Published : 08 Jan 2019 09:16 AM
Last Updated : 08 Jan 2019 09:16 AM

மாதவிடாய் சிறப்பிதழ்: அசத்தும் ‘அவுட்லுக்’!

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது முதல், தற்போதுவரை மாதவிடாய் தொடர்பான விவாதம் பரவலாகியிருக்கிறது. ‘ஹேப்பி டு ப்ளீட்’ என்ற பிரச்சாரம் நாடெங்கும் உள்ள பெண்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்தியாவில் மாதவிடாய் சார்ந்தும் பெண்கள் சார்ந்தும் நிலவும் மூடநம்பிக்கைகள், பிற்போக்குத்தனங்கள் எப்படிப் புரையோடிப்போயுள்ளன என்பதை எடுத்துக்காட்டும் வகையில் ஆண்டு இறுதிச் சிறப்பிதழை வெளியிட்டிருக்கிறது, பிரபல ஆங்கில வார இதழான ‘அவுட்லுக்’. தலைப்பு ‘ஐ ப்ளீட் ஃபார் லைஃப்’.

தீட்டு என்ற கருத்தாக்கத்தின் வேர்கள் இந்தியா போன்ற கீழைத்தேய நாடுகளில் மட்டுமல்லாமல் மேற்குலகிலும் எப்படி நிலவுகின்றன, மாதவிடாய் குறித்த மருத்துவ அறிவியல் புரிதல்கள் எப்போது - எப்படித் தொடங்கின, மாதவிடாயின்போது பயன்படுத்தப்படும் ‘சானிடரி நாப்கின்கள்’ ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் சீர்கேடு, வேலைக்குப் போகும் பெண்கள் மாதவிடாயால் எப்படிப் பாதிக்கப்படுகிறார்கள் என மாதவிடாய் சார்ந்த பல்வேறு அம்சங்கள் விரிவாக இதில் அலசப்பட்டுள்ளன.

பெருமதங்கள் மாதவிடாயைத் தோஷமாகவும் தீட்டாகவும் கருதும் அதேநேரம், நாட்டார் கலைகள் - கிராம விழாக்கள் - சடங்குகள் எப்படி அதை வளத்தின் குறியீடாகப் பார்க்கின்றன; சமூக ஊடகம் வெளிப்படுத்தும் மாதவிடாய் குறித்த பிற்போக்குத்தனங்கள் - ஒவ்வாமை உணர்வு, அதற்கு எதிரான பிரச்சாரம் என்பன போன்ற விஷயங்களும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

நளினி நடராஜன், சாரா ரீட் போன்ற சர்வதேசப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள், வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங், மகளிரியல் மருத்துவர்கள், சுகாதாரச் செயற்பாட்டாளர்கள், ஓவியர்கள் இந்த இதழுக்குப் பங்களித்துள்ளனர். மாதவிடாய் தொடர்பான ஓவியப் படைப்புகள், சிற்பங்கள் என இந்தக் கருப்பொருள் சார்ந்த முழுமையான ஒரு தொகுப்பை இந்த இதழ் கொண்டுள்ளது. மாதவிடாயை அடிப்படையாகக் கொண்டு தீட்டு, தோஷம், தீண்டாமை, மாசு குறித்த கருத்தாக்கம் எப்படிக் காலங்காலமாகக் கட்டமைக்கப்பட்டது என்பது குறித்த தெளிவை இந்த சிறப்பிதழைப் படிப்பதன் மூலம் பெறலாம். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் அவசியம் வாசிக்க வேண்டிய சிறப்பிதழ் இது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x