Published : 03 Jan 2019 08:39 AM
Last Updated : 03 Jan 2019 08:39 AM
கடந்த வருடத்தின் கடைசி வாரச் செய்திகளில் ஒன்றை எளிதாகக் கடந்துசெல்ல முடியவில்லை. போனில் ஆர்டர் செய்தால் பைக்கில் வந்து உணவு அளிக்கும் நிறுவனம் குறித்த செய்தி அது. 1 பில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட ரூ.7,000 கோடி முதலீட்டைப் பெற்றுள்ள அந்த நிறுவனம், இன்னும் ஐந்தே ஆண்டுகளில் இந்தியாவின் பட்டி தொட்டிகளிலெல்லாம் பைக்கில் சென்று, உணவு வழங்கி தன் வணிகத்தை ரூ.50,000 கோடிகளில் விரிக்கப்போகிறதாம்.
புதிய வகை செல்போன், புதிய கார் கம்பெனி இவற்றின் முதலீடாய், இச்செய்தியைக் கடந்துசெல்ல முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களாக இந்தச் செய்தி சற்று உறுத்தலாகவே மனதுள் ஓடிக்கொண்டிருந்தது. “காருக்கும் ஆப்பு, சோறுக்கும் ஆப்பு” என சகல வணிகமும் கைபேசிக்குள் விரியும் வேகம் நிறையவே பயமுறுத்துகிறது. மூன்று முக்கிய விஷயங்கள் இவ்வணிகத்தால் நசுக்கப்படும் போலுள்ளது. முதலாவது, உணவக வணிகம். சூடாய்ச் சாப்பிடுகையில் கிடைக்கும் சுவை சிதைந்து, ‘அட இவ்வளவுதானா இது?’ என அந்த உணவகத்துக்கு பேர் வாங்கித்தந்த உணவு, ‘பைக் வழி பரிமாறலில்’ தொலைந்துபோகும்; வணிகம் மெல்ல மெல்ல குறையும் அல்லது மறையும். உணவகம் என்பது உணவின் சுவை மட்டுமா என்ன? உணவகப் பராமரிப்பு, பரிமாறுபவருக்கும் நமக்குமான நட்பு எல்லாம் கலந்ததுதானே!
இரண்டாவது, நுகர்வோரின் தேர்வு குறித்தது. செல்போன் செயலிக்குப் புத்திசாலித்தனம் உண்டு என்பதையும் எந்த உணவைத் தேர்ந்தெடுப்பது என்பதை அதுவே முடிவு செய்யும் என்பதையும் மறந்துவிடக் கூடாது. “அது எப்படி? நுகர்வோர்தானே முடிவுசெய்கிறார்” என்று நினைக்கலாம். ஆனால், செல்போனில் நீங்கள் எந்த ஏரியாவிலிருந்து கேட்கிறீர்கள்? எந்த வயதினர்? கடந்த 30 நாட்களாய் என்ன என்ன இங்கு ஆர்டர் செய்யப்பட்டது? ஏன் இன்னும் வரலைன்னு எவ்ளவு தடவை பொங்குனீங்க? என்கிற வரலாறையெல்லாம் ஆய்ந்து அறிந்து, அந்தச் செயலி உங்களுக்கு எதைத் தேர்ந்தெடுப்பது என்று பரிந்துரைகளை முன்வைக்கும். நீங்கள் மசால் வடையைக் கேட்கலாம் என தடவுவதற்குள், “நீங்கள் ஏன் சீஸ் பர்கரை வாங்கக் கூடாது? 25% தள்ளுபடி விலை. உங்கள் கேர்ள் பிரண்டுக்குப் பிடித்ததாக்கும்?” என உங்கள் போனில் தானே விளம்பரம் பாப்அப் ஆகும்.
மூன்றாவது பிரச்சினை, நிகழ்வதற்குச் சாத்தியமுள்ள அனுமானம். சமீபத்தில் கூட்டு முதலீட்டுத் திட்டத்தில் 1 பில்லியின் டாலர் பெற்ற நிறுவனத்தில், கிட்டத்தட்ட 658 மில்லியன் சீன நிறுவனம் ஒன்று முதலீடு செய்துள்ளது. இவ்வளவு பணம் போட்ட அந்த நிறுவனம், இந்தச் செயலியின் வழியே வெங்காய ஊத்தப்பம், சோளப்பனியாரம் போன்ற உள்ளூர் உணவுகளைக் கொண்டு வணிகம் நடத்தும் என்று நம்ப முடியவில்லை. தங்கள் நாட்டைச் சேர்ந்த சங்கிலித்தொடர் உணவகங்களையே முன்னிறுத்த முயற்சிக்கும்.
உணவோட்டிகள் வணிகத்தின் வளர்ச்சி நம் முன்னால் இந்தக் கேள்விகளையும் நிறுத்துகிறது. இத்தொழிலில் குவியும் முதலீடுகள், செயலி வழி தொழில்களின் வளர்ச்சியாக மட்டுமே பார்க்க முடியவில்லை.
- கு.சிவராமன், சித்த மருத்துவர், ‘ஆறாம் திணை’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: herbsiddha@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT