுவர்

நாஜிக்களின் கொலை முகாம்களுக்குக் கொண்டுசெல்லப்படு பவர்களுக்குத் தாங்கள் எங்கே கொண்டுசெல்லப்படுகிறோம் என்றே தெரியாது. ஷவரில் குளிப்பாட்டப்போகிறோம், எல்லோரும் ஆடைகளை அவிழ்த்துப் போடுங்கள் என்று சொல்லிவிட்டு, அவர்களை நாஜிப் படையினர் ஒரு அறைக்கு அழைத்துச்செல்வார்கள். அது குளியலறையல்ல. நச்சு வாயு அறை. இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பது நச்சுவாயு அறையொன்றின் சுவரைத்தான். நச்சுவாயு செலுத்தப்பட்டு மூச்சுத் திணறியபோது உயிருக்குப் போராடிய யூதர்களின் பிறாண்டல்களைத்தான் பேரழிவின் சாட்சியமாக அந்தச் சுவர் சுமந்திருக்கிறது. குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், ஆண்கள், என்று அனைவரின் பிறாண்டல்களும் இதில் உண்டு.

மனித அழிவின் வரலாற்றுத் தடத்தைத் தெரிந்துகொள்ள மறுபடியும் அந்தப் படத்தைப் பாருங்கள்!

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x