Published : 03 Dec 2018 09:52 AM
Last Updated : 03 Dec 2018 09:52 AM
ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ் (1924-2018). பனிப்போரின் கடைசிக் கட்டத்தில், கொந்தளிப்பான ஆண்டுகளில் அமெரிக்காவை வழிநடத்திய பெருமை கொண்ட அதிபர். 40 ஆண்டுகளுக்கு மேல் பொது வாழ்க்கையில் ஈடுபட்டவர். இரண்டாம் உலகப் போரில் பங்கேற்று பின்னாளில் அதிபரான கடைசித் தலைவர். உலக வரலாற்றின் முக்கியத் தருணங்களைத் தனது பதவிக்காலத்தில் பார்த்தவர். மனைவி பார்பரா மீது மிகுந்த அன்பு கொண்டவரான புஷ், அவர் இறந்து எட்டு மாதங்களில் மறைந்திருக்கிறார். “தேசப்பற்று மிக்கவரும் பணிவான சேவகருமான ஒரு தலைவரை இழந்திருக்கிறோம்” என்று முன்னாள் அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார். இந்த வார்த்தைகளுக்குத் தகுதியானவர்தான் சீனியர் புஷ்.
1924 ஜூன் 12-ல், மசாசூட்ஸ் மாகாணத்தின் மில்டன் நகரில், பிரஸ்காட் புஷ், டோரதி வாக்கர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் ஜார்ஜ் ஹெர்பர்ட் வாக்கர் புஷ். தந்தை பிரஸ்காட் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். கிரீன்விச் நகரில் பள்ளிப் படிப்பு. 18-வது வயதில், இரண்டாம் உலகப் போரில் பங்கேற்றார். விமான பைலட் பயிற்சி பெற்றிருந்தார் ஜார்ஜ் புஷ். அவரது விமானம் பசிபிக் பெருங்கடலில் ஜப்பான் வசமிருந்த சிச்சிஜிமா தீவின் மீது பறந்துகொண்டிருந்தபோது சுட்டுவீழ்த்தப்பட்டது. எளிதில் துவண்டுவிடாதவரான புஷ், கடலில் குதித்து நீந்தித் தப்பினார். அந்த உறுதி, பின்னாட்களில் அவரது அரசியல் வாழ்விலும் வெளிப்பட்டது.
அரசியல் பிரவேசம்
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் டெக்சாஸ் மாநிலத்தில், எண்ணெய்த் துரப்பணக் கருவிகள் விற்பனையாளராகப் பணிபுரிந்தார். 1951-ல் எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தைத் தொடங்கினார். 1953-ல் ‘ஸபடா பெட்ரோலியக் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தைத் தொடங்கினார். தந்தையின் அரசியல் ஆர்வம் தொற்றிக்கொள்ள, குடியரசுக் கட்சியின் டெக்சாஸ் கிளைத் தலைவராக 1963-ல் பொறுப்பேற்றார். நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் இரண்டு முறை உறுப்பினர், ஐநாவுக்கான அமெரிக்கப் பிரதிநிதி, சிஐஏ இயக்குநர், சீனாவுக்கான வெளியுறவுத் தொடர்பு அதிகாரி என்று பல்வேறு பதவிகள் வகித்தவர்.
1981-ல் அமெரிக்காவின் துணை அதிபரானார். அப்போது அதிபராக இருந்த ரொனால்டு ரீகனின் நம்பிக்கைக்குப் பாத்திரமானார். சிக்கலான தருணங்களில் அவர் காட்டிய உறுதியும், விசுவாசமும் அதிபர் ரீகனிடம் அவருக்கு நன்மதிப்பைப் பெற்றுத்தந்தது. 1988-ல் நடந்த அதிபர் தேர்தலின்போது அவரது பிரச்சார உரைகள் அவருக்குப் பெரும் வெற்றியைப் பெற்றுத் தந்தன. “என் வார்த்தைகளைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இனி, புதிய வரிகள் கிடையாது” என்றார்.
மக்கள் அவரை அதிபராக்கினர். மார்ட்டின் வான் பியூரனுக்கு (1837) பிறகு, துணை அதிபராக இருந்து அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இவர்தான்!
தனது பதவிக்காலத்தில் கல்வி, சுகாதாரத்துக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தினார். இது சொந்தக் கட்சிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தியது. எனினும் புஷ் பின்வாங்கவில்லை. மாற்றுத்திறனாளிகள் நலன் கருதி புஷ் இயற்றிய சட்டம் உலகின் நல்வாழ்வு நாடுகள் பின்பற்றத்தக்க நல்ல முன்னுதாரணமாகும்.
வரலாற்றுத் தருணங்கள்
உள்நாட்டு விவகாரங்களை விடவும், வெளியுறவுக் கொள்கை சார்ந்த நடவடிக்கைகளுக்காகத்தான் புஷ் அதிகம் பேசப்படுகிறார். 1989 முதல் 1993 வரையில் அமெரிக்க அதிபராக புஷ் பதவி வகித்தபோதுதான், பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு ரொனால்டு ரீகனின் பங்களிப்பு மிக முக்கியமானது என்றாலும், இரு ஜெர்மனிகளையும் ஒரே நாடாக இணைப்பதில் பெரும் பங்காற்றியது புஷ்தான். “புஷ் கொள்கைகளின் பங்களிப்பு இல்லாமல், இன்றைக்கு நான் இங்கு இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது” ஜி-20 உச்சி மாநாட்டில் கலந்துகொண்டிருக்கும் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார். சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது, புஷ்ஷின் செயல்பாடுகள் ரஷ்யர்களிடம் மரியாதையைப் பெற்றுத்தந்தன.
“இரண்டு மிகப் பெரிய அணுசக்தி நாடுகளுக்கு இடையில் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையின் அவசியத்தை புஷ் நன்கு உணர்ந்திருந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த பெரும் பங்காற்றினார்” என்று புஷ்ஷின் மகனும் முன்னாள் அதிபருமான ஜார்ஜ் புஷ் ஜூனியருக்கு எழுதிய கடிதத்தில் ரஷ்ய அதிபர் புதின் குறிப்பிட்டிருக்கிறார்.
“அவர் ஒரு நம்பகமான கூட்டாளி” என்று சோவியத் ஒன்றியத்தின் அப்போதைய அதிபர் மிகையீல் கோர்பச்சேவ் கூறியிருக்கிறார். 1991-ல் அணுஆயுதக் குறைப்பு ஒப்பந்தத்தில் புஷ்ஷும் கோர்பச்சேவும் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
வளைகுடாப் போர்
புஷ்ஷின் ஆட்சிக்காலத்தில் மிக முக்கியமான தருணம் என்றால், அது குவைத் மீது இராக்கின் படையெடுப்பும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும்தான். 1990-ல் கச்சா எண்ணெயை அளவுக்கு அதிகமாக உற்பத்திசெய்யும் குவைத்தின் செயல்பாடுகள் காரணமாக, இராக்கின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டி, அந்நாட்டின் மீது படையெடுத்தார் சதாம் ஹுசைன். சவுதி அரேபியாவுக்கும் குறிவைத்தார். இதையடுத்து, வளைகுடாப் போர் மூண்டது.
32 நாடுகளைச் சேர்ந்த கூட்டுப் படையை உருவாக்கினார் புஷ். ‘ஆபரேஷன் பாலைவனப் புயல்’ என்று அழைக்கப்பட்ட அந்தப் போரில், சுமார் 4.25 லட்சம் அமெரிக்கத் துருப்புகளுடன், 1.19 லட்சம் பன்னாட்டு வீரர்களும் இணைந்து, குவைத்திலிருந்து இராக் படைகளை விரட்டியடித்தன. குவைத்தை விடுவித்த பின்னர் இராக் மீதும் தாக்குதல் நடத்த வேண்டும் என்று சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட யோசனைகளைப் புறக்கணித்தார். ஆனால், அவரது மகன் ஜார்ஜ் புஷ் ஜூனியரின் ஆட்சிக்காலத்தில், இராக் பேரழிவு ஆயுதங்களை உருவாக்குகிறது; மனித உரிமை மீறல்களில் ஈடுபடுகிறது என்றெல்லாம் குற்றம்சாட்டி 2003-ல் அந்நாட்டின் மீது அமெரிக்கா போர் தொடுத்ததும், அதன் தொடர்ச்சியாக சதாம் ஹுசைன் கைதுசெய்யப்பட்டுத் தூக்கிலிடப்பட்டதும் மறக்க முடியாத நிகழ்வுகள்.
நிதி நிலையைச் சீராக்க வரிகளை உயர்த்தியது, வேலைவாய்ப்பின்மை அதிகரித்தது, பணப் புழக்கம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் மக்களிடம் செல்வாக்கை இழந்த புஷ், 1992 நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பில் கிளிண்டனிடம் தோற்றார். பின்னாட்களில், பல்வேறு நலத்திட்டங்களுக்காக பில் கிளிண்டனுடன் இணைந்து பணியாற்றவும் புஷ் தயங்கவில்லை. அரசியலிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், மேய்ன் மாநிலத்தில் அவர் மேற்கொண்ட பொதுநலச் சேவைகளுக்காக அவர் நினைவுகூரப்படுவார்!
- வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT