Published : 02 Jan 2019 09:10 AM
Last Updated : 02 Jan 2019 09:10 AM
வங்கத் திரையுலகின் மும்மூர்த்திகளில் ஒருவரான மிருணாள் சென்னின் (95) மறைவு இந்தியத் திரையுலகைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்திய சினிமாவின் முன்னகர்வுக்குப் பெரும் பங்களித்த 34 திரைப்படங்களை இயக்கியவர் அவர். இந்திய சினிமாவில் புதிய அலையை உருவாக்கிய முன்னோடி. 70 ஆண்டுகள் பணிசெய்திருக்கிறார். கொல்கத்தாவின் நெரிசல் மிக்க வீதிகளையும், சாமானியர்களின் அன்றாட வாழ்வின் கூறுகளையும் அச்சுஅசலாகப் பதிவுசெய்தவர். அவருடைய சில படங்கள் வணிக நோக்கிலான திரைப்படங்களுக்கு ஈடாக வெற்றி பெற்றவை. உயிரோட்டமான கதை, உரையாடல், திரைக்கதை, ஒளிப்பதிவு ஆகியவற்றுக்காகப் பேசப்படும் படைப்புகள் அவை. சத்யஜித் ராய், ரித்விக் கடக் ஆகிய மேதைகளின் காலத்தில் வங்கத்தின் இன்னொரு திரை ஆளுமையாக மிளிர்ந்தவர்.
இப்போதைய வங்கதேசத்தின் பரீத்பூரில் 1923 மே 14-ல் பிறந்தவர். உள்ளூரில் பள்ளிப் படிப்புக்குப் பிறகு, கல்லூரியில் சேர கொல்கத்தா வந்து சேர்ந்தார். அங்கு இயற்பியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். சிறிது காலம் மருந்து விற்பனைப் பிரதிநிதியாக வேலை பார்த்தார். கொல்கத்தாவில் படிக்க வந்தபோது ரூடால்ஃப் ஆர்ன்ஹைம் எழுதிய ‘ஃபிலிம் அஸ் ஆர்ட்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தைப் படித்தார். அப்போதே அவருக்குத் திரைப்படத் துறை மீது ஈர்ப்பு உண்டானது. அன்றைய வங்காளி இளைஞர்களைப் போலவே கார்ல் மார்க்ஸும் அவரைக் கவர்ந்த சிந்தனையாளர் ஆனார். எந்தக் கட்சியிலும் சேராவிட்டாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கலை-இலக்கியப் பிரிவு அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்தார். மக்களுடைய பிரச்சினைகளைச் சொல்வதற்குத் திரைப்படத்தைவிட நல்ல கலைவடிவம் இல்லை என்பதில் மிருணாள் சென்னுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
34 திரைப்படங்களையும் ஐந்து ஆவணப்படங்களையும் இயக்கியிருக்கிறார். தெலுங்கு,ஒடியா மொழிப் படங்களையும் இயக்கியிருக்கிறார். பத்மபூஷண், ஆர்டர் ஆஃப் ஃபிரெண்ட்ஷிப் ஆகிய முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார். தாதாசாகேப் பால்கே விருது 2005-ல் இவருக்கு வழங்கப்பட்டது. அவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘ராத்போரே’ (விடியல்) 1955-ல் வெளியானது. பின்னாளில் மிகவும் புகழ்பெற்ற உத்தம் குமார்அதில் நடித்திருந்தார். ஆனால், அந்தத் திரைப்படம் வசூல்ரீதியாக வெற்றி பெறவில்லை.
கொல்கத்தாவின் விளிம்புநிலை மக்களின் துயர வாழ்வைப் பேசும் ‘கல்கத்தா 71’ (1972), ஏழைகளின் பலவீனங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் செல்வந்தர்களின் வஞ்சகத்தைப் பேசும் ‘ஜெனிஸிஸ்’(1986), 1940-களில் நிகழ்ந்த பஞ்சத்தைப் பற்றிப் படமெடுக்க கிராமத்துக்கு வரும்திரைப்படக் குழு எதிர்கொள்ளும் நிதர்சனத்தைப் பேசும் ‘அகாலே சந்தனே’(1982) என்று அவர் எடுத்த முக்கியமான படங்கள் கலைப் படைப்புகள் எனும் எல்லையைத் தாண்டி, மனிதர்களின் வலியைப் பதிவுசெய்த ஆவணங்களாகின. உண்மையில், அசல் மனிதர்களின் வாழ்க்கையை அருகிலிருந்து பார்த்து அதைத் திரைமொழியில் பதிவுசெய்வது அவரது வழக்கம். அப்படிப்பட்ட படங்களை எடுப்பதால், அவர்களது வாழ்க்கையை மாற்றிவிட முடியும் என்றெல்லாம் அவர் போலித்தனமாக நம்பிவிடவில்லை. ஒரு கலைஞனாகத் தனக்கு அது குற்றவுணர்வை ஏற்படுத்துவதை ஒப்புக்கொள்ளவும் அவர் தயங்கவில்லை. ‘அகாலே சந்தனே’ படப்பிடிப்பின்போது அவரைத் தினந்தோறும் சந்தித்த சிறுமியுடனான தனது பரிவைப் பற்றி நினைவுகூர்ந்திருக்கும் அவர், அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் அந்தச் சிறுமியை ஒரு பாத்திரமாகவே நடிக்கச் செய்ததையும் குறிப்பிட்டிருக்கிறார்.
சத்யஜித் ராய்க்கும் மிருணாள் சென்னுக்கும் இடையிலான உறவு வித்தியாசமானது. நேரடியான தொழில் போட்டி இல்லை என்றாலும், சென்னின் திரைப்படங்களைக் கடுமையாக விமர்சிக்க ராய் தவறியதில்லை. அன்றையவங்காளி இளைஞர்களின் வாழ்க்கைக் கனவு, நகர வாழ்க்கை, நடுத்தர வகுப்பு மக்களின் நிறைவேறாத ஏக்கம், பழமையான சிந்தனைகளுக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் ஏற்படும் முரண்கள் என்ற கதைகளை இருவரும் தேர்வு செய்தார்கள். வங்காளத்தைப் பெரிதும் பாதித்த மகா பஞ்சத்தை அடிப்படையாகக் கொண்டு இருவரும் படம் எடுத்தார்கள். இருவருடைய திரைப்படங்களும் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றன. இந்தியா ஏழைகள் நாடு என்ற எண்ணத்தை, அரசு தயாரித்தளித்த புள்ளிவிவரங்களை விட அக்காலத்தில் இவ்விருவரின் திரைப்படங்களே அதிகம் விதைத்தன என்றுகூடக் கூறுவார்கள். அந்த அளவுக்கு அழுத்தமான காட்சிகள் இடம்பெற்றன.
மிருணாள் சென்னின் ‘ஆகாஷ் குசும்’ (1965)திரைப்படத்தின் நாயகன் சௌமித்ர சட்டர்ஜி(அஜய்), நாயகி அபர்ணா சென். கீழ் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த கதாநாயகன் எப்படியாவது வெகு சீக்கிரமாகப் பணக்காரனாகிவிட நினைக்கிறான். நிறைவேறாத கனவுகளைக் காண்கிறான். சமூக – பொருளாதாரச் சுவர்களைக் கனவுகள் மூலமே தகர்க்க நினைக்கிறான். இறுதியில் கையில் உள்ளதையும் இழக்கிறான். இந்த திரைப்படத்தை விமர்சித்தவர்கள், கதாநாயகனை மோசடிக்காரனாகப் பார்த்தனர். அவன் ஏமாற்றவில்லை, பெரிய எதிர்பார்ப்புகளைத்தான் கொண்டிருந்தான் என்று மிருணாள் சென் அவனுக்காகப் பரிந்து பேச வேண்டியதாயிற்று. இந்த நிலையில் ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகையில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில் இத்திரைப்படம் தொடர்பான விவாதம் வளரத் தொடங்கியது. கதையை நகைச்சுவையாக முடித்திருந்தால்கூட ரசிகர்களுக்குக் கதாநாயகன் மீது அனுதாபம் பிறந்திருக்கும் என்று விமர்சகர் குறிப்பிட்டிருந்தார். கதாசிரியரான ஆசிஷ் பர்மன், கதாநாயகன் மோசடிப் பேர்வழியல்ல, ஆசைகள் நிறைய உள்ள இளைஞன் அவ்வளவே என்று பதிலளித்தார்.
அப்போது மிருணாள் சென்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட சத்யஜித் ராய், “இந்த விவாதத்தில் கதாசிரியர் ஆசிஷ் பர்மனைத்தான் தாக்கப்போகிறேன், உங்களையல்ல” என்று கூறிவிட்டுக் கடிதம் எழுதினார். அதில் மிருணாள் சென்னையும் சேர்த்து விளாசிவிட்டார். பிறகு, இந்த கடிதப் போர்கள் உக்கிரமடைந்தன. ஏராளமான ரசிக வாசகர்கள் களத்தில் இறங்கினர். திரைப்பட விமர்சனம் தனிப்பட்ட தாக்குதலாக மாறியது. இதை முடித்துவிட நினைத்த பத்திரிகை, மிருணாள் சென்னும் பர்மனும் தங்கள் தரப்பைத் தெரிவிக்கலாம் என்றது. “கதைக்காகக் கோபப்படுவதாக இருந்தால் ஷேக்ஸ்பியரின் ஹேம்லட்கூடத் தப்பாது” என்று நாசூக்காகச் சுட்டிக்காட்டினார் மிருணாள் சென். சத்யஜித் ராய்க்கு ஏன் அவ்வளவு கோபம் ஏற்பட்டது என்பது இன்றுவரை புரியாத புதிர். எனினும் இருவருக்கும் இடையில் அலாதியான நட்பு உண்டு. அதேசமயம், கடும் விமர்சனங்களையும் அவர் எளிதாக எடுத்துக்கொண்ட தருணங்கள் உண்டு.
சத்யஜித் ராய் மறைவுத் தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்குச் சென்ற சென், திக்பிரமைபிடித்தவரைப் போல எங்கேயோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னை உசுப்பிவிடும் வகையில் படம் எடுத்ததுடன் துணிச்சலாக விமர்சித்த நண்பர் மறைந்துவிட்டாரே என்ற வருத்தம் அவரிடம் வெளிப்பட்டது. தனிமைப்பட்டுவிட்டதாக உணர்ந்தார் சென்.
குறைந்த பட்ஜெட்டில் படம் எடுப்பது தனக்கு வசதியானது என்றே எப்போதும் கருதினார். “பெரிய பட்ஜெட்டை வைத்துக்கொண்டு நான் என்ன செய்வது?” என்பார் நகைச்சுவையாக. மிருணாள் சென்னின் பல படங்கள் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டவை. தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தில் (என்எஃப்டிசி) உறுப்பினராக இருந்தவர். என்எஃப்டிசியின் தொடக்க காலத்தில் அதன் நிதியுதவியில் மிருணாள் சென் இயக்கிய ‘புவன் ஷோம்’ போன்ற திரைப்படங்கள் இந்தியாவில் வணிக நோக்கமற்ற கலைப்படங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டன. அந்த வகையில் அவரது மரணம் இந்தியத் திரையுலகுக்குப் பேரிழப்பு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT