Published : 27 Dec 2018 10:54 AM
Last Updated : 27 Dec 2018 10:54 AM
அரசுப் பள்ளிகளில் செயல்பட்டுவரும் 8,000 சத்துணவு மையங்களை மூடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறது பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு. ‘மதிய உணவு என்றால் காமராஜர், சத்துணவு என்றால் எம்ஜிஆர்’ என்பது தமிழகத்தின் பிரபலமான சொல் வழக்கு. ‘ஜெயலலிதா ஆட்சியைப் பாதுகாப்போம், தேர்தலில் அதிமுக வெற்றிபெற உழைப்போம்’ என்று எம்ஜிஆரின் நினைவிடத்தில் உறுதிமொழி எடுத்துக்கொள்கிற தமிழக முதல்வரும் அவருடைய சகாக்களும் எம்ஜிஆரின் அடையாளமாகவே இருக்கும் ஒரு நலத்திட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கத் துடிப்பது ஏன்?
மதிய உணவுத் திட்டம் என்பது ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சியில், சென்னை மாநகராட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம். அதை மாநிலம் முழுமைக்கும் பொதுமைப்படுத்தினார் காமராஜர். மாநில முதல்வர் தொடங்கி பள்ளி ஆசிரியர்கள் வரை ஒவ்வொரு ஊரிலும் உள்ள புரவலர்களைத் தேடித் தேடி அவர்களிடம் கையேந்தி நிதி திரட்டி உருவாக்கிய திட்டம் இது.
எம்ஜிஆர் முதல்வராகப் பொறுப்பேற்றபோது அதற்குச் சத்துணவுத் திட்டம் என்ற புதிய பெயரைச் சூட்டி, ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் சத்துணவு தயாரிப்பதற்காக அமைப்பாளர்களையும் சமையல் உதவியாளர்களையும் நியமித்தார். சத்துணவு ஊழியர் நியமனத்திலும்கூட கருணைகாட்டினார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினர், கணவனை இழந்தோர், கைவிடப்பட்டோருக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த பெண்கள் சமைத்த உணவு அனைத்து மாணவர்களுக்கும் பரிமாறப்பட்டது. சத்தமில்லாமல் ஒரு சமத்துவப் புரட்சியும் நடந்தேறியது.
எதிர்நின்ற சவால்
பள்ளிக்கூடத்தில் உள்ள அனைத்து ஏழைக் குழந்தைகளுக்கும் உணவு அளிக்கும் சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்ட சில ஆண்டுகளிலேயே நிதிநெருக்கடியைச் சந்தித்தது. 1982-83ல் தமிழக அரசின் மொத்த வரி வருமானம் ரூ.844 கோடி. அதில் ரூ.140 கோடி சத்துணவுத் திட்டத்துக்காகச் செலவானது. சத்துணவுத் திட்டம் தொடருமா இல்லை நிறுத்தப்படுமா என்ற கேள்வியெழுந்தபோதுதான் எம்ஜிஆர் அந்த முடிவை எடுக்கத் துணிந்தார். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுவகைகளைத் தனியுரிமையாக்கினார். டாஸ்மாக் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தைத் தொடங்கி, அதன் வாயிலாக மது விற்பனையிலிருந்து வருமானம் கிடைக்கச்செய்தார்.
திமுகவிலிருந்து பிரிந்து அதிமுகவைத் தொடங்கியபோது எம்ஜிஆர் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் ஒன்று, திமுக மதுவிலக்கைக் கைவிட்டுவிட்டது என்பது. மதுவிலக்குப் பிரசாரத்துக்காகத் தன்னைப் பயன்படுத்திக்கொண்டு கடைசியில் அந்தக் கொள்கையைக் கைவிட்டுவிட்டார்களே என்ற வருத்தம் அவருக்கு இருந்தது. அந்த எம்ஜிஆர்தான் மதிய உணவுத் திட்டத்துக்காக வேறுவழியேயின்றி, அதிகாரிகளின் ஆலோசனையை ஏற்று கலால் வரி மூலமாகக் கிடைக்கும் வருமானத்துக்காக டாஸ்மாக் நிறுவனத்தைத் தொடங்கினார். இன்று நீதிமன்றங்கள், சாலையோரங்களில் மதுக் கடைகளை மூடுங்கள் என்று உத்தரவிட்ட பிறகும் தொடர்ந்து கடைகளைத் திறந்துகொண்டே இருக்கிறது தமிழக அரசு. ஆனால், எந்த நோக்கத்துக்காக டாஸ்மாக் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கத்தையே அரசு மறந்துவிட்டது.
பள்ளிக்கூடங்களில் படிக்கிற மாணவர்களுக்கு மட்டும் சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவரவில்லை எம்ஜிஆர். இரண்டு முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளும் அந்தப் பயனைப் பெற வேண்டும் என்பதற்காக அங்கன்வாடிகளையும் திறந்தார். இந்தத் திட்டத்தில் அவர் தீவிரக் கவனம் எடுத்துக்கொண்டதற்குக் காரணம், பசி என்றால் என்ன என்பதன் முழு அர்த்தமும் அவருக்குத் தெரியும் என்பதுதான். 1977-ல் முதல்வரானதும் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் எம்ஜிஆர் கேட்ட முதல் கேள்வி, ‘இங்கிருப்பவர்களில் யாரேனும் இளம்வயதில் பட்டினியை அனுபவித்திருக்கிறீர்களா?’ என்பதுதான். ‘நான், பசித்த வயிற்றுக்குச் சொந்தக்காரன்’ என்ற சுயஅறிமுகத்தோடுதான் அவர் பேசத் தொடங்கினார். எம்ஜிஆரின் அரசியல் பார்வையையே இந்த ஒற்றை வாக்கியத்துக்குள் சுருக்கிவிட முடியும். திமுககாரர்கள் அவர்களது தலைவர் எழுதிய ‘நெஞ்சுக்கு நீதி’யைப் பாட நூலாகவே மதிக்கிறார்கள். அதிமுகவினர் அப்படி, ‘நான் ஏன் பிறந்தேன்?’ புத்தகத்தைப் படித்திருப்பார்களா என்று தெரியவில்லை. எம்ஜிஆர் நடித்த சினிமாக்களில் இல்லை - அந்த சுயசரிதையில்தான் அவரின் உண்மை முகம் இருக்கிறது. பசியெனும் கொடும்நெருப்பின் தீச்சுவாலைகள் வாசகனையும் சுட்டுப்பார்க்கும்.
ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம்
ஜெயலலிதா ஆட்சி என்று வார்த்தைக்கு வார்த்தை அவரது புகழ்பாடுகிறார்கள் அதிமுக அமைச்சர்கள்! அந்த ஜெயலலிதா அரசியலில் அடியெடுத்து வைத்ததே, சத்துணவுத் திட்டத்தின் வாயிலாகத்தான். சத்துணவு திட்டத்துக்காகக் கூடுதல் நிதி தேவைப்பட்டபோது திரைத்துறையினரும் நன்கொடை வழங்கினார்கள். ஜெயலலிதா, நாற்பதாயிரம் ரூபாய் வழங்கினார். சத்துணவுத் திட்டத்தைப் பிரபலப்படுத்துவதற்காக ஜெயலலிதாவை எம்ஜிஆர் தேர்ந்தெடுத்தது அதன் பிறகுதான்.
அதிமுக சார்பாக சத்துணவு பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா, ஆர்வமிகுதியால் மதுரை மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் சத்துணவு மையத்தை ஆய்வுசெய்தார். அரசுப் பதவியில் இல்லாத ஒருவர் எப்படி பள்ளிக்கூடத்தில் சோதனையிட முடியும் என்று கேள்விகள் எழுந்தன. உடனே ஜெயலலிதாவை சத்துணவுத் திட்ட உயர்நிலைக் குழு உறுப்பினராக அறிவித்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் எம்ஜிஆர். அதுதான் ஜெயலலிதா பொறுப்பு வகித்த முதல் பதவி.
எம்ஜிஆருக்குப் பிறகு கருணாநிதியும் ஜெயலலிதாவும் சத்துணவுத் திட்டத்தை மென்மேலும் வளர்த்தெடுத்தார்கள். 1989, 1996, 2006 என்று முதல்வராகப் பொறுப்பேற்ற ஒவ்வொரு முறையும் சத்துணவுத் திட்டத்தை மேம்படுத்தினார் கருணாநிதி. வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டைகள் வழங்கவும், முட்டையை விரும்பாத மாணவர்களுக்கு வாழைப்பழம் மற்றும் சத்து மாவு வழங்கவும் உத்தரவிட்டவர் கருணாநிதி.
இன்னும் தேவையிருக்கிறது
எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் 17,000 சத்துணவு மையங்கள் திறக்கப்பட்டன. 60 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயனடைந்தார்கள். இன்று 43,205 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 51 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். சத்துணவு மையங்கள் அதிகரித்திருக்கின்றன. பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துவருகின்றன. ஆனால், இன்னும் சத்துணவுத் திட்டத்துக்கான தேவை இருக்கிறது.
பழனிசாமி தலைமையிலான தமிழக அரசால் சமீபத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 3,894 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இப்போது, 8,000 சத்துணவு மையங்கள் மூடப்பட இருக்கின்றன. போதுமான மாணவர்கள் இல்லை என்பது ஆசிரியர் பணியிடங்கள் நீக்கத்துக்குக் காரணமாகவும் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்பது சத்துணவு மையங்களை மூடுவதற்கான காரணமாகவும் சொல்லப்படுகின்றன. கல்வித் துறை தனியார்மயமாகிவரும் சூழலில், அடித்தட்டு மக்கள் கல்வி பெறுவதற்கான கடைசி வாய்ப்பையும் பறிக்கும் முயற்சிகள் இவை.
‘‘சத்துணவுத் திட்டத்துக்குப் போதுமான நிதியில்லை என்றால் பிச்சையெடுக்கவும் தயாராக இருக்கிறேன்’’ என்றார் எம்ஜிஆர். காமராஜர் அதைத்தான் செய்தார். தமிழக அரசு நிதிநெருக்கடியில் தத்தளிக்கிறது என்பது தெரிந்த விஷயம்தான். அதற்காக சத்துணவுத் திட்டத்தில் கை வைப்பது தவறான முடிவு. காமராஜரைப் போல, எம்ஜிஆரைப் போல நீங்களும் கையேந்தத் தயாராகுங்கள் முதல்வரே, பசித்த வயிறுகள் உங்களை வாழ்த்தும், வரலாறு போற்றும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT