Published : 25 Jan 2019 09:11 AM
Last Updated : 25 Jan 2019 09:11 AM

உடனடிக் கவனம் கோரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்

எந்தத் தடங்கலும் இல்லாமல் இயற்கையின் பெருவளங்களை இதுவரையில் இலவசமாகவே அனுபவித்துவிட்டோம். இனிமேலும் இந்நிலை தொடர்வது சாத்தியமில்லை. அதற்கான தடைகளைச் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் வழியாக அதிகரித்துவிட்டோம். ஏதோ சில செயல்பாட்டாளர்களின் பேசுபொருள் என்ற நிலையிலிருந்து மாறி, அனைவரது வாழ்க்கையையும் ஏதோ ஒரு வகையில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் நேரடியாகத் தீண்ட ஆரம்பித்துவிட்டன.

அன்றாடம் பல்வேறு இயற்கை சார்ந்த நெருக்கடிகளை எதிர்கொள்ளும் எளிய மக்கள் தொடங்கி, முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய ஆட்சியாளர்கள் வரை சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்துத் தீர்மானமான முடிவுகளை எடுக்க வேண்டிய காலம் இது. பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுடன் கழிந்த 2018-ஐப் போல் இல்லாமல், மக்கள் வாழ்க்கை ஒரு சில வகைகளிலாவது மேம்பட வேண்டும் என நினைத்தால், 2019-ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் கட்டாயம் தீவிர கவனம் செலுத்தியே ஆக வேண்டும். 2019-ல் அப்படி கவனம் செலுத்த வேண்டிய முக்கிய அம்சங்கள் என்ன என்பது குறித்து டெல்லியில் உள்ள சுற்றுச்சூழல் அறிவியல் மையத்தின் இணை இயக்குநர் சந்திர பூஷண் கவனப்படுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தற்போது உள்ளதைவிட மிக மோசமாகக் கூடாது என நினைத்தால், மக்களின் வாழ்க்கையும் பொருளாதார வளர்ச்சியும் மேலும் சீரழியக் கூடாது என நினைத்தால், அரசுகள் தீர்மானகரமான முடிவுகளை எடுத்து, உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. அதன் அடிப்படையில் ஐந்து முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்:

காற்று மாசுபாடு

ஒவ்வொரு குளிர்காலத்திலும் மக்கள் முகமூடி அணிந்து வீட்டைவிட்டு வெளியே வரும் படங்களோடு காற்று மாசுபாட்டுப் பிரச்சினையைச் சாதாரணமாகக் கடந்துவிடுகிறோம். ‘மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய’ மதிப்பீட்டின்படி, தலைநகர் டெல்லி தொடங்கி நாட்டின் 70 நகரங்கள் மிக மோசமான காற்று மாசுபாட்டால் மூச்சுத் திணறிக்கொண்டுள்ளன. காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான விரிவான, ஒருங்கிணைந்த திட்டம் தேவை. ‘தேசிய தூய காற்றுத் திட்ட’த்தின் கீழ் ஏற்கெனவே 100 நகரங்கள் காற்றுத் தூய்மைக்கான திட்டங்களை உருவாக்கியிருந்தாலும், அந்தத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்தப் போக்கு மாற்றப்பட்டு கடுமையான விதிமுறைகள், தீர்மானமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

பிளாஸ்டிக் தடை

‘ஒரு முறை பயன்படுத்தித் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் 2022-க்குள் தடை செய்ய வேண்டும்’ என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் கைப்பைகள் போன்ற குறைந்த மைக்ரான் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் ‘ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்’ என்பதற்கு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு விளக்கத்தைத் தந்துகொள்கின்றன. பிளாஸ்டிக் பயன்பாடு குறித்த தெளிவான வரையறை, விரிவான திட்டம், மாற்றுப் பொருட்களைப் பிரபலப்படுத்துதல் ஆகியவை குறித்து தேசிய அளவில் தீர்மானிக்கப்பட வேண்டும். பிளாஸ்டிக் சார்பிலிருந்து விடுபடுவதற்கான கடமையில் இனிமேலாவது ஐரோப்பா உள்ளிட்ட உலக நாடுகளைப் பின்பற்ற வேண்டும். இதே வகையில் குப்பை-திடக்கழிவு மேலாண்மை சார்ந்தும் நடவடிக்கைகள் அவசியம்.

ஆறுகளை மீட்டெடுத்தல்

கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்துவதற்கு மட்டும் மத்தியில் தனி அமைச்சகம் இருக்கிறது. அது என்ன ஆக்கபூர்வமான விளைவை ஏற்படுத்தியது என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும்... நாட்டிலுள்ள முக்கியப் பேராறுகள், சிற்றாறுகள் பெரும்பாலும் மாசுபட்டும், சுரண்டப்பட்டும் சாக்கடைகளாகவே மாறிக் கிடப்பதில் கவனம் செலுத்த வேண்டும். வட இந்திய ஜீவநதிகளானாலும் தென்னிந்திய ஆறுகளானாலும் இதுவே நிலை. இவற்றை மீட்டெடுப்பதற்கான தெளிவான பார்வையும் உறுதியான திட்டங்களும் தேவை. இல்லையென்றால், மண்ணுக்கும் மக்களுக்கும் உயிர் தந்துவந்த ஆறுகள், நிரந்தரமாக மீட்டெடுக்க முடியாத கையறுநிலைக்குச் சென்றுவிடும்.

பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச மாநாடுகளிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டங்களிலும் இந்திய அரசு சார்பில் பெருமளவு ஆக்கபூர்வமாகப் பேசப்படுகிறது, வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், 2008-ல் உருவாக்கப்பட்ட பருவநிலை மாற்றம் குறித்த தேசியச் செயல்திட்டம், மாநிலச் செயல்திட்டம் ஆகியவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தேசிய சூரிய ஆற்றல் இயக்கமும், தேசிய ஆற்றல் திறன் மேம்பாட்டு இயக்கமும் குறிப்பிடத்தக்க அளவு செயல்பட்டுள்ளன. ஆனால், மற்ற திட்டங்கள் எதுவும் செயல்பட்டதுபோலத் தெரியவில்லை. பருவநிலை மாற்றம் குறித்த மாநிலச் செயல் திட்டங்கள் வெறுமனே ஆவணப்படுத்தும் வேலைகளையே மேற்கொள்கின்றன. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது, கார்பன் (நிலக்கரி-பெட்ரோல்) மையப் பொருளாதாரத்திலிருந்து விடுபடுவது ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இல்லையென்றால், பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்பட உள்ள பாதிப்புகள் மேலும் கடுமையாகிவிடக் காரணமாக அமைந்துவிடுவதுடன், அவற்றுக்குத் தகவமைத்துக்கொள்ளும் தன்மையிலிருந்தும் நாம் விலகிப்போய்விடுவோம்.

மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள்

தமிழகம் தொடங்கி மாநில, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஏதோ சடங்கு சம்பிரதாயத்துக்கு உருவாக்கப்பட்ட அரசு உறுப்புகளைப் போலத் திறனற்றும் லஞ்சம்-ஊழல் மலிந்தும் காணப்படுகின்றன. சுற்றுச்சூழல் சீர்கேட்டைத் தடுக்கும் வகையில் முறைப்படுத்துதல், கண்காணிப்பு, விதிகளை நடைமுறைப்படுத்தும் பணிகளை அவை மேற்கொள்வதில்லை. நவீன அறிவியல் - தொழில்நுட்ப வளர்ச்சி நாடெங்கும் நிலைபெற்றுவிட்ட நிலையில், களத்தில் உறுதியாக இயங்கும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை அமைப்பு இன்றி மண்ணையும் மக்களையும் குறைந்தபட்சமாகக்கூடக் காப்பாற்ற முடியாது.

இவை ஐந்தும் அரசு உடனடியாகக் களத்திலிறங்கி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் பிரச்சினைகள். அரசு தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியதும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதுமான சுற்றுச்சூழல் விஷயங்களின் பட்டியலோ நீளமானது.

- ஆதி வள்ளியப்பன்,

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x