Published : 22 Jan 2019 08:31 AM
Last Updated : 22 Jan 2019 08:31 AM
உணவு உற்பத்தியோடு, பெரும்பாலான தொழிலுக்கு மூலப் பொருட்களையும் அளிக்கும் விவசாய விளைநிலங்களை, வளர்ச்சித் திட்டம் என்று சொல்லி அரசே கூறுபோட்டுத் துண்டாட முனைந்திருக்கிறது. சிறு குறு விவசாயிகளிடமிருக்கும் விளைநிலங்களை அரசு பாதுகாக்கத் தவறினால், கடைசியில் அவை பெருமுதலாளிகள் வசமாகும் ஆபத்தே அதிகரிக்கும். விளைநிலங்கள் தரிசாகும். உணவு உற்பத்தியும் வேலைவாய்ப்பும் பாதிக்கும்.
விமான நிலைய விரிவாக்கம், எட்டுவழிச் சாலைகள், எரிவாயுக் குழாய் அமைக்க, நிலக்கரிச் சுரங்கம் தோண்ட, உயர் அழுத்த மின்கோபுரம் அமைக்க என விளைநிலங்களை விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலும் அவர்களின் கருத்தைக் கேட்காமலும் சட்டத்துக்குப் புறம்பாக அரசு கையகப்படுத்துகிறது. இதனால், வேளாண் நிலங்களை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கும் உழவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
மாற்றுத் திட்டத்தை யோசிக்க வேண்டும்
காற்றாலைகள் மற்றும் சூரிய ஒளி மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தைச் சேமித்து வைப்பதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே நியூ புகழூரிலும் ராசிபாளையத்திலும் மிகப் பெரிய துணை மின்நிலையங்கள் அமைக்கும் வேலை தொடங்கியிருக்கிறது. மின்சாரத்தை இங்கு கொண்டு வந்து, பின்பு இங்கிருந்து எந்த மாநிலத்தில் அதிக விலை கிடைக்கிறதோ அங்கு கொண்டு சென்று லாபம் பெறவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
தற்போது கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருச்சி மாவட்டங்கள் வழியாக 400 கிலோவாட், 800 கிலோவாட் உயர் அழுத்த மின்சாரத்தை விவசாய நிலங்கள் வழியாகக் கொண்டுசெல்லும் 15-க்கும் மேற்பட்ட திட்டங்களை நிறைவேற்றும் பணியை பவர் கிரிட் நிறுவனமும், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகமும் தொடங்கியுள்ளன.
உயர் அழுத்த மின்கோபுரங்களின் வழியாக மின்சாரத்தைக் கொண்டுசெல்லும்போது, மின்பாதையின் கீழ் 90 மீட்டர் அகலத்தில் மரப் பயிர்கள் பயிரிட முடியாது. கிணறு வெட்ட முடியாது. ஏற்கெனவே கிணறு இருந்தால் அதைப் பராமரிக்க முடியாது. விளைநிலத்தை நம்பியே வாழ்ந்துவருகிற சிறு குறு விவசாயிகள், நிலத்தின் குறுக்கும் நெடுக்குமாக மின்கம்பிகள் செல்வதைப் பார்த்துச் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
மின்காந்த அலையால் அருகிலுள்ள விலங்குகளும் பறவைகளும் பாதிக்கப்படலாம் என்ற அச்சமும் பீடித்துள்ளது. விவசாயிகளை வேளாண்மையிலிருந்து விரட்டியடித்து, விவசாய உற்பத்தியைச் சேதப்படுத்துவதை மக்கள் நலன் நாடும் ஒரு அரசு செய்யலாமா?
உலகின் பல நாடுகளில், ஏன் தமிழகத்தின் மாநகரங்களிலும், நகரங்களிலும் உயர் அழுத்த மின்சாரம் புதைவடமாக கேபிள் மூலம் கொண்டுசெல்லப்படுகிறது. அங்கே எல்லாம் செலவைப் பொருட்படுத்துவதில்லை. ஆனால், கிராமங்களில் மட்டும் அப்பாவி உழவர்களின் விளைநிலங்களைக் கூறுபோடுவது ஏன் என்பதே விவசாயிகளின் கேள்வி.
பேரிடர் கற்றுத்தரும் பாடம்
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வீசிய கஜா புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகளும், பல ஆயிரம் கி.மீ. நீளமான மின்கம்பிகளும் சேதம் அடைந்துள்ளன. கிராமங்களுக்கு மின்இணைப்பு கொடுப்பதற்கு ஒரு மாதத்துக்கும் மேலானது. மின்சாரத் துறைக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு. மின்இணைப்பு இல்லாததால் பல ஆயிரம் கோடி உற்பத்தி இழப்பும், வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் மின்சாரத்தை கேபிள் வழியாகக் கொண்டுசெல்லும் திட்டத்தை அரசு முன்னெடுக்க வேண்டும்.
மின்சாரத்தை வெட்டவெளியில் மின்கோபுரங்கள் வழியாகக் கொண்டுசெல்லும்போது 18%-க்கு மேல் மின்கசிவு ஏற்படுகிறது. அதேசமயம், மின்சாரத்தை கேபிள் வழியாகக் கொண்டுசெல்லும்போது மின்கசிவு 2%-க்கும் குறைவாக உள்ளது. இதனால் பெரும் மின்இழப்பு தவிர்க்கப்படுகிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். புதைவடம் பதிக்க அதிக செலவாகிறது என்பதற்காக மின்கசிவைக் குறைக்கும் வாய்ப்பைத் தவறவிடக் கூடாது.
விஞ்ஞானத் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்றைக்கு கேபிள் மூலமாக உயர் அழுத்த மின்சாரத்தை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் கொண்டுசெல்வது சாத்தியமாகியுள்ளது. நிலத்துக்கு அடியில், கடலுக்கு அடியில் எனப் பல ஆயிரம் கி.மீ. தூரம் வரைக்கும் பல்வேறு அளவிலான உயர் அழுத்த மின்சாரம் கொண்டுசெல்லப்படுகிறது. மின்கோபுரங்களுக்கு மாற்றாக கேபிள் மூலம் மின்சாரம் கொண்டுசெல்வதற்கு இரண்டு மடங்கு கூடுதலாகச் செலவாகும்.
விவசாயத்தைச் சீரழிக்காத வளர்ச்சிக்கு அரசு சிந்திக்க மறுப்பது ஏன்? சோறு போடும் விவசாயிகளை வதைத்து உருவாகும் வளர்ச்சி நிரந்தரமாகாது. காவல் துறையை வைத்து விவசாயிகளை மிரட்டி, அச்சுறுத்தி, கைதுசெய்து, மின்கோபுரத்தை நிறுவுகிறார்கள். மின்கோபுரம் அமைத்துவிட்டால் மின்பாதையின் கீழும் அருகிலும் உள்ள மண்ணின் பயனும் மதிப்பும் பயன்பாட்டுக்கு உதவாமல் போய்விடுகிறது. எனவேதான், உயர் அழுத்த மின்கோபுரங்கள் மற்றும் மின்திட்டப் பாதைகளை விவசாய விளைநிலங்களின் மீது அமைக்காமல், நெடுஞ்சாலை ஓரமாகப் புதைவடமாக கேபிள் மூலம் கொண்டுசெல்ல வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகள் போராடிவருகிறார்கள். பாதிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடும், செல்போன் கோபுரங்களுக்கு வழங்குவதுபோல் வாடகையும் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.
விளைநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் மின்சாரம் கொண்டுசெல்வதற்கான மாற்று முறையை அரசு பின்பற்ற வேண்டும். இல்லையென்றால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணங்களை வழங்க முன்வர வேண்டும். இரண்டில் எதைச் செய்யவும் அரசு தயாராக இல்லை.
- வி.பி.குணசேகரன், பழங்குடி உரிமைகள் செயற்பாட்டாளர்
தொடர்புக்கு: erodevpg@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT