Published : 04 Sep 2014 12:00 AM
Last Updated : 04 Sep 2014 12:00 AM
இந்தியாவின் எதிர்காலம் ஆசிரியர்கள் கையில்தான் இருக்கிறது. அவர்கள் அதை உணர்ந்திருக்கிறார்களா?
சில மாதங்களுக்கு முன்னால் வாஷிங்டன் நகரில் ஒரு பேராசிரியையைச் சந்தித்தேன். அறிவுசார் உளவியலில் (காக்னிடிவ் சைகாலஜி) ஹார்வர்டு பல்கலைக்கழகத்திலிருந்து முனைவர் பட்டம் பெற்றவர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர், என்னிடம் பட்டப் படிப்பு மாணவர்களைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது, அவர்களில் பெரும்பாலானோருக்குச் சாதாரணப் பெருக்கல் வகுத்தல்கள்கூடத் தெரியவில்லை என்று சொன்னார். ஒரு வரைவத்தைப் (க்ராஃப்) பார்த்து விளக்கவும் தெரியவில்லை என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என்ன செய்யப்போ கிறீர்கள் என்றேன். “அவர்களுக்குத் தனி வகுப்பு எடுப்பேன். ஆனால், பிரச்சினை மாணவர்களுடையது அல்ல. அவர்களைக் குறைகூற முடியாது. கோளாறு பள்ளிப் பாடத்திட்டத்தில் இருக்கிறது. நாங்கள் அரசோடு தொடர்புகொண்டு பாடத்திட்டத்தை மறுபரிசீலனை செய்யப் பரிந்துரைக்கப்போகிறோம்.”
இதற்கு நேர்மாறான அனுபவம் எனக்குச் சமீபத்தில் ஏற்பட்டது. சென்ற மாதம் நான் தமிழ்நாட்டின் பெருநகர் ஒன்றில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டேன். அதில் பேசிய கல்லூரி முதல்வர், மாணவர்கள் புத்தகங்களைப் படிப்பதே இல்லை என்று உரத்த குரலில் வருத்தப்பட்டார். தனது கடந்த காலத்தைப் பற்றிப் பேசிய அவர், எங்கள் காலத்தில் நாங்கள் ஹோட்டலில் அறை போட்டுப் புத்தக விமர்சனம் செய்வோம் என்றார். மறுநாள் திரும்ப வந்து மாணவர்கள் கல்லூரி நூலகங்களுக்குச் செல்வதே இல்லை என்றார். திரும்பத் திரும்பக் குறை கூறிக்கொண்டிருந்த அவர், மாணவர்கள் படிக்காமல் இருப்பதில், நூலகங்களுக்குச் செல்லாதிருப்பதில் ஆசிரியர்களின் பங்கு என்ன என்பதைப் பற்றிச் சற்றேனும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. இவ்வளவுக்கும் அன்று கருத்தரங்கில் கேள்விகள் கேட்ட சில மாணவர்கள், நன்றாகப் படித்தவர்களாகத்தான் தெரிந்தார்கள். மிகுந்த ஊக்கத்தோடு எதிர்வினை செய்தார்கள்.
