Last Updated : 07 Feb, 2019 08:49 AM

 

Published : 07 Feb 2019 08:49 AM
Last Updated : 07 Feb 2019 08:49 AM

சென்னை மெட்ரோ: தொடங்கட்டும் புதிய பயணம்!

சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் அண்ணாசாலையின் பிரதானப் பேருந்து நிறுத்தங்களில் ஒன்றான டி.எம்.எஸ்  அலுவலகம் வரையிலான எட்டு சுரங்க ரயில் நிலையங்களின் சேவை இம்மாதம் தொடங்கவிருக்கிறது. இது ஒரு மைல்கல். ஏனெனில், வண்ணாரப்பேட்டை நிலையத்திலிருந்து முதல் ரயில் புறப்படும்போது, அது சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்டத் திட்டம் பணிகள் நிறைவுக்கு வந்ததைக் குறிக்கும்.

சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்டம் இரண்டு வழித் தடங்களாலானது.  இரண்டு தடங்களின்  நீளம் 45 கி.மீ. மொத்தமாக 32 நிலையங்கள் இருக்கும். முதல் தடம் வண்ணாரப்பேட்டையிலிருந்து மண்ணடி, பாரிமுனை, சென்ட்ரல், அண்ணா சாலை வழியாக விமான நிலையத்தை அடைகிறது. இரண்டாவது தடம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடங்கி பூந்தமல்லி நெடுஞ்சாலை, நூறடி சாலை வழியாக பரங்கிமலையை அடைகிறது. இதில் இரண்டாவது தடத்தில் கோயம்பேட்டிலிருந்து ஆலந்தூர் வரையிலான மேம்பாலப் பாதை 2015 ஜூனிலேயே சேவையைத் தொடங்கிவிட்டது.

பயண நேரம் பாதியாகும்!

இத்துடன் எழும்பூர் முதல் கோயம்பேடு வரையிலான சுரங்கப் பாதை பிற்பாடு இணைந்துகொண்டது. அதேபோல், முதல் தடத்தில் சின்னமலையிலிருந்து  விமான நிலையம் வரையிலான மேம்பாலப் பாதை 2016 செப்டம்பரிலும், அதன் தொடர்ச்சியான சுரங்கப் பாதையில் சைதப்பேட்டை முதல் தேனாம்பேட்டை வரையிலான நிலையங்கள் 2018 மே மாதத்திலும் பயன்பாட்டுக்கு வந்தன. இப்போது முதல் வழித்தடத்தில் எஞ்சிய எட்டுச் சுரங்க நிலையங்களும் தம்மை இணைத்துக்கொள்கின்றன.

வண்ணாரப்பேட்டையிலிருந்து புறப்படுகிற மெட்ரோ ரயில் 40 நிமிடங்களில் விமான நிலையத்தை அடைந்துவிடும். இது சாலையில் பயணிக்கும் நேரத்தில் பாதிக்கும் குறைவானது.

இம்மாதம் புதிதாகப் பயன்பாட்டுக்கு வரும் எட்டுச் சுரங்க நிலையங்கள்: வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர் நீதிமன்றம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், ஓமந்தூரார் அரசினர் தோட்டம், எல்ஐசி, ஆயிரம் விளக்கு, ஏஜி - டிஎம்எஸ் ஆகியன. இவற்றுள் உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையமும் சென்னை சென்ட்ரல் மெட்ரோ நிலையமும் பல காரணங்களால் பேசப்படும்.  இவ்விரண்டு நிலையங்களையும் அருகில் உள்ள கட்டிடங்கள், பேருந்து - ரயில் நிலையங்களிலிருந்து சுரங்க வழியாகவே அடைய முடியும்.  உயர் நீதிமன்ற மெட்ரோ நிலையத்திலிருந்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தையும், டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி வளாகத்தையும் அடைய முடியும். எதிர் வரிசையிலிருக்கும் குறளகக் கட்டிடத்தையும்  பிராட்வே பேருந்து நிலையத்தையும் அடைய முடியும்.

நிலையத்தைச் சுற்றியுள்ள என்எஸ்சி போஸ் சாலையையும், எஸ்பிளனேட் சாலையையும் முத்துசாமி சாலையையும் சுரங்கப் பாதைகளாலேயே அடைய முடியும்.  இது போலவே சென்னை சென்ட்ரல் மெட்ரோ  ரயில் நிலையத்திலிருந்து சுற்றியுள்ள ரயில் நிலையங்களான சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் மூர்மார்க்கெட் ரயில் நிலையத்தையும் பூங்கா ரயில் புறநகர் ரயில் நிலையத்தையும் பூங்கா நகர் பறக்கும் ரயில் நிலையத்தையும்  அடைய முடியும். சாலைப் போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்காது!

தொடரவிருக்கும் பயணம்

சென்னை மெட்ரோவின் பயணம் இத்துடன் முடியப் போவதில்லை. வளர்ந்த நகரங்கள் எங்கும் மெட்ரோ ரயில்களின் கட்டுமானம் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது. ஹாங்காங்கிலும் அப்படித்தான். ஹாங்காங் மெட்ரோவின் வெற்றிக்குப் பல காரணிகள். அவற்றுள் ஒன்று, அதன் கட்டுமானப் பணிகள்  நிறுத்தப்பட்டதேயில்லை. ஹாங்காங் மெட்ரோ

1979-ல் ஓடத் தொடங்கியது. ஷெக்-கிப்-மேய் என்கிற நிலையத்திலிருந்து குன்-டாங் வரை ஒன்பது நிலையங்கள் அப்போதைய ஆளுநர் மெக்லஹோசால் திறந்துவைக்கப்பட்டது. இப்போது ஹாங்காங் மெட்ரோ ரயில், நகரின் குறுக்கும் நெடுக்குமாக 11 தடங்களில் ஓடுகிறது. இப்போது 218 கி.மீ. நீளமும் 93 நிலையங்களும் கொண்ட  ஹாங்காங் மெட்ரோவில் ஒவ்வொரு நாளும் சராசரியாக 50 லட்சம் பயணங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடங்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை ஹாங்காங் மெட்ரோவின் வலைப்பின்னல் வளர்ந்துகொண்டேயிருக்கிறது.  இப்போதும்கூட ஹாங்காங்கில் இரண்டு பிரதானத் தடங்களுக்கான பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன; 10-க்கும் மேற்பட்ட திட்டங்கள் வரைபட மேசையில் இருக்கின்றன.

சென்னை மெட்ரோவும் முதற்கட்டம் நிறைவுக்கு வந்தவுடன் ஓய்வெடுக்கப்போவதில்லை. முதற் கட்டத்தின் நீட்சியான வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரையிலான பணிகள் நடைபெற்று வருகின்றன. இது 9 கி.மீ.   நீளமும், எட்டு நிலையங்களும் கொண்டதாக அமையும். இந்தப் பணிகள்  2020-ன் மத்தியில் நிறைவுபெறும்.

இரண்டாம் கட்டப் பணிகள்

சென்னை மெட்ரோ இரண்டாம்கட்டத்தின் வடிவமைப்புப் பணிகள் நடைபெறுகின்றன; கட்டுமானப் பணிகள் இவ்வாண்டு தொடங்கும் என்று தெரிகிறது. இரண்டாம்கட்டம் மூன்று தடங்களாலானது- அவை மூன்றாம், நான்காம், ஐந்தாம் தடங்கள்.  மூன்றாவது தடம் வட சென்னையின் மாதவரம் பால் பண்ணையிலிருந்து  தொடங்கும். பெரம்பூர், கீழ்ப்பாக்கம் வழியாக மத்திய சென்னையின் நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூரைக் கடந்து தென் சென்னையின் மகாபலிபுரம் சாலைக்கு வரும். தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப மையமாக விளங்கும் ஓ.எம்.ஆர் சாலையின் பிரதான இலக்குகளைக் கடந்து சோழிங்கநல்லூர் வழி சிப்காட்டை அடையும். ஐந்தாவது தடமும் மாதவரத்தில் தொடங்கும். வில்லிவாக்கம், அண்ணா நகர், பரங்கிமலை வழியாக சோழிங்கநல்லூரில் வந்து சேரும். நான்காவது தடமானது மூன்றாவது தடத்தையும் ஐந்தாவது தடத்தையும் குறுக்காக இணைக்கும். இந்தத் தடம் கோயம்பேட்டிலிருந்து வடபழனி, நந்தனம், மயிலாப்பூர் வழியாகக் கலங்கரை விளக்கத்தை அடையும்.

இரண்டாம்கட்டத்தின் மூன்று தடங்களையும் சேர்த்து மெட்ரோ ரயில், 108 கி.மீ. நீளமும் 104 நிலையங்களும் கொண்டதாக அமையும். இரண்டாம்கட்டத்தின் பணிகள் 2024-ல் நிறைவு பெறும் என்று திட்டமிடப்பட்டிருக்கிறது. அப்போது சென்னையின் கணிசமான பகுதிகள் மெட்ரோவின் வலைப்பின்னலுக்குள் வந்திருக்கும்.

இப்போது சேவையிலிருக்கும் முதலிரண்டு தடங்களில் இரண்டு நிலையங்கள் இரண்டு தடங்களிலும் இடம்பெற்றிருக்கும். அவை சென்னை சென்ட்ரல், ஆலந்தூர் ஆகிய நிலையங்கள். அதாவது இந்த இரண்டு நிலையங்களிலும் ஒரு தடத்திலிருந்து இறங்கி இன்னொரு தடத்துக்கு மாறிக்கொள்ள முடியும். இப்படியான இடைமாற்ற நிலையங்கள் இனி கட்டப்படவிருக்கிற மூன்று, நான்கு, ஐந்தாவது தடங்களிலும் இருக்கும்.

ஹாங்காங்கின் 11 தடங்களிலும் இப்படியான இடைமாற்ற நிலையங்கள் உள்ளன. நகரின் எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் இன்னொரு மெட்ரோ நிலையத்துக்குப் போய்விட முடியும். அது மட்டுமல்ல ஹாங்காங்கின் எந்த மூலையிலிருந்தாலும் அருகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்துக்கு நடந்தோ அல்லது பொதுப் போக்குவரத்தின் வழியாகவோ போய்ச் சேர்ந்துவிட முடியும். அதனால்தான் ஹாங்காங்கின் 90% மக்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் சாலைகளில் வாகன நெரிசல் கணிசமாகக் குறைந்துவிடுகிறது. சென்னை மெட்ரோவும் இப்படியான இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்!

- மு இராமனாதன்,

ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளர். தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x