Published : 08 Jan 2019 09:18 AM
Last Updated : 08 Jan 2019 09:18 AM
உயர்ந்துவரும் விலைவாசியைக் கட்டுப்படுத்துவது, மத்திய அரசின் புதிய பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது, புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 20 கோடி தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் 2019 ஜனவரி 8, 9 ஆகிய இரு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ். எல்பிஎஃப் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்களும், 70 அகில இந்திய சம்மேளனங்களும் பங்கேற்கின்றன. இந்தப் போராட்டம் ஏன் என்று சிலருக்குச் சந்தேகம் இருக்கலாம். காரணங்களைப் புரிந்துகொண்டால் போராட்டத்தின் பின்னே உள்ள நியாயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.
கடும் விலைவாசி உயர்வுதான் போராட்டத்தின் பிரதான காரணம். 1960-லிருந்து 2014 வரை 54 ஆண்டுகளில் விலைவாசி உயர்வை ஒப்பிடும்போது, கடந்த நான்கரை ஆண்டு காலத்தில் மட்டும் 24% விலைவாசி உயர்வு ஏற்பட்டிருக்கிறது. 2014-க்கு முன்னர், 5,569 ஆக இருந்த நுகர்வோர் விலைவாசிக் குறியீட்டு எண் தற்போது 6,893 ஆக உயர்ந்திருக்கிறது. பெட்ரோல், டீசல் விலைதான் இதற்குப் பிரதான காரணம். இதற்கும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டியது அரசு. ஆனால், 2014 மே மாத நிலவரத்தை ஒப்பிட, சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2018 டிசம்பர் மாதம் சரிபாதிக்கும் குறைவாக உள்ளது. ஏன் இந்த முரண்பாடு?
சுரண்டப்படும் தொழிலாளர்கள்
‘கிரெடிட் சூய்’ஸின் அறிக்கையின்படி நாட்டின் 10% பணக்காரர்கள் வசம் நாட்டின் மொத்த சொத்தில் 77.4% இருக்கிறது. 60% ஏழைகள் கையில் நாட்டின் மொத்த சொத்தில் 4.7% மட்டுமே இருக்கிறது. அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் அறிக்கையின்படி 82% ஆண் தொழிலாளர்கள், 92% பெண் தொழிலாளர்கள் மாதம் ரூ.10,000/-க்கும் குறைவாகவே சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு விலைவாசி உயர்வுக்கு ஏற்றார்போல் பஞ்சப்படி கிடைப்பதில்லை. ஏழைத் தொழிலாளர்களின் உயர்வுக்கு வழிவகுக்க வேண்டிய அரசோ, 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நான்காக மாற்றி தற்போதுள்ள பணிப் பாதுகாப்பு அம்சங்களில் பெரும்பாலானவற்றை நீக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. ‘குறிப்பிட்ட காலப்பணி’ என்ற அரசு உத்தரவின்படி குறிப்பிட்ட காலமான 4/5 ஆண்டுகளுக்குப் பிறகு, தொழிலாளர்களைப் பணியிலிருந்து நீக்கிவிடலாம். தொழிலாளர்கள் மீதான மிகப் பெரிய சுரண்டல் இது. அனைத்துத் தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.18,000/- வழங்க வேண்டும். கவுரவமான வேலை வாய்ப்பை உருவாக்குவதுடன், தொழிலாளர் விரோத சீர்திருத்தங்களைக் கைவிட வேண்டும் என்றும் இந்தப் போராட்டத்தின் மூலம் வலியுறுத்துகிறோம்.