புனைகதை
நான் கல்லூரியில் ஆசிரியராகப் பணிபுரிந்து 40 ஆண்டுகளாகிவிட்டன. நான் மாணவனாக இருந்தது அதற்கும் முன்னால். என்னுடைய காலத்திலேயே மாணவர்களில் புத்தகங்கள் படிப்பவர்கள் மிகக் குறைவு. நூலகங்களுக்குச் செல்பவர்கள் அதைவிடக் குறைவு. ஆசிரியர்களில் புத்தகங்கள் படித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். எங்கள் கல்லூரி நூலகத்தில் புதிய பளபளப்போடு இருந்த புத்தகங்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டு தடவை பிரித்துப் பார்க்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கையைவிட மிகமிக அதிகம். ஆசிரியர்களில் கணிசமானவர்கள் வட்டிக்குப் பணம் கொடுப்பதிலும், வீடு, மனைகள் விற்பனை செய்வதிலும் மிகுந்த கவனம் செலுத்தினார்கள். எனவே, பழைய காலம் பொற்காலம் என்று சொல்வதைப் போல பெரிய புனைகதை ஏதும் இருக்க முடியாது. சில கல்லூரிகளில் புத்தகங்களில் நாட்டம் கொண்ட ஆசிரியர்களும் மாணவர்களும் இருந்தார்கள் என்பது உண்மை. இன்றும் அவ்வாறு பல ஆசிரியர்களும் மாணவர்களும் இருப்பார்கள். ஆனால், மொத்தமாகப் பார்த்தால் நிலைமை சரியில்லை. அன்று நிலைமை மோசம் என்றால், இன்று மாற்றம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, நிலை இன்னும் சீரழிந்திருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். இதற்கு முதல் காரணம், ஆசிரியர்களாகத்தான் இருக்க முடியும். ஆசிரியர்கள் புத்தகங்களை வாங்குபவர்களாக இருந்தால், குறைந்தபட்சம் நூலகத்துக்குச் சென்று புத்தகங்களைப் படிப்பவர்களாக இருந்தால், மாணவர் களுக்கு இன்னின்ன புத்தகங்களைப் படியுங்கள் என்று பரிந்துரை செய்பவர்களாக இருந்தால், மாணவர்களிடம் படிக்கும் பழக்கம் நிச்சயம் ஏற்படும்.
இது ஏன் நடப்பதில்லை?
கலந்துரையாடல் முடிந்ததும் பல ஆசிரியர்களிடம் நான் பேசினேன். டெல்லி திரும்பி வந்ததும் புலமையும் எழுத்துத் திறமையும் மிக்க சில ஆசிரியர்களுடன் தொலைபேசியில் உரையாடினேன். ஆசிரியர்களிடம் இவற்றையெல்லாம் எதிர்பார்ப்பது ஏமாற்றத்தில் முடியும் என்கிறார்கள் அவர்கள். வரவேற்பறையில் உட்கார்ந்திருக்கும் யானையைக் கவனிக்காமல் வளையில் ஓடும் எலியைப் பற்றிக் கவலைப்படுவதுபோல இருக்கிறது என்கிறார்கள். சொல்வது புரியவில்லை என்றேன். பதவியில் இருப்பவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே எழுதாத, எல்லோருக்கும் தெரிந்த, ஆனால் வெளியே சொல்ல விருப்பப்படாத உடன்பாடு ஒன்று இருக்கிறது. அது பணக் கொடுக்கல் வாங்கல்கள் பற்றியது. ஆசிரியர்களைப் பற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டால், சீர்திருத்தம் என்று புறப்பட்டால் அதன் சீரான இயக்கத்துக்குத் தடை ஏற்படும் என்றார் ஓர் ஆசிரியர். கல்லூரி ஆசிரியராக நியமனம் செய்யப்பட வேண்டும் என்றால், குறிப்பிட்ட கல்லூரிக்கு மாற்றம் பெற வேண்டுமென்றால், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பதற்கு ஒரு வழிமுறையே இருக்கிறது. அந்த வழிமுறையைப் பின்பற்றாத ஆசிரியர்கள் மிகச் சிலரே என்றார்.
மாணவர்களும் மாணவிகளும் உண்மையாகவே படித்துக் கூர்மையடைந்துவிட்டால் அவர்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிடும் என்ற காரணத்தினாலேயே மாணவர்களைப் புத்தகங்களிலிருந்து ஆசிரியர்கள் விலக்கி வைத்திருக்கிறார்கள் என்றார் நண்பர்.
அவர் சொன்ன உதாரணம். முதுநிலை பட்டப்படிப்பு மாணவி ஒருத்தி வில்லிபாரதத்தைப் பற்றிய அருமையான கட்டுரையைக் கருத்தரங்கு ஒன்றில் படித்தாள். அவளது ஆசிரியருக்கு ஒரே கோபம். நீ எங்கிருந்தோ திருடியிருக்கிறாய், நீ எழுதியது அல்ல என்றார். மாணவி இது நான் எழுதியதுதான், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்கிறேன் என்றாள். ஆசிரியர் கேட்கக் கேட்க, பதில்கள் மிகச் சரியாக வந்தன. கருத்தரங்கு முடிந்தபின் ஆசிரியர் மாணவி யைத் தனியாக அழைத்து, நீ இது போன்று பொதுக் கூட்டங்களில் கட்டுரை படிப்பதற்கு முன் என்னிடம் அனுமதி பெற வேண்டும் என்று கடுமையாகச் சொல்லிவிட்டார். மாணவி கட்டுரைகள் எழுதுவதையே நிறுத்திவிட்டாள்.
ஜாலியாக நேரத்தைக் கழிப்போம்
மற்றொரு ஆசிரியர், நிலைமையின் காரணம் பொருளாதாரம், சமூகம், சார்ந்தது என்றார். இன்று கலை, அறிவியல் பயிற்றுவிக்கும் கல்லூரிகளில் சேர்பவர்களில் பெரும்பாலானவர்கள் வசதியற்றவர்கள். அவர்கள் குடும்பங்களிலிருந்து முதன்முதலாகக் கல்லூரிக்குச் செல்பவர்கள். இவர்களுக்கு மொழியைச் சரியாக எழுத, கொஞ்சம் சிக்கலான கோட்பாடுகளைப் புரிந்துகொள்ள, பயிற்சி தேவை. இந்தப் பயிற்சி எந்தக் கல்லூரிகளிலும் கிடைக்காது. மாணவர்களும் இத்தகைய பயிற்சியின் தேவைகளை உணர்ந்துகொள்ளும் பக்குவம் பெறாதவர்கள். எனவே, அவர்கள் மூன்று அல்லது ஐந்து வருடங்களை ‘ஜாலி’யாகக் கழிக்க நினைக்கிறார்கள். விளைவு என்ன ஆகும் என்பதுபற்றிய புரிதல் இல்லாமலே.
ஏதோ போகிறபோக்கில் ஒன்றிரண்டு உதாரணங்களை வைத்துக்கொண்டு ஆசிரிய சமூகத்தின் மீது கரி பூசுவது சரியல்ல என்று சிலர் நினைக்கலாம். ஆனால், இந்தியத் தொழில் கூட்டமைப்பு போன ஆண்டு ஒரு கணிப்பு நடத்தியது. இந்தக் கணிப்பின் படி 66% பட்டதாரிகள் எந்த வேலைக்கும் தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள் எனத் தெரியவருகிறது. இவர்களில் பொறியியல் பட்டதாரிகளை எடுத்துவிட்டால் நிலைமை இன்னும் மோசம். மற்றைய பட்டதாரிகளில் 85-லிருந்து 90% எந்த வேலைக்கும் தகுதியற்றவர்கள்.
எதிர்காலம் மன்னிக்காது
இந்தியா உலக உற்பத்தி மையங்களில் ஒன்றாக இருக்கப்போகிறது என்ற கனவை நாம் கண்டு கொண்டிருக்கிறோம். கனவு நனவாக வேண்டு மென்றால், நமது இளைய தலைமுறை கூர்மையாக, திறமையுடையவர்களாக இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அவர்களை அவ்வாறு ஆக்க வேண்டிய பொறுப்பு ஆசிரியர்கள் கைகளில் இருக்கிறது. பொறுப்பை நிறைவேற்றாவிட்டால் எதிர்காலம் அவர்களை மன்னிக்காது.
- பி.ஏ. கிருஷ்ணன்,‘புலிநகக்கொன்றை', ‘கலங்கிய நதி' ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT