Published : 15 Jan 2019 09:14 AM
Last Updated : 15 Jan 2019 09:14 AM
சென்னையில் ஒரு காட்சி. நந்தனத்தில் ஒரு ரேஷன் கடை வாசல். ஒரு பெண் தன் மகளுடன் ஸ்கூட்டரில் வந்து இறங்குகிறாள். தன்னுடைய குடும்ப அட்டையைக் காட்டி கடையிலிருந்து கரும்புடன் இரண்டு ஐநூறு ரூபாய் நோட்டுடன் மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறாள். ஒருவேளை இவ்வாண்டு பொங்கலில் அவள் கையிலிருந்த கரும்பின் இனிப்பு அதிகரித்திருக்கலாம். ஆனால், மூன்று நாட்களுக்கு முன்னால் கடவுள் கொடுத்த வரத்தைப் பூசாரிகள் தட்டிப்பறிக்கும் நிலை இருந்தது.
பொங்கல் அன்பளிப்பாகத் தலா ஆயிரம் ரூபாயை அரசு அனைவருக்கும் அள்ளி வீசலாமா என்ற கேள்வியை எழுப்பிய உயர்நீதிமன்றம் சர்க்கரை அட்டைக்காரர்களுக்கும், வெத்து அட்டைக்காரர்களுக்கும் தனது தடையுத்தரவின் மூலம் கசப்பு மாத்திரைகளை வழங்கியது. “அரசு மனம் போன போக்கில் பொதுப் பணத்தை விரயம் செய்யலாமா?” என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் சர்க்கரை அட்டைக்காரர்களுக்கு அன்பளிப்பு தேவையா என்று தடைவிதித்தார்கள்.
ஆனால் அந்த உத்தரவு வருவதற்கு முன்னே ஒவ்வொரு வார்டிலும் சில தெருவாசிகள் வாங்கிவிட்ட நிலையில் மற்ற தெருவாசிகளுக்கு அநீதி இழைக்கலாமா என்ற கேள்வி பொதுவெளிகளில் எழுப்பப்பட்டது. நீதிபதிகளும் இவ்வாண்டு போனால் போகட்டும் அடுத்த முறை அன்பளிப்பு செலவினங்கள் மூலம் கடன் சுமையை ஏற்றிவிடாமல் இருக்க அரசுக்கு அறிவுறுத்தி வழக்கை முடித்துக்கொண்டனர். லாபம் மக்களுக்கு. கரும்பும் அனைவருக்குமே இனிக்கும் இவ்வாண்டு.
முன்னுக்குப் பின் முரண்பாடுகள்
கடற்கரையையொட்டி கோட்டையை நோக்கிச் செல்லும் காமராஜ் சாலையில் பயணிப்போருக்கு இரண்டு வளைவுகள் தென்படும். ஒன்று சட்ட மன்றத்தின் வைரவிழா வளைவு. மற்றொன்று எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவு. வைரவிழா வளைவிற்கு அனுமதி. ஆனால், நூற்றாண்டு விழா வளைவுக்கு முதலில் தடை; பின்னர் தடை நீக்கம் என்ற உயர் நீதிமன்றத்தின் செயல்பாடு புரியவில்லை. வைர விழா வளைவுக் கோட்டைக் கொடிமரத்திற்கு எதிரே அமைக்க முற்பட்டபோது ராணுவமும், தொல்லியல் துறையும் தெரிவித்த எதிர்ப்பினால் அது தீவுத்திடலுக்கு எதிரே அமைக்கப்பட்டது.
கோட்டையில் சட்ட மன்ற வைரவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றபோது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி உட்பட பல நீதிபதிகள் கலந்துகொண்டார்கள். ஆனால், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா வளைவு கட்டத் தொடங்கியவுடன் அதை எதிர்த்துப் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டபோது, “கட்டிட வேலைகள் தொடரலாம்; ஆனால் திறப்பு விழா நடத்தக் கூடாது” என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர், “வளைவைத் திறந்துகொள்ளலாம். ஆனால், ஆடம்பர விழாவாகப் போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைக்கக் கூடாது” என்று உத்தரவு தளர்த்தப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளிலும் நம் முன் தோன்றக்கூடிய கருத்து உயர் நீதிமன்றம் தடை உத்தரவுகளை வழங்குவதும் பின்னர் முதல் கருத்து தெரிவித்ததற்கு மாற்றாக, அதற்கு நேர்விரோதமாகத் தடையுத்தரவுகள் தளர்த்தப்படுவதும் மக்கள் மத்தியில் எப்படிப்பட்ட பிரதிபலிப்பை அவை தோற்றுவிக்கும் என்பது பற்றி நீதிபதிகள் யோசனை செய்தார்களா என்பதுதான்.
சுப்பிரமணி பாலாஜி என்ற வழக்கறிஞர் ஒரு வழக்கு போட்டார். “தமிழகத்தில் இலவசமாக வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கி இரண்டு கழகங்களும் மாறி மாறி மக்கள் பணத்தை விரயமாக்குகின்றன. அவற்றைக் தேர்தல் அறிக்கையில் சேர்ப்பதால் இதை ஊழல் நடவடிக்கையாகக் கருத வேண்டும்” என்பது அந்த வழக்கு.
கவனத்தில் கொள்ள இரு கருத்துகள்
இந்த வழக்கைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம் (2013) இரண்டு கருத்துகளை தெரிவித்தது. 1. மக்களின் கட்டமைப்பு வசதிகளைப் பெருக்குவதற்கு அரசு முயல்வது அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது பிரிவிலுள்ள அரசை நெறியாளும் கொள்கை வகைக்குள் வருவதாகும். பொதுநலனுக்காக அத்திட்டங்கள் நிறைவேற்றப்படுவது தவறல்ல. 2. அப்படிப்பட்ட செலவீனங்களை அரசு செய்யும்போது அதற்கான போதுமான உள்கட்டுப்பாடு அமைப்புகள் அரசமைப்புச் சட்டத்திலேயே ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. எனவே இத்தகைய திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது அவை அரசமைப்புச் சட்டத்திற்கோ (அ) இதரச் சட்டங்களுக்கோ புறம்பாக இல்லாதபோதும் அத்தகைய செலவீனங்கள் அரசிக்கு நன்மை பயக்காது என்ற நிலையில் மட்டுமே நீதிமன்றக் குறுக்கீடுகள் செய்யலாம்.
இலவசம் என்ற வார்த்தையே கெட்ட வார்த்தையாக மாற்றப்பட்டுள்ள இன்றைய சூழ்நிலையில் மறைந்த ஜெயலலிதா அவற்றுக்கு ”விலையில்லாப் பொருட்கள்” என்ற புதிய பெயரை சூட்டினார். எது எப்படியிருப்பினும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஒரு கொள்கை முடிவின் அடிப்படையில் நலத்திட்டங்களைச் செயல்படுத்தும்போது அதில் நீதிமன்றங்கள் மனம்போல குறுக்கிடலாமா என்ற கேள்வியே தொக்கி நிற்கிறது. ஒரு பக்கத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்குத் தடைக்கற்கள் எழுப்பும் நீதிமன்றங்களே சில விஷயங்களில் போடக்கூடிய உத்தரவுகள் அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன.
நெடுஞ்சாலையிலுள்ள சுங்கச்சாவடிகளில் நீதிபதிகளின் வாகனங்கள் காக்க வைக்கப்படாமல் விரைந்து செல்லும் வழியில் தனிப்பாதை அமைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு இவ்வகையைச் சேரந்ததுதான். அரசு பொது நிலங்களில் குடிசை அமைத்துக்கொண்டு வாழும் நூற்றுக்கணக்கான மக்களை அவர்களது வாழ்விடங்களிலிருந்து விரட்டுவதற்காக, “அம்மக்களின் குடும்ப அட்டைகளைப் பறித்துக்கொள்ளலாம், மின் இணைப்பைத் துண்டியுங்கள் பொங்கல் அன்பளிப்பு தருவதைத் தவிர்த்துவிடுங்கள்” என்று கூறுவதோடு மட்டுமின்றி, “தேவைப்பட்டால் அவர்களை அப்புறப்படுத்துவதற்கு ராணுவத்தை அழைத்து வாருங்கள்” என்றெல்லாம் தீர்ப்பில் நீதிபதிகள் பதிவுசெய்வதைப் பார்க்கும்போது விவிலியத்திலிருந்து மேற்கோள் காட்ட வேண்டியுள்ளது. “தேவனே அவர்களை மன்னித்துவிடுங்கள். அவர்கள் செயல்களை அவர்களே அறிய மாட்டார்கள்! ”
எல்லை தாண்டும் பயங்கரவாதம்
சட்ட மன்றங்கள், அரசாங்கம், மற்றும் நீதிமன்றங்கள் இம்மூன்று அங்கங்களை உள்ளடக்கியதே அரசு. அவற்றின் கடமைகளை அரசமைப்புச் சட்டமே தெளிவாக வரையறுத்துள்ளது. இந்நிலையில் இம்மூன்று அமைப்பும் தனக்கு விதிக்கப்பட்டுள்ள எல்லைகளுக்குட்பட்டே செயல்பட வேண்டியது அவற்றின் தலையாயக் கடமையாகும்.
ஒவ்வொரு அமைப்பும் தனது எல்லையைத் தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்றங்களே தங்களுக்கு வரையப்பட்டுள்ள எல்லைகளைத் தாண்டி செயல்பட்டால் அச்செயல்களை ‘எல்லை தாண்டிய பயங்கரவாதம்’ என்று மற்ற அமைப்புகள் அழைக்க மாட்டார்களா? இதுபற்றிய தெளிவான சிந்தனை நீதிமன்ற நடுவர்களுக்கும் தேவை!
- கே.சந்துரு,
மேனாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT