Last Updated : 26 Dec, 2018 09:51 AM

 

Published : 26 Dec 2018 09:51 AM
Last Updated : 26 Dec 2018 09:51 AM

காந்தியைப் பேசுதல்: காந்தியின் சத்தியாகிரகம் பிறந்த கதை!

“நாம் சத்தியம் செய்துகொள்வது ஆங்கிலேயர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்காக அல்ல... ஒவ்வொருவரும் அவரவர் இதயத்தின் குரலைக் கேட்க வேண்டும். சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் வலிமை தனக்கு இருக்கிறது என்பதை உள்குரல் உறுதிப்படுத்தினால் மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்” என்று பேசி முடித்த பிறகு இம்பீரியல் ஹாலில் தன் முன்னே கூடியிருந்த மூவாயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களின் முகங்களைப் பார்க்கிறார் காந்தி. உணர்ச்சிக் கொந்தளிப்பில் தத்தளித்த முகங்கள் அவை.

தென்னாப்பிரிக்காவுக்கு 1893-ல் வந்த காந்தி அடுத்த ஓராண்டுக்குள் இந்தியர்களின் அரசியல் உரிமைக்காக ‘நேட்டால் இந்திய காங்கிர’ஸை நண்பர்களின் துணையோடு நிறுவினார். நம்புங்கள்! அப்போது அவருக்கு வயது 24தான். காந்தி உருவாக்கிய முதல் அரசியல் இயக்கம் அது. வழக்கறிஞர் தொழிலில் கொஞ்சம் சம்பாதித்துவிட்டுப் போக வேண்டும் என்று வந்தவரை அந்த ஓராண்டு அனுபவங்கள் அவரை மேற்கொண்டு 20 ஆண்டுகள் தென்னாப்பிரிக்காவிலேயே இருக்கச்செய்துவிடுமென்று அவர் அப்போது அறிந்திருக்கவில்லை.

பம்பாயில் விட்டதைத் தென்னாப்பிரிக்காவில் பிடிக்க ஆரம்பித்திருந்தார் காந்தி. இன்றைய மதிப்பில் ஆண்டுக்கு ரூ.10, 20 லட்சத்துக்கும் மேல் வருமானம். ஒரு கட்டத்தில் தனது வருமானத்தை சத்தியாகிரகப் பணிகளுக்காகவும் தென்னாப்பிரிக்காவில் தான் உருவாக்கிய ஆசிரமப் பண்ணைகளுக்காகவும் முழுமையாக ஒப்படைத்தார். ஏழைகளுக்கு இலவசமாக, பணக்காரர்களிடம் கட்டணம் பெற்றுக்கொண்டு என்று அனைத்துத் தரப்புகளுக்காகவும் வாதாடினார். இஸ்லாமியர் ஒருவர் நீதிமன்றத்தில் தன் குல்லாவைக் கழற்றி நீதிபதிக்கு முன் வணக்கம் தெரிவிக்கவில்லை என்று அவர் மீது வழக்கு பாய, அந்த இஸ்லாமியருக்காக காந்தி ஆஜராகியிருக்கிறார்.

ஒருமுறை காந்தியின் கட்சிக்காரர் கொடுத்த கணக்குவழக்கை எதிர்த்தரப்பு மத்தியஸ்தர்கள் தணிக்கை செய்யும்போது ஒரு பிழை செய்துவிடுகிறார்கள். இந்தப் பிழையால் காந்தியின் கட்சிக்காரருக்குச் சாதகமான தீர்ப்பு வருவதற்கு வாய்ப்பு உண்டாகிறது. காந்தியோ இந்தப் பிழையை நாமாகவே ஒப்புக்கொள்ள வேண்டும் என்கிறார். ‘நம் கட்சிக்காரருக்கு விரோதமாகத் தன்னால் நடந்துகொள்ள முடியாது’ என்று பெரிய வக்கீல் மறுத்துவிடுகிறார். அவரிடம் பேசி காந்தி தன் முடிவின் நியாயத்தை உணர்த்துகிறார். ஆகவே, காந்தியையே வாதிடச் சொல்கிறார் பெரிய வக்கீல். காந்தியின் மீது நன்மதிப்பு கொண்ட கட்சிக்காரரிடமும் பேசி காந்தி அதற்குச் சம்மதிக்கவைக்கிறார். கணக்கில் ஏற்பட்ட பிழையைப் பற்றி நீதிபதியிடம் காந்தி சொல்ல காந்தியின் மீது நீதிபதிக்கு நன்மதிப்பு ஏற்படுகிறது. இப்படிப் பல வழக்குகள்!

இப்படிப் போய்க்கொண்டிருக்கும்போது, 1906-ம் ஆண்டு, செப்டம்பர் 11 அன்று, அதாவது காந்தி தென்னாப்பிரிக்காவுக்கு வந்து கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து, சத்தியாகிரகத்தின் முதல் விதைகள் தென்னாப்பிரிக்காவின் ட்ரான்ஸ்வால் பகுதியில் தூவப்பட்டன. அதற்கு முந்தைய மாதம்தான் ட்ரான்ஸ்வால் பகுதியின் இனவெறி ஆங்கிலேய அரசு கொடுமையான அவசரச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்திருந்தது. அதன்படி அந்தப் பிரதேசத்திலுள்ள ‘வந்தேறி’ இந்தியர்களில் எட்டு வயதுக்குட்பட்டவர்கள் அனைவரும் கட்டாயம் தங்களை அரசிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும்; முந்தைய பர்மிட்டுகளை ஒப்படைக்க வேண்டும்; பெயர், வயது, மதம், சாதி இன்னபிற தகவல்களைச் சொல்லிக் கைநாட்டு வைக்க வேண்டும். இந்தியர்கள் தங்களைப் பதிவுசெய்துகொள்ளத் தவறினால் அபராதம், கடுமையான சிறைத் தண்டனை, தேவைப்பட்டால் இந்தியாவுக்கே திருப்பியனுப்பப்படுதல் ஆகிய தண்டனைகள் வழங்கப்படும். இப்படிப் பதிவுசெய்த சான்றிதழை வீட்டில் இருக்கும்போதும் சாலையில் நடமாடும்போதும் இந்தியர்கள் கையில் வைத்திருக்க வேண்டும். யார் வீட்டிலும் புகுந்து, அந்த வீட்டினர் சான்றிதழ்களை வைத்திருக்கிறார்களா என்று பரிசோதிக்க போலீஸ்காரர்களுக்கு முழு உரிமை உண்டு. இதுதான் அந்தக் கொடிய சட்டத்தின் சாராம்சம்.

காந்தி கொந்தளித்துவிட்டார். தனது ‘தென்னாப்பிரிக்காவில் சத்தியாகிரகம்’ எனும் நூலில் இப்படி எழுதுகிறார்: ‘மனுக்கள் கொடுப்பதும் பிரதிநிதிகளை அனுப்புவதும் பயனளிக்காது எனினும், இந்தியச் சமூகம் கையைக் கட்டிக்கொண்டு சும்மா இருக்கவும் முடியாது. இந்தச் சட்டத்துக்கு அடிபணிவதைவிட மரிப்பதே மேல். ஆயின், எப்படி மரிப்பது? நமக்கு முன்பாக வெற்றி அல்லது மரணம் என்ற இரண்டு வாய்ப்புகளைத் தவிர வேறு ஏதும் இருக்கக் கூடாதென்றால் நாம் என்ன செய்தாக வேண்டும்? ஒரு வகையில், ஊடுருவ முடியாத சுவர் ஒன்று என் முன்னால் இருந்தது, அதைக் கடந்துசெல்லும் வழி ஏதும் தெரியாமல் இருந்தேன்’. அந்த வழி செப்டம்பர் 11, 1906 கண் முன்னே தெளிவாய் விரியத் தொடங்கியது.

ட்ரான்ஸ்வால் இந்தியர்கள் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜோஹனஸ்பர்க் நகரத்தில் இருந்த இம்பீரியல் அரங்கில் ஒன்றுகூடினார்கள். ட்ரான்ஸ்வால் பிரிட்டிஷ் இந்தியச் சங்கத்தின் தலைவரான அப்துல் கனி அந்தக் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் மிகவும் முக்கியமானது நான்காவதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம்தான். இனவெறி அவசரச் சட்டத்துக்கு இந்தியர்கள் யாரும் அடிபணியக் கூடாது; அப்படி அடிபணியாததால் கிடைக்கும் எல்லாத் தண்டனைகளையும் மனமுவந்து இந்தியர்கள் அனுபவிக்க வேண்டும். இதுதான் அந்தத் தீர்மானம். தீர்மானம் முன்மொழியப்பட்டதும் பலரும் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ‘கடவுள் மீது ஆணையாகச் சட்டத்துக்கு அடிபணிய மாட்டேன்’ என்று உறுதி எடுத்துக்கொண்டனர். அப்போதுதான், நாம் சத்தியம் செய்துகொள்வது ஏன் என்பதை காந்தி விளக்கினார்.

தான் இன்னும் பரிசோதனை நிலையில் வைத்திருக்கும் போராட்ட முறைக்கு முதல் வாய்ப்பு கிடைத்திருப்பதாக காந்தி உணர்ந்தார். இந்தப் போராட்ட முறைக்கு காந்தி முதலில் ‘Passive Resistance’ (சாத்வீக எதிர்ப்பு) என்ற பெயரையே வைத்திருந்தார். இந்தியர்களின் போராட்டத்துக்கு ஆங்கிலத்தில் பெயர் இருப்பதை காந்தி அசௌகரியமாகவே உணர்ந்தார். அதுமட்டுமல்லாமல், அதுவரையில் மேற்குலகில் நடைபெற்ற ‘சாத்வீக எதிர்ப்பு’களுக்கும் இப்போதைய புதிய போராட்டத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதால் தனது போராட்டத்துக்குப் புதிய பெயர் வைக்க நினைத்தார்.

தனது போராட்ட வடிவத்துக்குச் சரியான பெயரைப் பரிந்துரைப்பவர்களுக்குப் பரிசு உண்டென்றும் காந்தி தனது ‘இந்தியன் ஒப்பீனியன்’ பத்திரிகையில் அறிவிப்பு கொடுத்தார். நிறைய பேரிடமிருந்து பரிந்துரைகள் வந்தன. இறுதியில், காந்தியின் உறவினர் மகனாகிய மகன்லால் காந்தியின் ‘சதாகிரகம்’ எனும் பரிந்துரையே ஏற்றுக்கொள்ளப்பட்டது. சாதாரண மக்களுக்கு அந்தச் சொல் வாயில் நுழையாது என்பதால் அதில் மாற்றம் செய்து ‘சத்தியாகிரகா’ (சத்தியாகிரகம்) என்ற சொல்லை காந்தி உருவாக்கினார். ‘சத்ய+ஆக்ரஹ’ என்ற இரு சொற்களின் இணைவு அது. ‘சத்தியத்திலிருந்து அல்லது அகிம்சையிலிருந்து பிறந்த சக்தி’ என்று அர்த்தம். இப்படியாக, உலகின் வலிமை மிக்க போராட்டத்துக்கு ஒரு பெயர் கிடைத்தது.

(காந்தியைப் பேசுவோம்)

 

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x