Published : 20 Dec 2018 09:11 AM
Last Updated : 20 Dec 2018 09:11 AM
தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டிய மருத்துவ ஆளுமைகளில் ஒருவர் அவர். ஆனால், மருத்துவர் ஹரி சீனிவாசன் என்ற பெயர் தமிழ்நாட்டில் பரிச்சயமான பெயர் அல்ல. அவருடைய மற்றொரு பரிமாணமான ‘எழுத்தாளர் சார்வாகன்’ அறியப்பட்டிருந்த அளவுக்குக்கூட ஹரி சீனிவாசனின் மருத்துவ சேவை வெளிச்சத்துக்கு வந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், அவருடைய சொந்த ஊரான, ஆரணியின் மக்களுக்குக்கூட அவருடைய அருமை பெருமைகள் தெரியாது. சார்வாகனின் எழுத்துகளைப் படித்த வாசகர்களிலும் பெரும்பாலானோருக்கு அவர் ஒரு மருத்துவர் என்ற விவரம் தெரியாது.
யார் இந்த ஹரி சீனிவாசன்?
சரி, யார் இந்த ஹரி சீனிவாசன்? மருத்துவர் ஹரி சீனிவாசன் அப்படி என்ன செய்துவிட்டார்? இந்த விநோத மனிதர் கிட்டத்தட்ட 65 ஆண்டுகளைத் தொழுநோய் சிகிச்சைக்காக அர்ப்பணித்திருந்தவர். உலகின் தலைசிறந்த கை, கால் விரல்கள் சீரமைப்பு அறுவைச் சிகிச்சை வல்லுநராகத் திகழ்ந்தவர். தொழுநோயிலிருந்து குணமடைந்த பின்னரும் மடங்கிய விரல்கள் நேராகாமல், உணர்ச்சி திரும்பாமல், செயலற்ற நிலையில் இருக்கும் விரல்களுக்கு அவர் கண்டுபிடித்த அறுவைச் சிகிச்சை முறை பலருக்குப் புத்துயிர் கொடுத்து இயங்க வைத்தது.
இப்புதிய கர சீரமைப்பு அறுவைச் சிகிச்சை முறைக்கு ஐநா சபையின் அங்கமான உலக சுகாதார அமைப்பு ‘சீனிவாசன் முறை’ (SRINIVASAN TECHNIQUE) என்று அவரது பெயரையே சூட்டியது. உலக சுகாதார மையத்தின் சார்பாக உலகெங்கும் தொழுநோய் அறுவைச் சிகிச்சை முகாம்கள் நடத்தி ஆயிரக்கணக்கானவர்களின் தொழுநோய்க் கறைகளைத் துடைத்தழித்தவர் ஹரி சீனிவாசன்.
இளமைக் காலம்
ஹரி சீனிவாசன் (1929-2015) அன்றைய வடாற்காடு மாவட்டத்தில் ஆரணி நகரில் பள்ளியிறுதி வரை முடித்துவிட்டு, சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். பிறகு, இங்கிலாந்தில் இரண்டு எஃப்ஆர்சிஎஸ் (FRCS) பட்டங்களை முடித்தார். இரட்டை எஃப்ஆர்சிஎஸ் பட்டங்களுடன் ஓர் அறுவைச் சிகிச்சை மருத்துவர் வெளிநாட்டு மருத்துவமனைகளில் பணியாற்றச் சென்றிருந்தால் கோடிக்கணக்கில் பணம் ஈட்டியிருக்க முடியும். ஆனால், சென்னையில் மருத்துவம் பயின்றுகொண்டிருந்தபோதே அவருக்குச் சில தீர்மானங்கள் ஏற்பட்டிருந்தன.
அவருடைய திட்டங்கள் தெளிவாக இருந்தன. முதலாவது, இந்தியாவில் மட்டுமே பணிபுரிவது. இரண்டாவது, மிக முக்கியமானது. மருத்துவம் என்பது சேவை. சிகிச்சைக்காக நோயாளியிடம் பணம் வாங்கக் கூடாது. அரசுப் பணியில் கிடைக்கும் ஊதியத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும். இந்த இரண்டு தீர்மானங்களையும் அவரால் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க முடிந்தது வியப்பானதல்ல. அதற்குரிய பின்னணியும் அவருக்கு இருந்தது.
காந்திய – கம்யூனிஸக் கலவை
ஹரி சீனிவாசனின் தந்தை மருத்துவர் ஹரிஹரன், ஆரணியின் முதல் ஆங்கில மருத்துவர். சீரிய காந்தியவாதி. ஹரி சீனிவாசனும் காந்தியால் ஈர்க்கப்பட்டவர், மார்க்ஸால் செழுமையடைந்தவர். இங்கிலாந்தில் படிக்கும்போது அவர் வாசித்த கம்யூனிஸ நூல்களால் ஈர்க்கப்பட்டு, பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில் (CPGB) உறுப்பினராகவும் சேர்ந்திருக்கிறார் ஹரி சீனிவாசன். தன்னுடைய தாய்வழிப் பாட்டனாரிடம் கற்றறிந்துகொண்ட இந்தியத் தத்துவ மரபுகளோடு காந்தியமும் கம்யூனிஸமும் ஒன்றுகலந்து அவருடைய ஆளுமையை வடிவமைத்திருக்கின்றன.
இந்தியா திரும்பிய ஹரி சீனிவாசன் முதலில் முட நீக்கியல் வல்லுநராகவே தனது பணியைத் தொடங்கியிருக்கிறார். 1960-ல் மங்களூர் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் பணியாற்றும்போது தொழுநோயிலிருந்து மீண்ட அப்துல்லா என்பவரின் கரங்களில் ஒரு பிரத்யேக முறையில் முயன்ற சீரமைப்பு அறுவைச் சிகிச்சை வியக்கத்தக்க வெற்றியைக் கண்டது. அதுதான் ‘சீனிவாசன் முறை’ என்று பின்னர் புகழ்பெற்றது. இக்கண்டுபிடிப்புக்குப் பிறகு, செங்கல்பட்டு தொழுநோய் மருத்துவமனையில் பணிக்குச் சேர்ந்து, அதன் இயக்குநராக உயர்ந்து 1984-ல் அவர் பணி ஓய்வுபெற்றார்.
அதன் பிறகு, பல்வேறு நாடுகளின் மருத்துவக் கழகங்களிலும், உலக சுகாதார அமைப்பின் சார்பாக வருகைதரு பேராசிரியராகவும், எண்ணற்ற மருத்துவ முகாம்களை நெறிப்படுத்துபவராகவும் பணியாற்றிவிட்டு, தனது எண்பதாவது வயதில் முழுமையாக ஓய்வெடுத்துக்கொண்டு பெங்களூருவிலும் சென்னையிலும் தன் இரு புதல்வியரோடு வசித்து வந்தவர், சென்னையில் 2015 டிசம்பர் 21-ல் அர்த்தம் மிகுந்த தன் வாழ்வை நிறைவு செய்துகொண்டார்.
எழுத்தாளரும் மருத்துவரும்
சார்வாகன் என்ற புனைபெயரில் கணிசமான சிறுகதைகளை எழுதி, நவீனத் தமிழிலக்கியத்துக்கு வளம் சேர்த்த இவர் சுயசரிதையை எழுதவில்லை என்பது நமக்கு ஒரு பேரிழப்பு. ஒரு ஆச்சரியம் என்னவென்றால், சார்வாகனின் எந்தவொரு கதையிலும் தொழுநோயாளர்களோ, அவர்களுடனான அனுபவங்களோ வந்ததில்லை. இதைப் பற்றி ஒரு நேர்காணலில் கேட்கப்பட்டபோது அவர் சொன்ன பதில்: “அவர்கள் என்னை நம்பிச் சொன்ன அந்தரங்கங்களை நான் எப்படிப் பகிரங்கப்படுத்துவேன்? எனக்கு எழுத வெளியே நிறைய கதைகள் இருக்கின்றன.”
பெரும் செல்வம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உதறித் தள்ளிவிட்டு, தொழுநோய் சிகிச்சைக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டதைப் பற்றி அவரிடம் வாழ்நாள் முழுக்கப் பல தரப்பிலிருந்தும் கேள்விகள் எழுப்பப்பட்டு வந்திருக்கின்றன. அவற்றிற்குப் பதில் அளிக்கும் விதமாக மருத்துவர்களுக்கான தனிச்சுற்று ஆங்கில இதழ் ஒன்றில் தனது வாழ்நாளின் இறுதியில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். தன்னுடைய ஆரம்ப கால ஆர்வங்கள், லட்சியங்கள், மருத்துவக் கல்லூரி அனுபவங்கள், பணியாற்றிய பல்வேறு மருத்துவமனை அனுபவங்கள், பொருளீட்டல் குறித்த அவரது பார்வை என விரிந்த அக்கட்டுரையில் அவர் சொல்கிறார்.
எழுத்தாளர் சொற்களில் மருத்துவர் வாழ்க்கை
“மருத்துவ மேற்படிப்பு மாணவன் ஒருவன் என்னிடம் ‘மற்ற எல்லாத் துறைகளையும் விடுத்து இந்தத் தொழுநோய் மீது ஏன் இவ்வளவு பிரியம்?” என்று கேட்டான். “பிரியமா? உலகத்திலேயே நான் அதிகம் வெறுப்பது தொழுநோயைத்தான். அதனால்தான் அதை ஒழிக்க வேண்டும் என்று இத்துறையைத் தேர்ந்தெடுத்தேன்.”
“மங்களூரில் பணியாற்றும்போதுதான் யதேச்சையாக தொழுநோய் சிகிச்சையின்பால் என் கவனம் திரும்பியது. தொழுநோயிலிருந்து குணமான ஒருவரை சக மருத்துவர் அழைத்து வந்து மடங்கிப்போன அவர் விரல்களைச் சரியாக்க இயலுமா என்று கேட்டார். இவ்வகை சீரமைப்பு அறுவைச் சிகிச்சைகளைச் செய்துவந்த ஆங்கிலேய மருத்துவர் ஒருவர், இங்கிலாந்தில் என் கல்லூரியில் பணிபுரிந்துவந்தார்.
அவரைத் தொடர்புகொண்டு அந்தச் சிகிச்சை முறை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை வாங்கிப் படித்தேன். அந்த அறுவைச் சிகிச்சை முறையினால் விரல்களை நேராக்க முடியுமே தவிர, செயலாற்றலைத் திரும்ப வரவழைப்பதாக இல்லை. எனவே, நரம்பு மண்டலம், எலும்புகளை ஒருங்கிணைத்து ஒரு புதிய அறுவைச் சிகிச்சை முறையை முயன்று பார்த்தேன்.
மிகவும் சிக்கலான செயல்முறைகளைக்கொண்ட சிகிச்சை அது. அதிர்ஷ்டவசமாக அது வெற்றிகரமாக அமைந்துவிட்டது. மருத்துவராக என் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகெங்கும் லட்சக்கணக்கான தொழுநோயாளிகளின் வாழ்க்கையையும் இந்தக் கண்டுபிடிப்பு மாற்றப்போகிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை. இந்த அறுவைச் சிகிச்சை முறைக்கு என்னுடைய பெயரையே டபிள்யுஹெச்ஓ (WHO) சூட்டுமென்றும் எதிர்பார்க்கவில்லை.”
“என் வாழ்க்கையின் உன்னதமான தருணம் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரமோ, சர்வதேச மகாத்மா காந்தி விருதோ, பத்மஸ்ரீ விருதோ அல்ல. பல வருடங்களாகத் தன்னுடைய குடும்பத்தினராலேயே ஒதுக்கிவைக்கப்பட்டிருந்த தொழுநோயாளிப் பெண்மணி ஒருவர், என்னுடைய அறுவைச் சிகிச்சை மூலம் குணமான பிறகு, தன் கையால் பின்னிய ஒரு பூத்தையல் மேசை விரிப்பைப் பரிசளித்தார். நான் போற்றிப் பாதுகாக்கும் மிகவும் மகத்தான பரிசு அதுதான்!”
“1980-களில் பிரேஸில் நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த மனாவ்ஸ் என்ற சிற்றூருக்கு டபிள்யுஹெச்ஓ குழுவோடு சென்றிருந்தேன். அங்கே தொழுநோய் மருத்துவமனை ஒன்று இருந்தது. அங்கிருந்த நோயாளிகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்தபோது, மருத்துவர் ஒருவர் தொலைவில் நின்றிருந்த ஒரு பெண்மணியைச் சுட்டிக்காட்டி, ‘அவர் உங்களைப் பார்க்க வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கிறார்’ என்றார்.
‘இங்கிருப்பவர்களுக்கு உங்களுடைய அறுவைச் சிகிச்சை மூலமாகத்தான் சிகிச்சையளிக்கிறோம். பத்து வருடங்களாகச் செயலிழந்திருந்த இந்தப் பெண்ணின் கை,கால்கள் சிகிச்சைக்குப் பிறகு சரியாகியிருக்கின்றன. அதற்குக் காரணமான உங்களுக்கு அவர் நன்றி சொல்ல வேண்டுமாம்’ என்றார்.
அந்தப் பெண்ணிடம் சென்றேன். நான் அருகில் வந்ததும் அந்தப் பெண்ணுக்குச் சன்னதம் பிடித்ததைப் போல ஆகிவிட்டது. எனக்குச் சற்றும் புரியாத போர்ச்சுகீசிய மொழியில் என்னென்னவோ பேசினார், கை,கால்களை ஆட்டிக்காட்டினார், என்னைக் கட்டிப்பிடித்தார், என் உடம்பு முழுக்கத் தடவிக்கொடுத்தபடி பாதி அழுகையும் பாதி சிரிப்புமாக ஏதேதோ பிதற்றினார். தென்னிந்தியாவில் ஏதோவொரு மூலையில், ஆரணி என்ற சிற்றூரில் வளர்ந்த ஒருவனிடம், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலுள்ள கண்டத்தில் வசிக்கும் பெண்மணி ஒருவர் தனது வாழ்க்கையை மீட்டெடுத்துத் தந்துவிட்டதாகச் சொல்லி ஆனந்தக் கூத்தாடி நெகிழ்ந்துகொண்டிருக்கிறார். இதைவிடப் பெரிய விருது எனக்கென்ன வேண்டும்? நான் சரியான வாழ்க்கையைத்தான் வாழ்ந்திருக்கிறேன் என்று அப்போதுதான் உணர்ந்தேன்.”
சுயநலமற்ற சேவைக்கான உதாரணம்
காந்தி தொழுநோயாளிகளைப் பற்றி சொன்ன வார்த்தைகளோடு ஹரி சீனிவாசனின் வார்த்தைகளைப் பொருத்திப்பார்த்தால், அவருடைய பணி எவ்வளவு பெரிய சேவை என்பது விளங்கும். “தொழுநோயாளர்களுக்குச் சேவை புரிவதென்பது வெறும் மருத்துவ உதவி மட்டுமல்ல. அது வாழ்க்கையின் மீதிருந்த விரக்தியை அர்ப்பணிப்போடும் மகிழ்ச்சியோடும் புரிகின்ற சேவையாக மாற்றுவது; தனிப்பட்ட குறிக்கோள்களைச் சுயநலமில்லாத சேவையாக மாற்றுவது.”
காந்தி ஒருவேளை இன்னும் கொஞ்ச காலம் கூடுதலாக வாழ்ந்திருந்தால், தனது சொற்களின் மனித வடிவை நேரில் கண்டிருப்பார். நிச்சயம் அதன் பெயர் ஹரி சீனிவாசன் என்றே இருந்திருக்கும்!
- ஜி.குப்புசாமி, மொழிபெயர்ப்பாளர்,
தொடர்புக்கு: gkuppuswamy62@yahoo.com
டிசம்பர் - 21 ஹரி சீனிவாசன் நினைவுநாள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT