Last Updated : 03 Jan, 2019 08:31 AM

 

Published : 03 Jan 2019 08:31 AM
Last Updated : 03 Jan 2019 08:31 AM

கண்காணிக்கப்படும் பொதுமக்கள்: எல்லோரும் குற்றவாளிகளா?

பொதுமக்களின் கணினிகளை வேவுபார்க்கச் சட்டப்படி அனுமதி வழங்கியுள்ளது. அதாவது, இணையத் தகவல்தொடர்புகளையும் தரவுகளையும் இடைமறித்தல், கண்காணித்தல், மறைவிலக்கம் செய்தல் ஆகியவற்றுக்கு மத்திய உளவுத் துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு, சிபிஐ, ரா உள்ளிட்ட 10 தேசிய அமைப்புகளுக்கு அதிகாரமளிக்கும் அறிவிப்பை டிசம்பர் 20-ல் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது.

இந்தக் கண்காணிப்பிலிருந்து தங்கள் தகவல்களைப் பாதுகாக்கப் பொதுமக்களுக்கெனத் தனியுரிமை எதுவுமில்லை. இதனால், மக்களின் அந்தரங்கம் மீறப்படும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது.

தேசத்தின் பாதுகாப்புக்காக இந்த வேவுபார்க்கும் வசதி அவசியம் எனத் தனது செயலை நியாயப்படுத்துகிறது அரசு. ஆதார் வழக்கில் அந்தரங்க உரிமை என்பது மக்களின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. அந்தத் தீர்ப்புக்கு நேர் எதிராக ஒருவரின் கணினித் தகவல்களை அவர் அனுமதியின்றி வேவுபார்ப்பதும், எடுத்துக்கொள்வதும், இணைய இணைப்பு கொடுத்துள்ள தொலைத்தொடர்பு நிறுவனம் அதற்கு உதவ வேண்டும் என்பதும் ஒருவரின் அந்தரங்கம் என்ற தனி உரிமையில் தலையீடு செய்பவை.

விரியும் கண்காணிப்பு வளையம்

தேசத்தின் பாதுகாப்பு என்ற பெயரில் எல்லோரையும் கண்காணிக்கலாம் என்றால், சாமானிய மக்கள் குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு வாய்ப்புள்ளவர்கள் என அரசு கருதுவதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு சந்தேகிக்க அரசு வைத்துள்ள அடிப்படைப் பண்பு என்ன என்ற கேள்விக்குப் பதில் இல்லை. அது அரசின் அப்போதைய முடிவு. ஒருவரின் பேச்சு, கருத்து போன்றவை எந்த அடிப்படையில் தேசத்துக்கு எதிரானவை என்பதை முடிவு செய்ய எந்தச் சட்ட வரையறையுமில்லை. அளவுகோலும் இல்லை. அது முழுக்க ஆட்சியாளர்கள் அல்லது காவல் துறையினரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. ஆக, பொதுமக்கள் எல்லோரும் எந்நேரமும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள் என்பதே அரசின் நிலைப்பாடு. ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கிய கண்காணிப்பு அரசியல் இன்றைக்குக் கூடுதலாகியிருப்பதை எப்படி எடுத்துக்கொள்வது? நமது தொலைபேசிகள், குறுஞ்செய்திகள், கணினிகள், சமூக வலைதளப் பகிர்வுகள், கணக்குவழக்குகள், மின்னஞ்சல்கள் எல்லாம் கண்காணிப்பு வளையத்துக்கு உட்பட்டதுதான். இந்தக் கண்காணிப்பு முழு வட்டம் - 360 டிகிரி கோணம் - கொண்டது என்கிறது மத்திய அரசு.

தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்க ஏதுவாகத் தொலைத்தொடர்புச் சட்டத்தில் உள்ள பிரிவானது மக்களின் உரிமையில் தலையிடுவதாகவும் அதைத் தடுக்க வேண்டும் என்பதைக் கோரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியுசிஎல்) தாக்கல் செய்த வழக்கில், மத்திய உள்துறை இணைச் செயலர் அல்லது மாநில உள்துறைச் செயலர் போன்ற அதிகாரிகளின் அனுமதியுடன் மட்டும் ஒட்டுக்கேட்கலாம் என்று 1997-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதுவும்கூட இரண்டு மாதம் மட்டும் ஒட்டுக்கேட்கலாம். பின்னர், மறு உத்தரவில் மட்டும் ஒட்டுக்கேட்கலாம். மொத்தமாக ஆறு மாதம் மட்டும் இது அனுமதிக்கப்படும். அனுமதிக்கப்பட்ட நபர் தவிர்த்து பிறரின் உரையாடல்களை ஒட்டுக்கேட்கக் கூடாது. தேவைப்படாத உரையாடல்களை அழித்துவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் பாதுகாப்பு வழங்கியது.

ஆனால், அரசோ அவசர காலத்தில் மாநிலக் காவல் துறைத் தலைவர் ஒட்டுக்கேட்க அனுமதிக்கலாம் என்றும், ஒருவார காலத்துக்குள் உள்துறை செயலரின் அனுமதி பெற வேண்டும் என்றும் விதியை நிர்ணயித்துள்ளது. ஒரு தனிநபரின் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவையை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளரின் இணையத்தைத் திறந்து தகவல்களைத் தருகிறோம் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அரசிடம் உரிமம் பெறுகின்றன. இதன்படி யாருடைய அனுமதியுமின்றி, சம்பந்தப்பட்ட நபரின் தகவல்கள் மத்திய அரசு அமைத்துள்ள மண்டலக் கண்காணிப்பு மையத்துக்குச் சென்றுவிடும். தகவல் எடுக்க கால எல்லையும் கட்டுப்பாடும் இல்லை!

காங்கிரஸ் அரசில் தொடங்கியது

கடந்த 2009 முதல் மத்தியக் கண்காணிப்பு அமைப்பு என்ற அமைப்பைச் செயல்படுத்திவருகிறது மத்திய அரசு. பொதுமக்களைக் கண்காணிக்கும் அமைப்பு இது. டெல்லியில் ஒரு தலைமை மையமும், பெங்களூரில் ஒரு தலைமை மையமும் இயங்குகிறது. இதைத் தவிர, நாட்டின் 21 பகுதிகளில் மண்டலக் கண்காணிப்பு மையமும் செயல்படுகிறது. இந்த மையம் 195 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மக்களின் தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கண்காணிப்பு மையம் என 716 மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தக் கண்காணிப்புக்காக ரூ.400 கோடி செலவில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் நாடாளுமன்றத்தில் எவ்வித ஒப்புதலும் பெறவில்லை. வெறுமனே கேள்வி பதில் அமர்வில் மட்டும் தகவல் சொல்லப்பட்டது. அதுவும் இந்தக் கண்காணிப்பு இல்லாவிட்டால் தேசத்துக்கு ஆபத்து என்ற அச்சுறுத்தலுடன் பதிலை முடித்துக்கொண்டது.

2009-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் நிறைவேற்றப்பட்ட தகவல் தொழில்நுட்ப ஒட்டுக்கேட்பு மற்றும் கண்காணிப்புக்கான விதியானது உள்துறைச் செயலரின் அனுமதியுடன் எந்த ஒரு கணினியையும் கண்காணிக்கவோ அல்லது தகவல்களை எடுக்கவோ அனுமதிக்கிறது. நடைமுறையில் இந்த அனுமதி என்பது ஒரு வெற்றுச் சடங்கு மட்டுமே. அந்தச் சட்டத்தில் தற்போது 10 அரசுத் துறைகளை அனுமதித்து வேவுபார்த்தலைச் சட்டபூர்வமாக்கியுள்ளது அரசு. இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் - ஏற்கெனவே தற்போது மத்திய அரசு வேவுபார்க்க அனுமதித்துள்ள 10 அமைப்புகளையும், மத்தியக் கண்காணிப்பு அமைப்பானது ஏற்கெனவே வேவுபார்க்க அனுமதித்திருந்தது. இன்றைக்கு அது முறையாகச் சட்டமாக்கப்பட்டுள்ளது. இது தவிர, பாதுகாப்பு அமைச்சகத்தின் ‘நேத்ரா’ என்ற அமைப்பு இணையத்தில் அல்லது தொலைபேசியில் வரும் அச்சுறுத்தலான வார்த்தைகளைத் தொடர்ந்து கண்காணித்துவருகிறது. இதேபோல மூன்று அமைப்புகள் பொதுமக்களைக் கண்காணிக்கின்றன.

சர்வாதிகார அரசா?

இவை தவிர, பொதுமக்களின் சமூக வலைதளங்களைக் கண்காணிக்கும் வகையில் சமூக வலைதளத் தொடர்பு முகமை என்ற ஒன்றை உருவாக்க மத்தியத் தொலைத்தொடர்பு மற்றும் செய்தி அமைச்சகம் தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம் தனக்கு எதிரான கருத்துகளைத் தடுப்பது மற்றும் ஆளும் அரசின் அரசியலைத் திணிப்பது அதன் நோக்கம்.

சர்வாதிகார ஆட்சியில் மக்களை ஒடுக்க, கண்காணிப்பு என்ற அரசியல் கட்டமைக்கப்படுவது வரலாறு. ஆனால், ஜனநாயகச் சமூகத்தில் பொதுமக்களின் எல்லாத் தனியுரிமையிலும் தலையீடு செய்வது; எதிர்த்தால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறுவது, மீறிப் போராடினால் தேசத்துரோகி என முத்திரை குத்துவதும் தொடர்கிறது. ஜனநாயகச் சமூகம் தனது சுதந்திரத்தையும் உரிமையையும் பாதுகாக்க முன்வருவது மிக அவசியமானது!

- ச.பாலமுருகன், ‘சோளகர் தொட்டி’ நாவல் ஆசிரியர், வழக்கறிஞர்.

தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x