Last Updated : 05 Dec, 2018 09:42 AM

 

Published : 05 Dec 2018 09:42 AM
Last Updated : 05 Dec 2018 09:42 AM

காந்தி 150: காந்தியின் முதல் வழக்கு!

“மிஸ்டர் காந்தி, எழுந்து நின்று பேசாமல் இருந்தால் எப்படி? உங்கள் தரப்புக்கு வக்காலத்து வாங்குங்கள்?” என்று நீதிபதி கேட்க, உலகமே சுற்றுவதுபோல் தோன்றியது காந்திக்கு.

இங்கிலாந்துக்குப் போய் பாரிஸ்டர் படிப்பு படித்துவிட்டு இந்தியாவுக்கு வந்த காந்திக்கு நடை முறைக்குள் நுழையும்போது, அதுவும் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் தனக்குக் கிடைத்த முதல் வழக்கில் வாதாடப்போகும்போது, அவருடைய கூடப்பிறந்த பண்புகளான அவைக் கூச்சமும் தயக்கமும் வாயைத் திறக்கவிடாமல் செய்தன. இதுதான் லண்டன் போய்ப் படித்த லட்சணமா என்று கேட்பதைப் போல் இருந்தது நீதிபதியின் சிரிப்பும் சூழ்ந்திருந்த வழக்கறிஞர்களின் சிரிப்பும்.

இந்தியாவுக்கு காந்தி திரும்பியபோது அவர் எதிர்பாராத அதிர்ச்சிகள் வரிசையாகக் காத்திருந்தன. அவற்றில் மிக மோசமானது, அவரது தாயின் மரணம். பம்பாய் துறைமுகத்திலிருந்து காந்தியை அழைத்துச்செல்ல வந்திருந்த அவரது அண்ணன் லட்சுமிதாஸ், காந்தியின் நண்பரான பிரஜீவன் மேத்தாவின் வீட்டுக்குச் செல்லும் வழியில்தான் அந்தத் தகவலை காந்தியிடம் பகிர்ந்துகொண்டார்.

காந்தி லண்டனில் இருந்தபோது, சில மாதங்களுக்கும் முன்னதாக, நிகழ்ந்த மரணம் அது. காந்தியின் படிப்பு நின்றுவிடக் கூடாது என்பதற்காக அந்தத் தகவலை அவரிடம் அவரது அண்ணன் பகிர்ந்துகொள்ளவில்லை. தாயிடம் கொடுத்திருந்த சத்தியங்களைத் தான் வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டதை அவரிடம் மகிழ்ச்சியுடன் தெரிவிக்க வேண்டும் என்ற நினைப்பில் இருந்த காந்திக்கு உலகமே இடிந்து தலையில் விழுந்ததைப் போல் இருந்தது, தாயின் மரணச் செய்தியைக் கேட்டபோது.

தாயின் இழப்பால் இடிந்துபோயிருந்த காந்தியைத் தேற்றும் பொறுப்பை அவரது நண்பர் பிரஜீவன் மேத்தா, தனது உறவினரும் நகை வியாபாரியும் சமண மத இளம் ஞானியுமான ராய்சந்திடம் ஒப்படைத்திருந்தார். ராய்சந்த் காந்தியைவிட இரண்டு வயதே மூத்தவர். என்றாலும் காந்தியின் வழிகாட்டிகளுள் முதன்மையானவராக மாறினார். சதாவதானியாகவும் கவிஞராகவும் புகழ்பெற்றிருந்த ராய்சந்த் காந்தியைத் தனது சதாவதானத் திறமைகளால் தேற்றினார்.

எல்லாவற்றையும்விட சமணம், துறவு போன்ற விஷயங்களில் காந்தியின் மனதில் ஆழமான தாக்கத்தை ராய்சந்த் ஏற்படுத்தினார். சமணம் என்றாலே பிராணிகள் நலன், துறவு போன்ற விஷயங்களில் குறுகிவிடக் கூடாது என்றார் ராய்சந்த். மணவாழ்க்கையில் ஈடுபட்டுக்கொண்டே ஒருவர் துறவியாகவும் இருக்க முடியும் என்றார் அவர்.

காந்தி மீது அவரது சாதிக் குழுவினர் கொண்டிருந்த கோபம் இன்னும் மாறவில்லை. அவர்களின் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்று காந்தியைச் சில சடங்குகளுக்கு அவரது அண்ணன் உட்படுத்தினார். ஆனால், காந்திக்கு அதிலெல்லாம் உடன்பாடில்லை. என்றாலும், தன்னைப் படிக்கவைத்த அண்ணனின் மனம் கோணக் கூடாது என்பதற்காக வேண்டாவெறுப்பாக அந்தச் சடங்குகளைச் செய்தார். இது குறித்து ‘சத்திய சோதனை’யில் இப்படி எழுதுகிறார்:  ‘என்னைச் சாதியில் சேர்த்துக்கொள்ள மறுத்த கட்சியினரிடம் என்னைச் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக நான் முயலவே இல்லை.’

இந்தச் சூழலில்தான் பம்பாய் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினால் நிறைய அனுபவம் கிடைக்கும் என்று குடும்பத்தை விட்டுவிட்டு பம்பாய் செல்கிறார் காந்தி. அங்கே, தனக்கென்று ஒரு வீடு பார்த்துக்கொண்டு, சமைக்கவே தெரியாத, சுத்தபத்தமாக இல்லாத ஒரு பிராமண சமையல்காரரை வேலைக்கு வைத்துக்கொள்கிறார். இதனால் மாதாந்திரச் செலவு கையைக் கடித்தாலும் இங்கிலாந்தில் தொற்றிக்கொண்ட நடைப்பழக்கம் அவருக்கு ஒருவகையில் செலவைக் குறைத்தது.

அவரது இருப்பிடத்திலிருந்து நீதிமன்றத்துக்கு தினமும் நடந்தே சென்றுவிடுவார். காலையில் 45 நிமிடம், மாலையில் 45 நிமிடம். மழை, வெயில் என்று எது வந்தாலும் பொருட்படுத்தாமல் நடந்துவிடுவார். அவரது சகாக்களெல்லாம் உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டாலும் காந்திக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் ஏற்படாது. அதற்கு நடையையே காரணமாக காந்தி கருதினார்.

நீதிமன்றம் சென்றாலும் அவரால் நீதிமன்ற விவகாரங்களில் ஒன்ற முடியவில்லை. அவரது படிப்பு ஏட்டுச்சுரைக்காயாகத்தான் இருந்தது. வழக்குகளும் வரவில்லை. அப்படியே வந்தாலும் அதற்கென்று தரகு கொடுத்தாக வேண்டும். வழக்குகளைப் பெறுவதற்குத் தரகு ஏதும் தான் தர மாட்டேன் என்று காந்தி மறுத்துவிடுகிறார். அப்படியிருந்தும் ஒரு சாதாரண கேஸ் அவருக்கு வருகிறது. அந்த கேஸில் ஆஜராகும்போதுதான் அவரால் வாயைக் கூடத் திறக்க முடியாத அளவுக்குத் தயக்கம் அவரை முடக்கிப்போடுகிறது.

 வெட்கம் பிடுங்கித் தின்ன, வேறு ஒரு நல்ல வழக்கறிஞரைப் பார்த்துக்கொள்ளும்படி தன் கட்சிக்காரருக்கு அறிவுறுத்துகிறார். பம்பாயில் ஒரு வழக்கறிஞராக அவரது வரலாறு இவ்வளவுதான். இப்படிப்பட்ட ‘திறமை’யுடன் பம்பாயில் காலம் தள்ள முடியாது என்று ராஜ்கோட்டுக்குக் குடிமாறுகிறார்.

அங்கு மனு எழுதிக்கொடுப்பதில் அவருக்குச் சொற்ப வருமானம் கிடைக்கிறது. அந்தச் சமயத்தில் அவரது அண்ணனுக்கு கத்தியவார் சமஸ்தானத்தில் ஒரு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. அதைத் தீர்த்துவைப்பதில் தன்னுடைய பாரிஸ்டர் தம்பியின் உதவியை நாடினார். காந்தி இங்கிலாந்தில் இருக்கும்போது சந்தித்த ஒரு ஆங்கிலேயர்தான் கத்தியவார் சமஸ்தானத்தின் அரசியல் முகவராக இருந்தார்.

அவரைச் சந்தித்துத் தன்னைப் பற்றி எடுத்துக்கூறும்படி லட்சுமிதாஸ் வலியுறுத்தினார். இப்படியெல்லாம் சிபாரிசுக்குப் போய் நிற்பதில் காந்திக்கு உடன்பாடில்லை. அவர் அண்ணன் தொடர்ந்து வலியுறுத்தவே வேறு வழியில்லாமல் அந்த ஆங்கிலேய அதிகாரியைச் சந்திக்கச் சென்றார் காந்தி. அதிகாரியோ காந்தியை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டார். அந்த அவமானம் காந்தியின் மனதில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான் காந்தியின் சொந்த ஊரான போர்பந்தரைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் வணிகரின் வழக்குக்காக தென்னாப்பிரிக்கா செல்வதற்கான வாய்ப்பு காந்திக்கு வந்தது. குஜராத்தியும் ஆங்கிலமும் தெரிந்த வழக்கறிஞர் தேவை என்பதால் காந்தியை அணுகினார்கள். தாயை இழந்தது, சிக்கலான அரசியலில் பிழைக்கத் தெரியாமல் இருந்தது, அண்ணனுக்கு உதவவும் முடியாமல் இருந்தது, ஆங்கிலேய அதிகாரியால் அவமானப்படுத்தப்பட்டது என்று எல்லாமும் சேர்ந்து காந்தியை தென்னாப்பிரிக்காவை நோக்கி உந்தித்தள்ளின.

காந்தியின் தந்தை இறந்திராவிட்டால் காந்தியால் லண்டன் சென்றிருக்க முடியாது; ஆங்கிலேய அதிகாரி காந்தியை அவமானப்படுத்தாவிட்டால் காந்தி தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருக்க மாட்டார்; நாம் அறிந்திருக்கும் காந்தி நமக்குக் கிடைத்திருக்கவும் மாட்டார். வரலாற்றுப் பெருங்கதியில் நாம் அவ்வளவாகப் பொருட்படுத்தாத விஷயங்கள்தான் பொருட்படுத்தப்படும் ஆளுமைகளை நமக்குத் தருகின்றன. காந்தி, காந்தியானதன் பின்னணியில் இவ்வளவு இருக்கிறது.

(காந்தியைப் பேசுவோம்...)

- ஆசை,

தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x