குறிவைக்கப்படும் பொதுத்துறை
மக்கள் சேவையில் பிரதானப் பங்குவகிக்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கு வதற்கும், அவற்றின் பங்குகளை விற்பதற்குமான தொடர் முயற்சியில் அரசு தீவிரம் காட்டுகிறது. யுனைடெட் இந்தியா, நேஷனல், ஓரியண்டல் ஆகிய மூன்று பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களையும் ஒன்றிணத்து, அவற்றில் உள்ள மத்திய அரசின் பங்குகளை சந்தையில் விற்பதற்கான முயற்சியிலும் இறங்கியிருக்கிறது. நவீன தாராளமயக் கொள்கை தொடங்கிய 1991-லிருந்து 2014 வரையிலான 23 ஆண்டுகளில் நடைபெற்ற பங்கு விற்பனையைப் போல் 137% இந்த நான்கரை ஆண்டு காலத்தில் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
1969-ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பிறகுதான் பொதுமக்களின் சேமிப்புக்குப் பாதுகாப்பு கிட்டியது என்பது வரலாற்று உண்மை. ஆனால், வங்கிகளைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரத் மஹிளா வங்கியானது ஸ்டேட் வங்கியுடன் இணைக்கப்பட்டதற்குப் பிறகு, 200-க்கும் மேற்பட்ட நிர்வாக அலுவலகங்களையும், 2,000-க்கும் மேற்பட்ட கிளைகளையும் ஸ்டேட் வங்கி இழுத்து மூடியுள்ளது. கிராமப்புற கிளைகள்கூட இதிலிருந்து தப்பவில்லை. சுமார் 40,000 ஊழியர்களும், அதிகாரிகளும் உபரியாக்கப்பட்டிருக்கிறார்கள். 2017 மார்ச் 31-ல் ரூ.1,77,000 கோடியாக இருந்த இந்த வங்கியின் வாராக்கடன் 2018 மார்ச் 31-ல் ரூ.2,25,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. பேங்க் ஆஃப் பரோடா-தேனா-விஜயா வங்கி ஆகிய மூன்று வங்கிகள் இணைப்பினாலும் இத்தகைய விளைவுகள்தான் ஏற்படும்.
எனவேதான், பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை, பொதுத் துறை வங்கிகள் இணைப்பு முயற்சி ஆகியவற்றைக் கைவிடக் கோரியும், பொதுத் துறையைத் தனியார்மயமாக்குவதைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடக்கிறது.
ஒரு குடும்பம் எதிர்பாராத வகையில் பொருளாதாரச் சிக்கலில் மாட்டிக்கொண்டு சிதைந்துவிடாமல் தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடு ஆயுள் காப்பீடு. எனவேதான் இதற்கு வருமான வரி விலக்குகூட அளிக்கப்படுகிறது. பிளாட்டினத்துக்கும், பவளத்துக்கும் 3% ஜிஎஸ்டி வரி போடும் மத்திய அரசு இந்த காப்பீட்டுத் தொகைக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கிறது. காப்பீட்டுத் தொகைக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும் என்பது போராட்டக் கோரிக்கைகளில் ஒன்று.
பணக்காரர்களுக்குச் சலுகை ஏன்?
வங்கித் துறை எதிர்கொண்டிருக்கும் மிக முக்கியமான பிரச்சினை வாராக்கடன் பிரச்சினையாகும். ரூ. 13 லட்சம் கோடிக்கும் அதிகமான வாராக்கடனில் பூஷன் ஸ்டீல், பூஷன் பவர் அண்ட் ஸ்டீல், எலக்ட்ரோஸ்டீல் ஸ்டீல்ஸ் உட்பட 12 பெரிய நிறுவனங்களின் வாராக்கடன் மட்டுமே ரூ.3.45 லட்சம் கோடி. ஆனால், இதை வசூல் செய்வதற்கு மத்திய அரசோ, ரிசர்வ் வங்கியோ உருப்படியான நடவடிக்கைகளை இதுவரை எடுக்கவில்லை. சமீபத்தில் இயற்றப்பட்ட திவால் சட்டமோ தனியார் நிறுவனங்களிடமிருந்து இந்தத் தொகையை வசூல் செய்வதற்குப் பதில் தள்ளுபடி செய்யவே உதவுகிறது. உதாரணமாக, ஒடிஷா மங்கனீஸ் மற்றும் மினரல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் வாராக்கடன் ரூ.5,388 கோடி; திவால் சட்டத்தின்கீழ் இந்நிறுவனத்திடமிருந்து வசூலிக்கப்பட்ட தொகை வெறும் ரூ.310 கோடிதான். ரூ, 5,078 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
மத்திய அரசின் பெருநிறுவன ஆதரவுக் கொள்கையைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை உரக்கச் சொல்லும் போராட்டம் இது. சாமானிய, ஏழை மக்களுக்கும், உழைக்கும் தொழிலாளர்களுக்கும் சாதகமாக மத்திய அரசின் கொள்கை மாற்றப்பட வேண்டும் என்று கோடிக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒரே குரலில் சொல்லும் வேலை நிறுத்தம். ஒட்டுமொத்தமாகச் சொன்னால் இது மக்களுக்கான போராட்டம்!
- சி.பி.கிருஷ்ணன், பொதுச் செயலாளர்,
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்
தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT